மார்ச் எட்டு மகளிர் தினம். விட்டு விடுதலையாகிப் பறந்த பட்டாம்பூச்சியைக் கொண்ட வாழ்த்து அட்டைகள் குவிந்தன. நாமும் ஏன் இப்படியொரு செல்ஃபீ எடுக்கக்கூடாது? பல்வேறு போஸ்களை முயற்சி செய்தேன். முயற்சி மட்டும் போதாது பயிற்சியும் வேண்டும் என்பது கால் சுளுக்குக்கு மருந்து தடவும்போது புரிந்தது. நடனப் பயிற்சி வகுப்பில் சேர்வதென முடிவு செய்தேன். அடுத்த மகளிர் தினம்தான் என் இலக்கு.
நடனப் பயிற்சி என்றவுடன் ஒரு காலைத் தூக்கி கையில் முத்திரை பிடித்து நிற்கும் நடராஜரைக் கற்பனை செய்திருப்பீர்கள். அவர் கோயில்களில் தஞ்சம் புகுந்துவிட்டார். வீடுகளில் அவரது இடத்தை பிரபுதேவா பிடித்துவிட்டார். ஏறக்குறைய ஒவ்வொரு தெருவிலும் ஒரு டான்ஸ் கிளாஸ் உண்டு. எனக்கு ஸ்கூட்டி ஓட்டத் தெரியும் என்பதால் எங்கள் தெருவிலிருக்கும் கிளாஸில் சேர்ந்தேன். அங்கு பாலே, ஹிப் ஹாப், ஜாஸ் போன்ற மேற்கத்திய நடனமெல்லாம் சொல்லித் தருவதில்லை. ஆன்டி இந்தியன் என்ற அடைமொழிக்குப் பயந்து இந்திய சினிமாப் பாடல்களுக்கு மட்டுமே ஆட கற்றுக் கொடுக்கிறார்கள். இதுவே வெஸ்டர்ன் டான்ஸ் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது. எங்கள் ஏரியாவில் மட்டுமாவது இப்படித்தான்.
உற்சாகமாக முதல் கிளாஸுக்குச் சென்றேன். பத்து பதினைந்து பேர் இருந்தார்கள். அறிமுகம் முடிந்தவுடன் மற்றவர்கள் ஆடுவதை முதலில் கவனிக்கச் சொன்னார். நல்ல குத்துப்பாட்டு ஒன்றின் தாளத்துக்கேற்ப நடனமாடினார்கள். பார்க்க எளிதாகத் தோன்றியது. இருமுறை ஆடியபிறகு அவர்கள் ரெஸ்ட் எடுக்கும் நேரம். இன்னும் இருவரோடு என்னையும் நிற்கச்சொல்லி மாஸ்டர் எங்களுக்கு முன்னால் நின்று முதல் ஸ்டெப் சொல்லிக் கொடுத்தார்.
‘முதல்ல கை, அப்புறம் கால். எப்பவும் மறந்துராதீங்க’ என்றார்.
முஷ்டியை மடக்கி என் இரண்டு கைகளும் மோதிக்கொள்வது போல நெஞ்சுக்கு அருகே வைக்க வேண்டும். பிறகு வலதுகாலைத் தூக்கி வெளிப்புறம் வைக்க வேண்டும். இப்போது கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, இடதுகாலையும் வலதோடு சேர்க்க வேண்டும். பிறகு கைகள் கீழே வந்துவிட வேண்டும். அட்டென்ஷனில் நிற்பது மாதிரி. இதையே இடதுபுறமும் செய்தால் முதல் ஸ்டெப் முடிந்தது. பக்கத்தில் நின்றவரின் முழங்கையின் பலம் தெரியும்வரை தள்ளி நின்று ஆட வேண்டுமென்பது தோன்றவில்லை.
‘ஸ்கூல் எக்ஸசைஸ் மாதிரி ஈசியா இருக்கு மாஸ்டர்’ என்றேன்.
இரண்டாவது ஸ்டெப் கஷ்டமாக இருந்தது. இடதுகாலை வலதுகாலின் முன் குறுக்கே வைக்க வேண்டும். இப்படியே தாக்குப்பிடித்து நிற்க முடியாது. விழாமல் பேலன்ஸ் செய்வதற்காக இரு கைகளையும் எதிர்ப்பக்கமாக (இடதுபுறம்) நீட்ட வேண்டும். எதையாவது அந்தப் பக்கமாகத் தள்ளி விடுவது போல. இதையேப் பக்கம் மாற்றிச் செய்தால் ஸ்டெப் முடிந்தது.
நான் காலை குறுக்கே வைத்து, பேலன்ஸ் செய்ய கைகளை எதிர்ப்பக்கம் நீட்டுவதற்குள் வண்டி குடை சாய்வதைப் போல விழப்போனேன். முழங்கையில் பலம் கொண்ட பக்கத்திலிருந்தவர் என்னை விழாமல் பிடித்துக்கொண்டார்.
‘என்ன மேடம் பண்றீங்க?’
‘நீங்க தான மாஸ்டர் முதல்ல கை, அப்புறம் கால். மறக்கக்கூடாதுன்னு வேற சொன்னீங்களே?’
‘ஐயோ, அது அந்த ஸ்டெப்புக்கு மேடம். இந்த ஸ்டெப்புக்கு கையும் காலும் ஒரே நேரத்தில வேலை செய்யணும், புரிஞ்சுதுங்களா? இல்லன்னா விழுந்துடுவீங்க. எல்லோரையும் பார்த்தபடியே ஆடுங்க’ என்றபடி மாஸ்டர் எனது வலது பக்கம் வந்து நின்று ஆடினார்.
நான் ஒவ்வொரு அசைவுக்கும் மாஸ்டரை எட்டிப் பார்த்து ஆடுவதற்குள் அவர் ஸ்டெப் போட்டு முடித்து விட்டார்.
‘மேடம், கண்ணாடியப் பாத்து ஆடுங்க’ என்றார்.
எனக்கு முன்னால் அவ்வளவு பெரிய கண்ணாடி இருப்பதையே நான் அப்போதுதான் கவனித்தேன். நின்று கொண்டிருந்த அனைவரும் அதில் தெரிந்தோம். சரி, கண்ணாடி இருக்கிறது இனிமேல் சரியாக வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டேன்.
பாட்டு போட்டார்கள். எல்லோரும் சேர்ந்து ஆடினோம். நான் எப்போதும் போலப் பக்கவாட்டில் மாஸ்டரை எட்டிப் பார்த்தேன். அவர் கண்ணசைவில் கண்ணாடியைப் பார்க்கச் சொன்னார். அங்கும் அவர் தெரிந்த திசையில் கழுத்தைத் திருப்பிப் பார்த்தேன். டூ வீலர் ஓட்டும்போதும் என்னால் கழுத்தைத் திருப்பித்தான் பக்கவாட்டிலிருக்கும் கண்ணாடியைப் பார்க்க முடியும். கண்கள் மட்டும் தனியாகத் திரும்பாது.
பாட்டு இல்லாமல் பழகிய எக்ஸசைஸ் போன்ற முதல் ஸ்டெப் கூடப் பாட்டுப் போட்டதும் வரவில்லை. மற்றவர்கள் தாளத்துக்குத் தகுந்தவாறு வேகமாகப் போட்டார்கள். நான் கண்ணாடியிலும் தலையைத் திருப்பிப் பார்த்து ஸ்டெப்பை ஆரம்பிப்பதற்குள் பாட்டு முடிந்து போனது. என் டான்ஸ் கிளாஸ் ஆசையும் முடிந்தது என்றே நினைத்தேன்.
‘ஒண்ணும் பிரச்னை இல்ல மேடம். போகப்போக சரியாயிடும்’ என்று என் நிலைமையைப் புரிந்து மாஸ்டர் சொன்னார்.
இடைவேளை வந்தது. என் அருகில் நின்று ஆடிய இருவரும் என்னிடம் வந்தார்கள். ‘ஈஸி, பீஸி மேடம்’ என்றவாறே ஒருவர் கையில் தாளம் போட, இன்னொருவர் என்னோடுச் சேர்ந்து ஆடினார். முதலில் தலையை நேராக வைத்திருக்கப் போராடினோம். பிறகு தாளத்தின் மேல் கொஞ்சம் கருணைகொண்டு ஆடினேன். ஆனால் புதிதாக ஒரு பிரச்னை தொடங்கியது.
புதிதாகப் பழகும் ஸ்டெப் மட்டுமே ஞாபகம் இருந்தது. முந்தைய ஸ்டெப் மறக்கவில்லை, ஆனால் ஆடும்போது ஞாபகமும் வரவில்லை. என் டக்குக்கு கழுத்தைத் திருப்பி, காப்பியடித்து ஆடுவதற்குள் பாட்டு முடிந்து விடுகிறது.
‘இன்னொரு முறை பாருங்க மேடம்’ என்று மாஸ்டர் எனக்கு நீண்ட ரெஸ்ட் கொடுத்தார்.
நடனமாட ஞாபக சக்தியும் வேண்டுமென்பது புரிந்தது. பரீட்சைக்குப் படிப்பதைப் போல ஸ்டெப்புகளை மனப்பாடம் செய்தேன். மனதிற்குள் வேகமாக ஆடிப் பார்த்தேன். தாளம் எப்படிப் போனால் என்ன? மற்றவர்கள் முடிக்கும்போது நானும் ஆடி முடித்துவிட வேண்டும். அது ஒன்றே எனது குறியாக இருந்தது. ஸ்டெப்புகள் அடுத்தடுத்து ஞாபகம் வர வேண்டும், வேகமாக ஆட வேண்டும். இதையே ரிப்பீட் மோடில் மனதிற்குள் செய்தேன்.
மாஸ்டர் என்னையும் மற்றவர்களோடு சேர்ந்து ஆடச் சொன்னார். பாட்டுப் போட்டவுடன் நான் யாரையும் பார்க்காமல் ஆடத் தொடங்கினேன். தாளம் ஒருவாறு பிடிபட்டது. ஸ்டெப்புகளைத் தவற விட்டாலும் அடுத்த ஸ்டெப்பில் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டேன். பாட்டு முடிந்தது.
‘வெரி குட். மேடமுக்கு கிளாப் பண்ணுங்க’ என்றார் மாஸ்டர்.
எல்லோரும் கை தட்டினார்கள். வெட்கத்தை வெளிக்காட்டாமல் புன்னகையை மட்டும் உதிர்த்தேன். மனதுக்குள் எனக்கு நானே கெத்தாகக் கைகொடுத்து கொண்டேன். அதன்பின் இரண்டு முறை முழுப் பாட்டுக்கு ஆடினோம். கிளாஸ் முடியும்போது இனி தொடர்ந்து வாங்க என்று கைகொடுத்து வழியனுப்பினார் மாஸ்டர். தலையாட்டிவிட்டு வந்தேன்.
அடுத்த முறை டான்ஸ் கிளாஸ் செல்லும்வரை ஸ்டெப்புகளை ஞாபகப்படுத்தி மனதிற்குள்ளேயே ஆடிக்கொண்டிருந்தேன். பட்டாம்பூச்சியைப் போல உணர்ந்தேன். இனி செல்ஃபீ எடுப்பதற்கு அடுத்த மகளிர் தினம் வரை காத்திருக்கத் தேவையில்லை எனத் தோன்றியது.

