வலைப்பதிவுகள்

என் மீது வரும் முக்கிய புகார் என்னவெனில், நான் எந்நேரமும் உணவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேனாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு இது தன்னிச்சையாக நடைபெறும் ஒன்று.

காலைக் கடன்களை முடித்தவுடன் தொடங்கும் இந்த ஏக்கம். மற்றவர்களுக்குப் புதிய நாள் பிராணாயாமத்தில் தொடங்கலாம். எனக்கு சாதகத்தில் தொடங்கும். அடி வயிற்றிலிருந்து எழும் அந்த நாதம் அருகில் இருப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். எத்தனை நேரம் காலியாக விடப்பட்டதோ அதைப் பொறுத்து என் அடிவயிற்றின் அழுகுரல் இருக்கும். இதை நிராகரித்தால் பின்பு உடலின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் பந்துபோல உருண்டு அந்த வெற்றிடம் தாவிக்கொள்ளும். பிறகு நாதமெல்லாம் எழுப்பாது. வலியால் நான்தான் முனகிக்கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளைக் கூப்பிட்டு வலிக்கும் இடத்தில் குத்துப் பயிற்சி மேற்கொண்டாலும் வலி உருண்டு இடம் மாறுமே தவிர, தீர்ந்து விடாது.

இத்தனை பாட்டுக்கு ஒரு மெதுவடையையும் காபியையும் குடித்து விட்டால், சர்வ நாதமும் அடங்கிவிடும். பிறகு அன்றைய நாளுக்குரிய சமையலை ஆரம்பிக்கலாம். தமிழ்நாட்டின் ஒரு காலை வேளையை, மெதுவடையை விட மென்மையாக எப்படித் தொடங்கிவிட முடியும்? அதற்குத்தானே இருக்கிறது எங்கள் வீட்டு முற்றத்திலேயே ஒரு டீக்கடை? வடை அவர்களுடையது. காபி எப்போதும் என்னுடையது.

சமைக்கும் பொழுது ருசி பார்க்கும் கெட்டப் பழக்கம் எனக்கில்லை. உணவைச் சமைப்பதற்கு முன்னால் உண்ணும் துர்குணமும் இல்லை. எங்கள் வீட்டு அவலும் பச்சரிசியும் காலியாகக் காரணம் என் வழிவந்தவர்களே. இருநேரச் சமையல் முடியும் முன்பே என் பின்முதுகு வலிக்கத் தொடங்கும். வேலையை முடித்து உட்கார்ந்து விட்டால் அதன்பின் இடத்தை விட்டு நகர மாட்டேன்.

முதுகு வலி, பயணம் செய்து வயிற்றுக்குப் பரவுவதைப் போல உணரத் தொடங்குவேன். இம்முறை கச்சேரி தொடங்குவதற்கு முன்னரே உஷாராகி என் வயிற்றைக் காலைச் சிற்றுண்டியால் நிறைத்து விடுவேன். அதிகமில்லை. இரண்டே தோசைகள்தான். அல்லது மூன்று இட்லிகள். பூரி, சப்பாத்தி போன்றவற்றை எல்லாம் எண்ணிச் சாப்பிடக் கூடாதென்பது எங்கள் குடும்பத்தின் ஐதிகம்.

அதுவே சர்க்கரைப் பொங்கல், இனிப்பு அவல், புட்டு போன்ற இனிக்கும் சிற்றுண்டி என்றால் அதை நிகர் செய்ய நிச்சயம் காரசாரமான வடை தேவை. மெதுவடை வாங்கும்பொழுதே இதையும் கணக்கிட்டு, மசால் வடையோ, சமோசாவோ, வெங்காய போண்டாவோ வாங்கி வைத்துக்கொள்வேன். அடிக்கடி பிள்ளைகளைக் கடைக்கு அனுப்ப எனக்கு மனது வராது.

காலைச் சிற்றுண்டி முடித்தவுடன் அடுத்த காபி. என் தயாரிப்பில் வீட்டில் அனைவருக்கும் இலவசமாக வழங்குவேன். இந்த காபிக்குப் பிறகுதான் எனக்கு சூரியனே உதித்தது போலிருக்கும். அதுவரை பசியும் தூக்கமும் தவணை முறையில் என்னிடம் தங்கியிருக்கும்.

இனி கர்மமே கண்ணாக இருப்பேன். அவ்வப்போது கைகளுக்கும் சிறிது வேலை கொடுப்பேன். கணினியும் நானுமாக அறைக்குள் புகுந்து, இனி மதிய உணவுக்குத்தான் வெளியே தலைகாட்டுவேன் என்று அறிவித்துவிட்டு அமர்வேன்.

இரண்டு மணிநேரம் இந்த அறிவிப்பு தாங்கும். பிறகு எதையோ இழந்ததைப் போன்றதொரு ஏக்கம் தோன்றும். காலைச் சிற்றுண்டியை மறந்து விட்டேனா என்றுகூடத் தோன்றும். ஆதாரங்களோடு என் வீட்டிலிருப்பவர்கள் நிரூபித்ததும் ஒப்புக்கொள்வேன். ஆனால் அதற்காக நான் பட்டினி கிடக்க முடியுமா? அளவோடு இரண்டு முறுக்கும் ஒரு காபியும் குடித்து, வயிற்றை எரிச்சலடையாமல் பார்த்துக் கொள்வேன். மற்றவர்களுக்கு எரிந்தால் நான் என்ன செய்ய?   

மதிய உணவு தாமதமாகும் என்று தெரிந்தவுடன், உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய ஞாபகம் வந்துவிடும். உணவுக்கு முன் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எங்கள் மருத்துவர் சொல்லியிருக்கிறார். ஆப்பிளோ, கொய்யாவோ, மாதுளையோ தயாராக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பும் போதே, என் பங்கையும் நான் எடுத்து வைத்துவிடுவேன். வீணாக்காமல் அதை காலி செய்வேன்.

பழங்களுக்கு ஒரு அரிய குணமுண்டு. அவற்றை உண்ட அரைமணி நேரத்திலேயே பசியைத் தூண்டும். உணவை ப்ரோமோஷன் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கும்போல. பசி தொடங்கிவிட்டால் எனக்கு வேலை ஓடாது. பசியை உற்றுக் கவனியுங்கள். உங்கள் உடல் உங்களோடு நடத்தும் உரையாடல் என்று என் மருத்துவர் கூறியிருக்கிறார்.

அதனால் சாதம், குழம்பு, ரசம், தயிர், காய்கறி என்று பாத்தி கட்டி மதிய உணவை உண்டு முடிப்பேன். ருசி குறையும் நாள்களில் முட்டையோ, முறுக்கோ, ஊறுகாயோத் தொட்டுக்கொண்டு போட்ட சாதத்தைக் காலி செய்து விடுவேன். உணவை வீணாக்குவது பாவம். சித்த மருத்துவர் சிவராமன் கூறியது என்றாவது ஞாபகம் வருமேயானால், அன்று சாதத்தைக் குறைத்து அதேயளவு முட்டையை அதிகப்படுத்துவேன். காய்கறியை எனக்காக அதிகம் வைத்துக்கொள்ள மாட்டேன். காலையிலேயே குழந்தைகள் டிபனில் போட்டுக்கொடுத்து விடுவேன்.

உண்ட பிறகு கண்கள் சொருகும். தூக்கத்தையும் கட்டுப்படுத்தக் கூடாதென்பது மருத்துவர் அறிவுரை. மதிய தூக்கம் தெளிவதற்குள் மாலையாகிவிடும். தூக்கம் என் உணவை ஜீரணிக்க உந்துசக்தியாக உதவியிருக்கும். அதனால் எழும்போதே பசிக்கும். இதற்குள் குழந்தைகளும் பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். அவர்களுடன் மாலைச் சிற்றுண்டியை நானும் இருமடங்கு உண்பேன். அவ்வளவு பசிக்கும்.

இப்போது வடை வேண்டுமென்று கடைக்கு அனுப்ப மாட்டேன். பிஸ்கட், சிப்ஸ், மிக்ஸர், கேக் என ஒரு வாரத்துக்குத் தேவையானதை வார இறுதியிலேயே வாங்கி வைத்திருப்பேன். அதையும் மீறித் தேவைப்பட்டால் வீட்டிலேயே பஜ்ஜி செய்து விடுவேன். ரெடிமேட் பஜ்ஜி மாவும், வெங்காயமும், உருளைக்கிழங்கும் எப்போதும் வீட்டிலிருக்கும். பத்தே நிமிடங்களில் பஜ்ஜி தயாராகிவிடும். குழந்தைகளோடு நானும் விரும்பி சாப்பிடுவேன். எண்ணெய்யில் பொரித்தது என்பதால் கணக்கு கிடையாது. பஜ்ஜி ஆரோக்கியமானதா என்ற குற்ற உணர்வு வந்தால், கற்பூர வள்ளி இலைகளைப் பறித்து பஜ்ஜி செய்வேன். சளியையும் குற்ற உணர்வையும் போக்க வல்லது. பஜ்ஜியின் காரத்தைப் போக்க வீட்டில் தயாரிக்கும் காபி இன்றியமையாதது. 

நாள் முழுக்க இத்தனை வேலை செய்த பின்பு இரவு உணவைச் சமைக்கும் அளவுக்கு உடலில் தெம்பிருக்காது. அதனால் அருகிலிருக்கும் கடைகளிலிருந்து அவரவருக்கு என்ன விருப்பமோ அதை வாங்கி உண்போம். எனக்கு எப்போதும் பிரியாணி என்றாலும், பிறர் வாங்கும் புரோட்டா, பிரைட் ரைஸ் போன்றவற்றை ஒதுக்கி வைக்கும் தீண்டாமை என்னிடம் இல்லை. சரிசமமாக அனைத்தையும் உண்டு முடிப்பேன். வெறும் வயிறாகவோ அரை வயிறாகவோ உண்டுவிட்டுப் படுப்பது இரவு தூக்கத்தைக் கெடுக்கும் முக்கிய காரணி. மருத்துவரின் கருத்து இதில் வேறுபட்டாலும் அனுபவத்தில் நான் கண்டுபிடித்தது. அதனால் என் உடலை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தூங்கும் மனநிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அதற்கு மனம் அமைதியாவது முக்கியம். இவ்வுலகில் மலிவாக அதைத் தரக்கூடியது வாழைப்பழம் மட்டுமே. ஆரோக்கியமும் நிறைந்தது. எப்போது அதைச் சாப்பிட்டு முடிக்கிறேனோ அதோடு அன்றைய நாளின் உணவு முடிகிறது என்று அர்த்தம். இவ்வளவுதான் என்னுடைய ஒரு நாள் உணவுப்பட்டியல். இதற்குப்போய் சலித்துக் கொள்கிறார்கள். நான் சட்டை செய்தால்தானே?

உணவு உயிரை வளர்ப்பது என்று எங்கோ படித்திருக்கிறேன். முன்னோர் சொல்லில் பிழையிருக்காது.


“ஒரு புகாரும், விளக்கமும்” மீது ஒரு மறுமொழி
  1. sanmaha அவதார்
    sanmaha

    எம்மோவ்!!!

    கொஞ்சுண்டு சாப்பாடு தானே நினைச்சா இவங்களுக்கு தொட்டுக்க அவங்க, அவங்களுக்கு பங்காளி இவங்க..இதில இந்த பக்கமும் பாதிக்காம அந்த பக்கமும் பாதிக்காம வயிற்றுக்கும் வஞ்சம்‌வைக்காம தூங்கவும் செஞ்சு சாயங்காலமும் ஒரு சிக்ஸரோ பவுண்டரியோ நாலோ அஞ்சோ அடிச்சு மேட்ச் தோற்கவிடாத கேப்டன் மாதிரி வயிறு காய விடாத அந்த மனசு இருக்கு பாரும்மா !!அதான் சாமி கடவுள்!!!

    கடைசியாக நம்ம கவுண்டமணி செந்தில்!!!

    எத்தனை பழம் சாப்டேனு கேட்டு முடிக்கும்போதே விடிஞ்சு கோழியும் கூவிடுது….

    நகைச்சுவையும் சுவை மணமும்…அப்பப்போய்!!!

    முடிச்சுவிட்டிங்க அம்மணி!!!!

    என்றும் அன்புடன்
    சங்கரா😍🥰❤️😊

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன