வலைப்பதிவுகள்

வா உள்ள வா. ஏன் லேட்? என்று குட்டி குட்டி வார்த்தைகளால் வரவேற்பது போலிருந்தது அந்தக் கிளிகளின் சத்தம். தென் அமெரிக்காவின் சன் கான்யூர் வகைக் கிளிகள் அவை. இப்படித்தான் எப்போதுமே உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருக்குமாம்.

சிறிய கறுத்த அலகு. செம்மஞ்சள் நிறம் தலையில் ஆரம்பித்து நெஞ்சுக்குப் பரவி கால்கள் வரை நீடிக்கிறது. பின்கழுத்து ஆரம்பத்திலிருந்து ஒளி வீசும் மஞ்சள் நிறம் அந்த அறை முழுவதையும் மங்களமாக்கியது. மயிலுக்கு நான் ஒன்றும் குறைச்சலில்லை என்று அடுக்கடுக்காக வெவ்வேறு நீளத்திலிருந்த அதன் இறகுகள் முடிவிலும் வாலிலும் மயில் தோகையின் வண்ணங்கள். இளம்பச்சையில் தொடங்கி பச்சை, கரும்பச்சை, வெளிர் நீலம், நீலம், அடர் நீலம் என மஞ்சளின் மங்களத்துடன் கண்ணைப் பறித்தன அதன் இறகுகள். வட்டமான வெண்விழியில் நம்மை பார்க்கும் துறுதுறு கருவிழிகள். நாம் கைகளை விரித்தவுடன் குழந்தையைப் போலத் தாவி வந்து ஏறிக்கொண்டன.

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் ஜங்ஷனில் அமைந்திருக்கும் கூக்கீலேண்ட் வெளிநாட்டுப் பறவைகள் பூங்கா இது. பெரியவர்களுக்கு இருநூறு ரூபாயும் குழந்தைகளுக்கு நூறு ரூபாயும் நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி இந்தக் குறும்புக் கிளிகளை நீங்களும் கையிலேந்த முடியும். ஒவ்வொரு அறையிலும் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகளும் அவற்றின் பராமரிப்பாளரும் இருந்தார்கள். அவற்றை யாரும் கூண்டுக்குள் அடைத்து வைக்கவில்லை. நம்மைத்தான் அது சுற்றித்திரியும் கூண்டுக்குள் அனுப்பி அதன் உலகைக் கண்டு ரசிக்க அனுமதிக்கிறார்கள்.

அறைக்குள் நுழையும்போது அதன் உணவைத் தட்டில் கொண்டு செல்லலாம். அதைக் கொத்தித் தின்னும் சாக்கில் நம்மோடு விளையாட ஆரம்பித்து விடுகின்றன இந்தக் கிளிகள். பசித்தவை முதலில் சமத்தாக உணவைக் கொத்தும். பாதி வயிறு நிறைந்தவுடன் நம் விரல்களை, மணிக்கட்டை, கையை, தோள்களைக் கொத்துவது போல பாவலா செய்யும். வலிக்காமல் புறுபுறுவென வருடுவதைப் போல அலகுகளால் கொஞ்சும். கொஞ்சிக்கொண்டே கீக்கீ என உரக்கப் பேசும். பேசிக்கொண்டே இருக்கும். அதுதான் அதன் பொழுதுபோக்கு. ஆனால் நமது ஊர் பச்சைக்கிளியைப் போல நாம் சொல்வதைத் திருப்பிச் சொல்லாது. அதுவாக ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே சொல்லும். அழிந்து வரும் பறவையினங்களுள் ஒன்றான இவை நன்கு பராமரிக்கப்பட்டால் இருபத்தைந்து வயது வரை வாழக்கூடியவை.

ஒருவேளை அதன் தொடுகையால் நாம் பயந்து கத்திவிட்டால் பின்வாங்கிக் கொள்ளும். ஒன்று மட்டுமல்ல கூட்டமாக விர்ரெனப் பறந்து சுற்றியுள்ள வலையில் வரிசையாக அமர்ந்துகொள்ளும். கோபித்துக்கொண்டு தூரப்போய் நிற்பது மாதிரி. அங்கிருந்து நம்மைத் திரும்பி பார்க்கும். நாம் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டால் மீண்டும் நம்மைச் சுற்றி வரும். வலைகளை விட நம்முடன் இருப்பதையே விரும்புகின்றன. பயப்படுபவர்களிடம் திரும்ப வருவதில்லை. நீ இல்லாவிட்டால் என்ன, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என அடுத்தவர்களிடம் பழக ஆரம்பித்துவிடுகின்றன.

ஒரு சிறிய கூண்டில் மூன்று ஃபெரெட்டுகள் இருந்தன. நீளமான எலியைப் போலிருக்கும் மரநாய் வகையைச் சேர்ந்தவை. புசுபுசுவென உடலெங்கும் முடியுடன் தடவிப்பார்க்கத் தூண்டும். அதன் சேட்டையைக் கண்டால் சின்னதாக ஒரு அடி கொடுக்கலாம் என்றுதான் தோன்றும். அங்கிருந்த இரண்டு பெரிய ஃபெரெட்டுகள் சேர்ந்து அந்தக் குட்டியைப் பாடாய் படுத்தின. குட்டியின் இருபுறமும் ஓட்டிச்சென்று அதை அலேக்காகத் தூக்கி விடுகின்றன. பின்னர் தரையில் இறக்கி விடுவதே இல்லை. குடுகுடுவென அந்தக் கூண்டு முழுக்க குட்டியுடன் ஓடி மகிழ்கின்றன. ஐரோப்பாவில் பரந்து காணப்படும் இவற்றின் நீண்ட, மெல்லிய வடிவத்தால் முயல், எலி போன்றவற்றை பொந்துகளிலிருந்து துரத்தப்  பயன்படுத்தப்பட்டன. ஒரு நாளைக்கு பதினான்கு மணிநேரம் தூங்கக்கூடிய இவற்றின் ஆயுள் பத்து வருடங்கள். இவற்றைப் பார்க்க மட்டுமே அனுமதி, தொடுவதற்கில்லை.

இவர்களைப் போல ஆரவாரமில்லாமல் அமைதியின் சிகரமாக உலவிக்கொண்டிருந்தன கோல்டன் பெசன்ட் எனப்படும் சீனக்கோழிகள். ஒரு மாதத்தில் எட்டு முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடக்கூடிய இவை பிறவியிலியே கூச்சமானவை. பெண் கோழிகள் பிரௌன் வண்ணத்தில் நம்மூர் கோழிகளை விட உயரம் குறைவாக இருந்தன. ஆண் கோழிகள் வண்ணமயமாக இருந்தன. மேற்புறம் மஞ்சளும் அடிப்புறம் சிவப்புமாக கழுத்துப் பகுதியில் பெயின்டிங் செய்தது போல பிரௌன் நிற வளைவுக்கோடுகளுடன் இருந்தன. முதுகின் சிறிய பகுதிகளில் ஆங்காங்கே கரும்பச்சை, அடர் பிரௌன் மற்றும் நீல நிறங்கள் பெயின்டிங் பிரஷ்ஷால் தீட்டப்பட்ட மேகங்களைப் போலிருந்தன. துரத்தப்பட்டால் மணிக்கு அறுபது மைல் பறக்கக்கூடியவை என்றாலும் பெரும்பாலான நேரம் நடந்தே சலிக்கின்றன. இதன் தனித்துவம் மிக நீண்ட பிரௌன் நிற வால். இதனாலேயே கர்வத்துடன் யாருடனும் பழகாமல் தனித்து கம்பீரமாகச் சுற்றித் திரிந்தது. போட்டோவுக்கு போஸ் கொடுக்கக் கூட நிற்பதில்லை.

அடுத்த அறையில் சன் கான்யூர் கிளிகளின் சகோதரிகளான பைன் ஆப்பிள் கான்யூர்கள் இருந்தன. சதா பேசிக்கொண்டிருப்பதால் சகோதரிகள் எனலாம். இவற்றின் உடலும் வாலும் சிவப்பாகவும் பைன் ஆப்பிளின் வண்ணங்களைத் தனது இறகுகளில் கொண்டிருப்பதாலும் இந்தப் பெயரைப் பெற்றுள்ளன. நம்முடன் நன்குப் பழகின. முதல் அறையில் அதிக நேரம் செலவழித்ததாலோ என்னவோ ஒரு சில கிளிகள் கோபித்துக்கொண்டு அமர்ந்திருந்தன. செல்ஃபிக்கு மட்டும் போஸ் கொடுத்தன. கைபேசியைக் கண்டதும் விதவிதமாக போஸ் கொடுத்தன. நாம் கண்டுகொள்ளாமல் நின்றாலும் அவை விடுவதில்லை. நம்மைச் சுற்றி வந்து அங்கிருக்கும் கயிற்றில் அமர்ந்துகொண்டு நம்மை எட்டி எட்டிப் பார்ப்பது போல கழுத்தை உயர்த்தி தாழ்த்தும். கயிற்றில் ஊஞ்சலாடி நம்மை எப்படியாவது தாஜா செய்யும். பின்னர் நம் கைகளிலும் தோள்களிலும் அமர்ந்து கம்பீரமாக அறையை வலம்வரும். பத்து இன்ச் நீளத்துக்கு வளரக்கூடிய இவை முப்பது ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை.

ரோல் ரோல் பார்ட்ரிட்ஜ் எனும் இரண்டு தாய்லாந்து கௌதாரிகள் நமது கால்களுக்குள் சுற்றி வந்தன. தோகையில்லாத சிறிய குண்டு மயில் ஒன்று, மயில் கழுத்தின் வண்ணத்தை உடல் முழுவதும் பூசியிருந்தது போலிருந்தன. கண்களும் கொண்டையும் மட்டும் சிவப்பு நிறம். புசுபுசுவென சிறிய செங்கொண்டை அதற்கு அழகாகப் பொருந்தியது. விசிலடித்துப் பாடக் கூடிய இவை மலேசிய, சுமத்ரா தீவுகளில் அதிகம் காணப்படுபவை. காடுகளின் அழிவால் இவற்றின் எண்ணிகை வெகுவாகக் குறைந்து வருகிறது. கூச்சமே படாமல் கொடுத்த எல்லாவற்றையும் சாப்பிட்டது. அது கொழு கொழுவென இருப்பதன் ரகசியம் புரிந்தது. அந்த அறையில் நுழையும்போதே நம்மை யாரோ கண்காணிப்பது போலிருந்தது. அறைக்கதவின் மேலமர்ந்து சோகமாகத் தனிமையிலிருந்தது ஒரு ஆப்பிரிக்க சாம்பல் கிளி. கற்றுக்கொடுத்தால் ஆயிரம் வார்த்தைகள் வரை சூழலுக்குத் தகுந்தாற்போலப் பேசக்கூடிய இவை அறுபது வயதுவரை வாழக்கூடியவை. வண்ணங்கள் இல்லாததால் பாவம் அங்கிருந்த சகோதரிகள் யாரும் இதைச் சேர்த்துக் கொள்ளவில்லை போலும். பறவைகளுக்கும் பரவிவிட்டது நிறவெறி.

அடுத்த அறையில் சின்னச்சின்ன வானவில்கள் நிறைந்திருந்தன. ஆஸ்திரேலியாவின் ரெயின்போ லோரிக்கீட் கிளிகள். சின்னச் சிவப்பு அலகு, நீலவண்ணத் தலையில் சிவப்புக் கண்கள். மேற்புறம் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் ஆரஞ்சு மற்றும் நீல நிறத்திலும் ஒரு வண்ணக்குவியலைப் போலிருந்தது. உடலை ஒட்டியிருந்த சிறகுப்பகுதி சிவப்பில் தொடங்கி, மஞ்சளில் தொடர்ந்து, முடியும் ஓரத்தில் நெயில் போலிஷ் தீட்டியது போல நேர்த்தியான பிரௌன் நிறத்தில் முடிந்தன அதன் சிறகுகள். நிஜத்தில் பறக்கும் ஒரு சிறிய வானவில்லைப் போலிருந்தன. ஜோடியாகத் திரியும் இவை ஒரே இணையுடன் பல்லாண்டு வாழும் பழக்கமுடையவை. கிளிகளில் அழகான  இவை தினமும் முப்பது கிமீ வரைப்பறந்து இரைதேடக் கூடியவை. பப்பாளியும் மாம்பழங்களும் இவற்றுக்குப் பிடித்தமானவை. பயமின்றிப் பழகிய இவற்றுடன் ஒன்றுவிட்ட சிவப்புச் சகோதரிகளும் இருந்தன. முழுவதும் சிவந்து ஆங்காங்கே நீலம் தெளித்த ரெட் லோரிகீட் அல்லது மொளகன் லோரிக் கிளிகள். அவை நம்மிடம் என்ன சில்மிஷம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நாம் அதைக் கையில் பிடிக்க முயற்சி செய்யக்கூடாது. சுதந்திரம் அவற்றின் முதல் உரிமையாக இருந்தது. அதை மட்டும் கொடுத்துவிட்டால் அங்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் உபசரித்து குதூகலப்படுத்தின.

அடுத்த அறையில் இரு கம்பீர மெக்கா வகைக் கிளிகள். உடல் முழுவதும் நீலம். கழுத்தோர மஞ்சள் அடிப்புறமெங்கும் பரவியிருந்தது. தெளித்து விட்டாற்போல தலையில் சிறிது பச்சை. இந்தப் பெரிய கிளியின் கறுப்பு அலகும் பெரிது, கொத்தினால் வலித்தது. அதன் கண்களை நிச்சயம் கறுப்பு ஸ்கெட்ச் கொண்டு வரைந்திருப்பார்கள். ஒரு வட்டம் நடுவில் புள்ளி எனக் கண்கள் முடிந்துவிடவில்லை. அதைச் சுற்றிலும் கழுத்துவரை வெள்ளை நிறம். கண்களுக்குக் கீழேக் கண்மை இட்டதைப் போல மூன்று கறுப்புக் கோடுகள். விட்டுவிட்டு வரையும் மழைத்துளி போலக் கறுப்பு புருவங்கள். பார்வையாலேயே நம்மை மிரள வைத்தன.

உலகின் மிகப்பெரிய கிளி வகை என்ற பெருமைக்குரிய இவை மூன்றடிக்கு வளர்கிறது. இறகு மட்டுமே ஐந்தடி வரை வளரக்கூடியது. வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் காட்டில் அறுபது ஆண்டுகள் வாழக்கூடியவை. பாதுகாப்பாக வளர்க்கப்பட்டால் உரிமையாளரையும் தாண்டி நூறு வருடங்கள் கூட வாழ்பவை. தனது பெயரைப் போலவே கக்ககாகா என்று சத்தம் எழுப்புகிறது. வளர்ப்பவரின் கைகளில் மட்டும் தொற்றிக்கொண்டு கொஞ்சுகிறது. அவர்கள் யார் கைகளுக்குத் தாரைவார்க்கிறார்களோ அவரிடம் மட்டும் சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு மீண்டும் கிளைக்குச் சென்று விடுகிறது. இதுவரைப் பழகியதிலேயே அதன் உருவத்தால் கொஞ்சம் பயத்துடன் அணுகியது இதனிடம் தான்.

இன்னும் இரண்டு ஜீவன்கள் கண்ணாடிப் பெட்டிகளிலிருந்தன. வெள்ளை மற்றும் பிரௌன் நிறத்தில் சொகுசாக சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தன அந்த மலைப்பாம்புகள். இவற்றையும் சிறப்புக் கட்டணமாக நூறு ரூபாய் செலுத்தினால் தோளில் மாட்டி விடுவார்களாம். அவ்வளவு சிரமம் கொடுக்க வேண்டாமென்று அங்கிருந்து சத்தமின்றி வெளியேறினோம். மேலிருந்து ஒருவன் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். சுவருடன் ஒட்டிக்கொண்டிருந்த உடும்பு அது. வெளியேறும் நேரத்தில் ஏன் பீதியைக் கிளப்புகிறீர்கள் என்று கேட்டால் அது பரம சாது. இந்த அரசாணிக்காயையும் கொத்துமல்லி இலையையும் மட்டும்தான் உண்ணும். வேறொன்றும் செய்யாது என்றார் அதன் பராமரிப்பாளர். நெற்றிக்கண் போல மேலிருந்து வரும் ஆபத்தை அறிய இதன் தலைக்கு மேல் மூன்றாவதாக ஒரு கண் உள்ளது.   இருபது வருடங்கள் உயிர் வாழக்கூடிய இவை அரைமணி நேரம் வரை தண்ணீருக்குள் மூழ்கியிருந்து ஒளியக் கூடியவை. தரையிலும் மணிக்கு இருபத்தோரு மைல் வேகத்தில் ஓடக்கூடியவை. ஒருவேளை வேட்டையாடும் விலங்கிடம் மாட்டிக்கொண்டாலும் அதன் வாலை மட்டும் கத்தரித்துக்கொண்டு தப்பிக்கக் கூடியவை. 

உள்ளூர் பறவைகளை வீட்டில் வளர்ப்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த துக்கத்தைப் போக்க இப்படிப்பட்ட வெளியூர் பறவைகளைத் தகுந்த பாதுகாப்புடன் பரந்த வெளியில் வளர்த்து ஆறுதலடையலாம். அங்கிருந்து நம்மை முதன்முதலில் வரவேற்ற சன் கான்யூர் கிளிகளுக்குப் பிரியாவிடைக் கொடுக்க வந்தோம். கீக்கீ என்று ஹை டெசிபலில் விண்வெளி நாயகா பாடலைப் போல நமக்கு பை பை சொன்னது. அந்த செம்மஞ்சள் தலையை வருடியபடியே அதற்கொரு முத்தமும் தந்து வெளியேறினோம். குழந்தைகளைப் பிரிவதைப்போல மனது கனத்தது. விரைவில் மீண்டும் சந்திக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டோம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன