வலைப்பதிவுகள்

கொளுத்தும் வெயிலுக்குக் காரசாரமான உணவுகள் வீட்டில் சண்டையைத் தான் அதிகப்படுத்தும். சமாதான தூதுவிட இனிப்புகள் என்றுமே கைகொடுக்கும். முக்கியமாக, குழந்தைகளைக் கவர உள்ளூர் இனிப்புகள் போதாது. சர்வதேச சமையலைத் தான் முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு முழு ரொட்டி நனையுமளவு அகலமான பாத்திரம் ஒன்றில், முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். எத்தனை பேர் இருக்கிறோமோ, அத்தனை முட்டைகள். வெள்ளைச் சர்க்கரை என்றால் பொடித்துச் சேர்க்கலாம். நாட்டுச் சர்க்கரையை அப்படியே சேர்க்கலாம். அளவிலும், செலவிலும் இது கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும். இதோடு பாலும், ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்தால் நறுமணச்சுவையுடன், சர்வதேச சமையலுக்கும் கெத்தாக இருக்கும்.

இனி சூடான தோசைக்கல்லில் வெண்ணெய் தடவ வேண்டும். நீங்களே செய்தால் வீட்டில் சமாதானம் உண்டாகாது. குழந்தைகளையும் சமையலுக்கு அழைக்க வேண்டும். அவர்கள் கையோடு நாமும் கைப்பிடியைப் பிடித்து,  வெண்ணெய் கட்டிக்குத் தோசைக் கல்லைச் சுற்றிக்காட்ட வேண்டும். வீட்டிலிருப்போர் மூக்கெல்லாம் இந்நேரம் சமையலறைக்குப் பறந்து வந்திருக்கும். ஆச்சு, ஆச்சு இன்னும் அஞ்சு நிமிஷத்தில ரெடியாயிரும் என்று சத்தமாக சீன் போட வேண்டும்.   

ஒரு முழு ரொட்டித்துண்டை, குழந்தைகள் கையில் கொடுத்து,  முட்டைக் கலவையில் நனைத்து தோசைக்கல்லில் போட வேண்டும். கல்லில் இடமுள்ள அளவு, ரொட்டித் துண்டுகளை நிரப்பலாம். வெண்ணெய்யும், ஏலக்காயும் ரம்யமாக மூக்கில் நுழையும். ஏமாந்து கண்களை மூடிக்கொள்ளக் கூடாது. வெளிர் மஞ்சள் நிற ரொட்டி, பழுப்பு நிறம் மாறத் தொடங்கும்போது திருப்பிப்போட வேண்டும். மெது மெதுவென இருக்கும் போதே ரொட்டித் துண்டுகளை எடுத்துவிட வேண்டும். தாமதித்தால் ரஸ்க் போல மாற வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு முறை ரொட்டித் துண்டுகளைப் போடுவதற்கு முன்னும், மறக்காமல் வெண்ணெய் கட்டியைச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அவ்வளவுதான், ஃபிரெஞ்சு டோஸ்ட்டை இனித் தட்டில் வைத்துச் சுடச்சுடப் பரிமாறலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. குழந்தைகளையும் கூட்டுச் சேர்த்து சமைத்ததால், சூப்பர், வாவ் போன்ற விமர்சனங்கள் மட்டுமே கிடைப்பது நிச்சயம்.

இந்த முதல்நிலையில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால், அடுத்து உள்ளூர் சமையலுக்கும் வாவ் வாங்க முடியும். இரண்டிற்கும் ஒரே சிலபஸ் தான். செய்முறையில் மட்டும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

முன்னர் செய்தது போலவே, பொடித்த சர்க்கரை, முட்டைக் கலவையில் இனிப்பில்லாத பால்கோவாத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். இதனுடன் ஊறவைத்த பாதாம்களைத் தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும். அங்கு ரொட்டிக்கு வெண்ணெய் என்றால், இங்கு நெய் சேர்க்க வேண்டும். கொஞ்சம் செலவுதான், இருந்தாலும் குடும்ப சமாதானம் வேண்டி, இவற்றுக்கெல்லாம் சேர்த்தே சம்பாரிக்கவும், சேமிக்கவும் வேண்டும்.

இவற்றை கரண்டியையோ, விஸ்கரையோ, கைகளையோப் பயன்படுத்தி, நன்றாகக் கலக்க வேண்டும். சோம்பேறித்தனப்பட்டு மிக்ஸியில் போட்டுவிடக் கூடாது. பிறகு வாவ் அல்ல, பாஸ் மார்க் கூட வாங்க முடியாது. கோதுமை மாவு கரைக்கும்போது உருவாகும் கட்டிகள் போல, இங்கும் பால்கோவாத் துண்டுகளை நன்கு கரைத்துவிட வேண்டும். மைதா போன்ற மாவுப்பொருட்கள் எதுவும் இல்லாத ஆரோக்கியமான கலவை தயார். இதைக்கொண்டு இனி நாம் கேக் செய்யப் போகிறோம்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, முட்டைக் கலவையை சூடுபடுத்த வேண்டும். தண்ணீர் பதத்திலிருந்து இக்கலவை இறுக வேண்டும். பருபருவென்று பால்கோவாவை ஊற்ற முடிகிற பதம் வரும்வரை கரண்டியில் கலக்கியபடியே இருக்க வேண்டும். இங்கும் குழந்தைகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டால், கை வலியிலிருந்து தப்பிக்கலாம். பிறகு அழகான வடிவிலிருக்கும், கண்ணைக்கவரும் பாத்திரத்தில், கீழும், சுற்றிலும் நெய் தடவ வேண்டும். கலவையை இதில் ஊற்றி, சங்கீத் நிகழ்ச்சியில் கல்யாணப் பெண்ணுக்கு மஞ்சள் பூசுவதைப் போல, மீண்டும் மேலே நெய் தடவ மறந்துவிடக் கூடாது.

இனிப்பான நெய் மணம், அப்படியே சாப்பிடலாம் என்றுதான் சொல்லும். இருந்தாலும் கொஞ்சமாக சுவைத்துவிட்டு, பொறுமை காப்பது அவசியம்.  இதை மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி வெப்பம், அரைமணி நேரம் வைக்க வேண்டும். அல்லது குக்கர் / இட்லி பாத்திரத்தில், கேக் செய்யும் அதே முறையில் அரைமணி நேரம் வேக வைக்க வேண்டும்.  நாம் முழு மஞ்சள் நிறத்தில் வைத்த கலவை, பழுப்பு நிறத் தோல் போர்த்திச் சாப்பிடத் தயாராக இருக்கும். மேலே தடவும் நெய் தான் அந்த பழுப்பு நிறத்தைக் கொடுக்கும்.

இப்போது முட்டை மிட்டாய் தயாராகிவிட்டது. சுவை எப்படியோ, அந்தப் பாத்திரம் அழகாக இருப்பது அவசியம். ஏனென்றால் சூடு ஆறியபின் இதே பாத்திரத்தை, அனைவரது முன்னாலும் கொண்டுவந்து, கேக் போலிருக்கும் முட்டை மிட்டாயைப் பங்குபோட்டுக் கொடுப்பீர்கள். வாவ், சூப்பர் போன்ற பாராட்டுகள் அடுத்த லெவலுக்குச் சென்று இப்போது சான்ஸே இல்ல, வேற லெவல், எக்செலன்ட் என்று கேட்கும். இதைப் பங்குபோட்டு உண்பதில் மீண்டும் சண்டை வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

சுத்தமான நெய், பால், சர்க்கரை போன்றவற்றைப் பயன்படுத்துவது தான் தொழில் ரகசியம். இந்த இனிப்பை செஞ்சியிலிந்த சையத் அப்துல் கஃபாருக்கு அறிமுகப்படுத்தியவர், அவரது நண்பர் ப்யாரே ஜான். ‘முட்டை மிட்டாய்’ என்று பெயரிட்டு இதை வணிகப்படுத்தியவர் சையத். 1970 களில் ஆரம்பித்த சையத் ஸ்வீட்ஸ், இப்போது பொன்விழாக் கண்ட கடையாகி விட்டது. கடல் தாண்டியும் இதற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலே நெய் தடவும்போது, அர்ச்சனை போடுவது போல, நீளவாக்கில் வெட்டிய பாதாம் பருப்பைத் தூவிவிட்டால் போதும். முட்டை மிட்டாயின்  வட மாநில உருது டப்பிங்கான ‘அண்டே கே மிட்டாய்’ கிடைத்து விடும். ஐந்து நாள்வரை கெடாமல் இருக்கும். உறைய வைத்து உபயோகித்தால், ஒரு மாதம் வரைத் தாங்கும். குழந்தைகளை நிச்சயம் கவரும்.

இயற்கையில் கிடைத்த மிகுதியான பால், சர்க்கரை, முட்டை போன்றவற்றில் ஆரோக்கியமாகத் தயாரான, முகலாயப் பரம்பரையில் வந்த உணவிது. நிஜமாகவே வேற லெவல் என்று சொல்லுமளவு தரம் வாய்ந்தது.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன