“அம்மா, இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் டே தெரியுமா? என்னால செய்ய முடியாத விஷயத்தைக் கூட, என் ப்ரண்ட் செய்ய வச்சிட்டா.”
“அப்படியா, என்ன பாப்பா செஞ்ச?”
“இன்னிக்கு ட்ராயிங் மிஸ் டெஸ்ட் வச்சாங்க. எங்களுக்குத் தெரிஞ்ச விலங்குகள எல்லாம் வரைய சொன்னாங்க. எனக்கு எதுவுமே சரியா வரல. எப்பவும் போடுற குண்டுப் பூனக்குட்டி கூட சரியா வரல. என் ப்ரண்ட்ஸ் எல்லாம் நாய்க்குட்டி, டெடி பேர், ஏன் தீக்ஷா அழகான கிளி கூட வரைஞ்சா. எனக்குதான் எதுவுமே வரல. மிஸ் மறுபடியும் ட்ரை பண்ண சொன்னாங்க.”
” ஓ, அப்புறம்? “
“தீக்ஷா என் பக்கத்திலயே வந்து உட்காந்தா. உன்னால கண்டிப்பா முடியும். நீ என்ன வரையப் போறியோ, அத முதல்ல மனசில நெனச்சிக்கோ. அப்புறமா அதக் கொஞ்சம் கொஞ்சமா வரைய ட்ரை பண்ணு. நீ கண்டிப்பா நல்லா வரைவ. யு கேன் டூ இட்னு சொன்னாமா. அதுக்கப்பறம் நான் வரைஞ்சது எல்லாமே நல்லா இருக்குன்னு எங்க மிஸ் சொன்னாங்க. மத்த ப்ரண்ட்ஸ் கூட சொன்னாங்க. நான் தீக்ஷாக்கு தேங்க்ஸ் சொன்னேன் மா.”
“வெரி குட் பாப்பா. உனக்கு எவ்ளோ நல்ல ப்ரண்ட்ஸ் அமைஞ்சிருக்காங்க!”
“அதெல்லாம் சரி, பசிக்குதும்மா. பூரி சுட்டுக் தரீங்களா?”
“இந்நேரத்தில பூரியா? எப்படிமா முடியும்? ரொம்ப டையர்டா இருக்கே.”
“அது ஒண்ணும் கஷ்டம் இல்லம்மா. முதல்ல பூரிய மனசில நெனச்சிக்குங்க. அப்புறமா அதக் கொஞ்சம் கொஞ்சமா செய்ய ட்ரை பண்ணுங்க. யு கேன் டூ இட் மா.”

