வலைப்பதிவுகள்

சொந்த ஊருக்குச் செல்லும்போது எங்கள் பக்கத்து வீட்டிலிருப்பவர்களையும் சென்று சந்திப்பது வழக்கம். அன்றும் வீட்டிலிருந்த மரத்தில் காய்த்த எலுமிச்சை பழங்களோடு நானும் மகளும் சென்றோம். இரு வீடுகளுக்கும் நாற்பது அடி தொலைவிருக்கும்.

அவர்கள் புதிதாக நாய் வாங்கியிருப்பதால் கேட்டுக்கு வெளியே நின்று கூப்பிடுங்கள். அவர்களே வந்து உள்ளே அழைத்துச் செல்லட்டும் என்று வீட்டில் சொல்லியனுப்பினார்கள். பக்கத்து வீட்டின் கேட்டுக்கு முன் நின்று, “பாட்டி, பாட்டி” என்று எனக்கு மட்டும் கேட்கும்படி கத்தினாள் மகள். உர்ர்ர்ர்ர்ர்ர் என்று எங்களுக்கு மட்டும் கேட்குமளவு சத்தத்தோடு அவர்களது நாய் கேட்டின் உள்புறம் வந்து நின்றது.

நேருக்கு நேராக முதல் சந்திப்பு. என் மகள் உயரத்துக்கு இருந்தது அந்த கருப்பு நிற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய். கால்களும் காதுகளின் உள்புறமும் மட்டும் பிரௌன் நிறம். காதுகளை உயர்த்தி, அசையாமல் நின்று எங்களையேப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் கண்களில் தெரிந்த ஒளி, அது கருணையா, கொடூரத்துக்கு முன் நிதானிக்கும் சிந்தனையா என்று எனக்குப் புரியவில்லை. என் கண்களில் அப்பட்டமாகப் பயம் தெரிந்தது. அதுவும் கவனித்திருக்கும் போல. சத்தம் போடாமல் ஆனால் இடத்தைவிட்டு அசையாமல் நின்றது. அதை மீறி வாயைத் திறந்து உள்ளிருக்கும் பாட்டியைக் கூப்பிட முடியவில்லை. திரும்ப வீட்டுக்குச் செல்வதே புத்திசாலித்தனம். உயிரைவிடப் பக்கத்து வீட்டுப் பாட்டியா முக்கியம்?

முதலில் அதன் பார்வையிலிருந்து தப்பித்து கேட்டிலிருந்து திரும்ப வேண்டும். பிறகு ஒன்றுமே நடக்காததைப் போல சத்தமெழுப்பாமல் மெதுவாக நடந்து எங்கள் வீட்டை அடைந்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் எங்கள் பதட்டம் அது தவறான முடிவெடுக்கும்படி செய்துவிடக் கூடாது. அந்த நாற்பதடியை உயிருடன் கடப்பதற்கான எனது திட்டம் இது.

காற்று புகுமளவு மட்டும் உதடுகளைத் திறந்து, மேலும் கீழுமுள்ள பற்களை ஒன்றாகச் சேர்த்து, நாக்கை மட்டும் அசைப்பதால் வரும் சத்தத்தில் மகளிடம் இதைச் சொல்ல வேண்டும். நான் பேசவில்லை என்று நாயை நம்ப வைக்க வேண்டும். எங்களுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் அமைதி ஒப்பந்தத்தை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திட்டத்தைச் செயல்படுத்தினேன். சொல்லி முடித்த பின்னும் மறுமொழி வரவில்லை. சரி, அவளும் என்னைப் போலவே தைரியசாலி. பதில் பேசாமல் புரிந்துகொண்டாள் என்று நினைத்தேன். முதலில் திரும்ப வேண்டும், பிறகு மெதுவாக நடக்க வேண்டும். இரண்டையும் செய்து முடித்தால் வீடு சேர்ந்துவிடலாம். திரும்பினேன். என் பக்கத்தில் நின்றிருந்த மகளைக் காணவில்லை. அவளது சத்தம் மட்டும் கேட்டது. அதுவும் என் திட்டப்படி இல்லாமல், ஊரே கேட்கும்படி கத்திச் சொன்னாள்.

“அம்மா, சீக்கிரமா நடந்து நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. பாட்டியை அப்பறமா பாத்துக்கலாம்.” எங்கள் வீட்டு போர்டிகோவில் நின்று கொண்டிருந்தாள் மகள். என் திட்டத்தை அவள் கேட்கவே இல்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன