வலைப்பதிவுகள்

இது சினிமா விமர்சனம் அல்ல. இந்தப் படத்துடன் சம்பந்தப்பட்ட யாரையும் குறைகூறும் பதிவும் அல்ல. இதற்காக அவர்கள் மேற்கொண்ட உழைப்பு என்னையும் பிரமிக்க வைக்கிறது. ஆனால் மண்டை மேலிருக்கும் கொண்டையை இவ்வளவு சிரமமெடுத்து அலங்கரித்தவர்கள் மண்டையையும் கொஞ்சம் கவனித்திருக்கலாமே என்று ஒரு ரசிகராக என்னுள் எழும் ஆதங்கம் மட்டுமே இந்தப் பதிவு.

இன்னும் நான்கு நாள்களில் உலகம் என்டிடி எனும் செயற்கை நுண்ணறிவால் உருவான வில்லனுடைய கைகளுக்குச் சென்றுவிடும்.  வில்லன் பாதுகாப்பான ஓர் தரவு மையத்தில் ஒளிந்துகொண்டு, அணுஆயுதங்களை ஏவி உலகைத் தரைமட்டமாக்கப் போகிறது. பிறகு அது சேமித்து வைத்திருக்கும் தரவுகளைக்கொண்டு மனிதர்கள் இல்லாத புதிய உலகை உருவாக்கி ஆளப்போகிறது.

இதிலிருந்து உலகைக் காப்பாற்ற ஐஎம்எஃப் ஏஜென்ட் ஈத்தன் ஹண்டால் மட்டுமே முடியும். அவரது குழுவோடு இதைச் செய்து முடிக்கும் பொறுப்பை அமெரிக்க அதிபர் ஈத்தனிடம் ஒப்படைக்கிறார். என்டிடியை அழிக்கும் நிரல்கள் (கம்ப்யூட்டர் கோட்) ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்குள் புதைந்து கிடக்கிறது. இதை வெளியே எடுக்கும் சாகசத்தைச் செய்யத்தான் ஈத்தனை நம்பியிருக்கிறார்கள். அதற்கான சாவியும் அவரிடம் மட்டுமே இருக்கிறது.

ஆனால் அதிபர் உள்பட யாரிடமும் என்டிடியைக் கட்டுப்படுத்தும் சக்தியை ஒப்படைக்க ஈத்தனுக்கு விருப்பமில்லை. தனது குழுவோடு வேறொரு திட்டம் போடுகிறார். மிஷன் ஆரம்பமாகிறது.

ஆர்க்டிக் பெருங்கடலில் குதிக்க அதற்குரிய உபகரணங்களைக்  கொடுத்து ஈத்தனை வழியனுப்புகிறது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் குழு. அதை அணிந்து கொண்டாலும் அவ்வளவு ஆழத்திலிருந்து மேலே நீந்தி வரும்போது ஈத்தனுக்குக் கடும் சுவாச அழுத்தம் ஏற்படும். அதனால் திட்டமிட்ட நேரத்துக்குள் கடற்பரப்புக்கு வந்துவிட வேண்டும் என்று எச்சரித்து அனுப்புகிறார்கள். அவர் உயிருடன் திரும்ப மாட்டார் எனத் தெரிந்தே அவரை பலிகொடுப்பது போல, பிரியாவிடை கொடுக்கிறார்கள்.

இதை அணிந்துகொண்டு ஈத்தன் செய்த சாகசங்கள் கொஞ்சமல்ல. சிறு வயதில் விளையாடிய தாத்தா வீட்டுக்குள் நுழைந்தது போல அந்த நீர்மூழ்கிக் கப்பலில் சுற்றி வருகிறார். இவர் ஏறியவுடன் அது கடல் பாறைகளுக்குக் கீழே செல்ல, அதிர்ஷ்டவசமாக நிரலுடன் தப்பிக்கிறார்.

ஆனால் நீச்சல் உடையுடன் தப்பிக்குமளவு வெளியேறும் வழியில் இடமில்லை. அதை அணிந்து கொண்டு தப்பித்தாலே உயிருக்கு உத்தரவாதமில்லை. அது இல்லாமல் போனால் ஆழ்கடலில் ஏற்படும் அழுத்தம் தாங்காமல் இறந்து விடுவோம் என்று தெரிந்தும் அசால்ட்டாக அதைக் கழற்றிவிட்டு, உறையும் நீரில் வெறும் உடலோடு மேல்நோக்கி நீச்சலடித்து வருகிறார். அவரை ஏன் கடவுள் என்கிறார்கள் என்று நமக்குப் புரிய வைப்பதற்காகவே இந்த சாகசம்.

கடலின் மேற்பரப்பை அடைந்தவுடன் மயக்கமடைந்து விடுகிறார் ஈத்தன். அவரது குழுவிலிருக்கும் கிரேஸ் வாய் வழியே அவசர சிகிச்சை செய்து உயிர் கொடுக்கிறார். இதற்கு ஏன் அமெரிக்க நீர்மூழ்கி நிபுணர்கள் அவ்வளவு பில்ட்அப் கொடுத்தார்கள் என்று புரியவில்லை. ஆர்க்டிக் பெருங்கடலில் உறைந்துவிட ஈத்தன் என்ன சாதாரண மனிதனா?

என்டிடியின் நிரலை ஏமாற்றி அழிக்கும் பாய்சன் நிரலை, ஈத்தனின் நண்பர் முதல் காட்சியிலேயே கண்டுபிடித்து வைத்திருக்கிறார். ஆனால் அரசாங்கத்தின் எதிரி ஒருவன் அதைத் திருடிவிடுகிறான். அவனைத் துரத்திப்பிடித்து ஈத்தன் அதை வாங்கினால் மட்டுமே என்டிடியை ஏமாற்ற முடியும். கடைசிக் காட்சியில் ஹெலிகாப்டர் சேசிங் வேண்டும் என்பதற்காகவே அந்த எதிரிகள் ஹெலிகாப்டரில் தப்பித்துச் செல்கிறார்கள். ஈத்தன் அந்த ஹெலிகாப்டரின் அடிக்கம்பியில் தொற்றிக்கொண்டு அவர்களைத் துரத்துகிறார். பிறகு அவர் செய்து பழகிய விமான சாகசங்கள் அனைத்தையும் செய்து எதிரியிடமிருந்து பாய்சன் நிரலைப் பறித்துக் கொள்கிறார்.

கார் சண்டைக் காட்சிகளைப்போல ஹெலிகாப்டர் சண்டை நடுவானில் நடக்கிறது. பின்சீட்டிலிருந்து முன் சீட்டுக்குத் தாவுவது; இரு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொள்வது; வெளியே தொற்றிக்கொண்டு உள்ளே இருப்பவர்களை அடித்து சாகடிப்பது; பிறகு அவர்களைக் கீழே தள்ளிவிட்டு இவர் உள்ளே சென்றமர்ந்து ஹெலிகாப்டரை ஓட்டுவது என அனைத்தும் நடக்கிறது. இதை எல்லாம் தீவிர பயிற்சிக்குப்பின் அவரே செய்திருக்கிறார் என்ற போதும், இந்தக் கொண்டைகளில் மட்டும் கவனம் செலுத்தியதுதான் ஞாபகம் வருகிறது. நடித்ததில் பிரச்னை இல்லை, ஏன் இப்படிப்பட்ட கமல் ஸ்ரீதேவி காலத்து ஹெலிகாப்டர் காட்சிகள் என்பதே இங்கே கேள்வி. அதுவும் பறந்தாலும் விடமாட்டேன் பாடலில் வரும் அதே மஞ்சள் ஹெலிகாப்டர்.

நான் பாராசூட்டில் தப்பித்து விடுவேன். நீதான் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து சாகப்போகிறாய் என்று வில்லன் சொன்ன அடுத்த நிமிடமே, விதிப்படி அல்லது கதைப்படி, ஹெலிகாப்டரின் கம்பிகளில் அடிபட்டு அவன் அங்கேயே சாகிறான். ஈத்தன் தேடிப்பிடித்து ஒரு பாராசூட் ஜாக்கெட்டை அணியும் வரை காத்திருந்த ஹெலிகாப்டர், பிறகு வெடித்துச் சிதறுகிறது. இதில் ஈத்தனின் பாராசூட் எரிந்து வீணாகி விடுகிறது. சரி, இவர் ஈத்தன் ஆயிற்றே, எத்தனை உயரத்திலிருந்து விழுந்தாலும் அசால்ட்டாக கைகளைத் தட்டி எழுந்து நிற்பார் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்குள்ளிருந்த இன்னொரு பாராசூட் விரிந்து அவரைக் காப்பாற்றி விடுகிறது.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, ஈத்தனின் குழுவினர் அந்த என்டிடி ஒளிந்துகொள்ள நினைத்த இடத்தில் கூடியிருக்கிறார்கள். அதை ஏமாற்றி, அது ஏவுகணைகளுக்கு உத்தரவு கொடுக்கும் முன், ஒரு சிறிய ஹார்ட் டிரைவ்வில் என்டிடியைக் கைப்பற்றுவதே திட்டம். பேயோட்டும் மந்திரவாதி துர்சக்தியை அழிக்காமல் அதைப் பிடித்து ஒரு ஜாடிக்குள் போட்டு அடைத்து வைப்பாரே? அது போல இவர்கள் என்டிடியை அடைத்துவைக்கப் போகிறார்கள். இதற்குள் அணுக்குண்டு வெடிப்பதைத் தடுப்பது, சாவுக்குப் போராடும் நேரத்தில் செய்முறைகளைச் சொல்லிக் கொடுப்பது என்று ஈத்தனின் குழுவையும் பரபரப்பாக வைத்திருக்கிறார்கள்.

இறுதியில் எல்லாம் சுபம் என்று அதிபரிடம் தெரிவிக்கிறார்கள். என்டிடியை ஜாடிக்குள் அடைத்து வைத்திருப்பது பற்றியெல்லாம் அதிபருக்குத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை ஈத்தன் என்டிடியை அழித்து உலகைக் காப்பாற்றிவிட்டார். அவ்வளவுதான்.

ஈத்தனின் குழுவினர் அனைவரும் உயிரோடு இருப்பதை உறுதி செய்து கொள்வதோடு படம் முடிகிறது. ஒரு அழகிய பெட்டிக்குள் என்டிடியை வைத்து கடைசிக் காட்சியில் அவர்கள் ஈத்தனிடம் ஒப்படைக்கிறார்கள். உலகை அழிக்க நினைத்த என்டிடி எனும் சாத்தான், கடவுளாகிய ஈத்தனிடம் பத்திரமாக இருப்பது தானே அடுத்த படத்துக்கான முதல் காட்சி? ஜெய் ஈத்தன் ஹண்ட்!


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன