வலைப்பதிவுகள்

15 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் கொழுப்பு, சத்தே இல்லாத மைதா மாவு, உருளைக்கிழங்கோ, காய்கறியோ சேர்த்திருந்தால் 4 கிராம் புரதம் அல்லது நார்ச்சத்து. எல்லாம் சேர்த்து மொத்தம் 200 கிகலோரிகளைக் கொண்ட உணவுப்பொருள். இதை பின்வருமாறும் சொல்லலாம்.

‘முக்கோணத்தில் ஒரு கோணத்தின் மொறுமொறுவென இருக்கும் மேல்பகுதியைக் கடித்தவுடன் உள்ளிருக்கும் ஆவி வெளியேறுவதைப் பார்ப்பீர்கள். சப்பாத்தியை உப்பு வத்தலாகப் போட்டது போன்றதொரு சுவை நாக்கில் தெரியும். மென்று விழுங்கி விடுங்கள். கடிக்கக் கடிக்க இதே சுவை தொடரும். ஆனால் மொறுமொறுப்புக் குறைந்து பல்லுக்கு இதமாக இருக்கும். ஆவி அடங்கி ருசித்துச் சாப்பிடுமளவு சூடு தணிந்திருக்கும்.   

இனி காத்திருப்பது அந்த அதிருசிப் புதையல். உங்கள் அடுத்த கடியில் மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயமும் மசாலாவும் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர். இந்தக் கரம் மசாலா சுவையை சைவமாக்க, மெதுமெதுவென வெந்த பச்சைப் பட்டாணித் தட்டுப்படுமானால் உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம். முதலில் இதை மட்டும் தனியாக அனுபவியுங்கள்.

அடுத்த கடியில், வெளிப்புறமிருக்கும் பொறித்த மைதா ரொட்டியுடன் மசாலாவை சேர்த்து உண்ணும்போது இந்தப் புதையலின் மகிமையை இன்னும் கொஞ்சம் அறிவீர்கள். மைதாவின் மொறுமொறுப்பா, மசாலாவின் மென்ருசியா, எதில் சுவை அதிகம் என்ற ஆனந்தக் குழப்பம் ஏற்படும்.

குழப்பம் ஏற்பட்டவுடன் அதே பகுதியில் முன்னேறிச் செல்வதை நிறுத்திவிட வேண்டும். சமோசாவின் மூன்று கோணங்களிலும் மொறுமொறுப் பகுதிகளிருக்கும். முதலாவது கோணத்தைக் காலி செய்து விட்டுத்தான் புதையலுக்குள் நுழைந்தோம். இனி இரண்டாவது கோணத்தைக் கடித்து, மசாலா சுவையை முற்றிலும் அகற்றி, பல்லையும் நாக்கையும் திகைப்பில் ஆழ்த்த வேண்டும்.

மறுபடியும் புதையலை நோக்கிப் பயணப்பட வேண்டும். மீதமிருக்கும் மசாலாவை சுவைக்கும்போது ஒரு ஞானம் பிறக்கும். உங்கள் வாழ்நாளில் இதைச் சுவைக்காமல் வீணடித்த நாள்களை எண்ணி வருந்துவீர்கள். பேரின்பம் என்ற சொல்லின் அர்த்தம் புரியும்.

இப்போது மூன்றாவது மொறுமொறுப் பகுதியும் கடைசி மசாலாத் துண்டும் இருக்கும். இதில் எதை முதலிலும், இரண்டாவதாகவும் கடித்து மோட்சத்துக்குச் செல்ல வேண்டுமென்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

இவ்வாறாக முக்கோண மோட்சத்தைத் தரக்கூடிய உணவுப்பொருளே சமோசா.’

இப்படியும் சொல்லலாம்.

தொடக்கப் பத்தியில் இருப்பதைத்தான் இனி அரசு அலுவலகங்களில் விற்கும் சமோசாக்களின் பக்கத்தில் எழுதி வைக்கவேண்டும் என்ற ஆணை பிறப்பித்திருக்கிறது அரசாங்கம். சமோசாவை ஆர்டர் செய்யக் காத்திருக்கும் நேரத்தில் நாம் இதைப் படிக்க நேரிடும். இது நமக்கு எவ்வளவு கொழுப்பு சேர்கிறது என்று ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துமாம். அதனால் எப்போதும் சாப்பிடும் மூன்று சமோசாக்களைக் குறைத்து ஒன்றோடு நிறுத்திக் கொள்வோமாம். இதுவே அரசாங்கம் நமது கொழுப்பைக் குறைக்கப் பரிந்துரைக்கும் திட்டம்.

இதைப் போல எத்தனையோ பார்த்துவிட்டோம். இதையும் பார்க்க மாட்டோமா?

சமோசா மட்டுமில்லை. இந்தத் திட்டத்தில் ஜிலேபியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. புரியாத ஜியோமெட்ரியின் பட்சண வடிவமான ஜிலேபியை எப்படிச் சுவைப்பது என்பதை இன்னொரு கட்டுரையில் கற்றுக்கொள்ளலாம். முதலில் இந்த அநியாயத்தை என்னவென்று பார்க்கலாம்.

சமோசா, ஜிலேபி இரண்டின் விற்பனையையும் மத்திய அரசு தடை செய்துவிட்டது என்றே முதலில் பொது ஊடகங்களில் செய்தி பரவியது. பொதுமக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். எங்கள் பிறப்புரிமையை மறுப்பது போலத்தான் சமோசாவை தடை செய்வதும் என்று கண்டனப் பதிவுகள் சமூக வலைத்தளங்களை நிறைத்தன.

உண்மைதான். மாலை நேர சிற்றுண்டி என்பது சமோசா இல்லாமல் முழுமையடையாது. பர்கர், பிரெஞ்சு பிரைஸ் போன்றவற்றை தினமும் சாப்பிடத் தடைவிதிக்கும் பெற்றோர்கள் கூட இன்றைய தலைமுறைக்கு சமோசாவைத் தயக்கமின்றித் தருகிறார்கள். வடஇந்திய சமோசா, தென்னிந்திய சமோசா என்று செய்முறையிலும் சுவையிலும் மாறுபட்டாலும், சமோசா என்பது ஒரு தேசிய உணர்வு என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் இந்திய வரைபடத்தின் நடுவே இரண்டு சமோசாக்களின் அடித்தளம் இருக்கும்படி படுக்க வைத்தால், இந்தியா முழுவதையும் அவை நிறைத்துவிடும். கின்றன. வைத்துப் பாருங்கள், புரியும்.

மக்களை ஆசுவாசப்படுத்த, அடுத்தடுத்த நாள்களில் சமோசாவுக்குத் தடை போன்ற செய்திகள் தடை செய்யப்பட்டன. ‘சமோசா என்றில்லை, எந்தவொரு உணவுப் பொருளின் பக்கத்திலும் அதிலிருக்கும் சர்க்கரை அல்லது கொழுப்பு விவரங்களைப் பொதுமக்களின் கண்ணுக்குத் தெரியும்படி வைக்கச் சொல்வதே இந்த ஆணை. அதுவும் அரசாங்க கேண்டீன்களில், இவற்றை விற்கும் இடங்களில் வைக்கச் சொல்லியிருக்கிறோம் அவ்வளவுதான்’ என்று அரசு பவ்யமாக விளக்கமாகச் சொன்னது. நாங்களும் தேசப்பற்று உடையவர்களே என்று தெளிவுபடுத்தியது. அதன் பிறகு எல்லோரும் சமோசா பற்றிய ஆணையை மட்டும் மறந்துவிட்டார்கள். சமோசாவை அல்ல.

இந்தப் பலகைகளில் அப்படி என்ன எழுத வேண்டுமாம்?  உதாரணமாக பத்து பக்கோடா 26 கிராம் கொழுப்பையும், 350 கிகலோரிகளையும் கொண்டது. ஒரு முழு பீட்ஸா 40 கிராம் கொழுப்பையும், 1370 கிகலோரிகளையும் கொண்டது. ஒரு குலாப்ஜாமூன் 32 கிராம் சர்க்கரையும், 200 கிகலோரிகளையும் உடையது என்றிருக்கும். (அதனால்தான் குலாப்ஜாமூனுக்குத் தமிழில் ‘பாகூறி குண்டு’ என்று பொருத்தமாகப் பெயர் வைக்கப்பட்டதோ என்னவோ?!) இதையெல்லாம் சொல்லிவிட்டு அந்தப் பலகையின் கீழ்ப்பகுதியில் ‘ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை மட்டுமே நமது உடலுக்குத் தேவை’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதையே ஒரு மாலை நேர சிற்றுண்டிக்குக் கணக்குப்போட்டால் எவ்வளவு வரும்? ஒரு பிளேட் சமோசாவும், ஒரு டீ அல்லது ஜூஸ் குடித்தாலே 500 கிகலோரிகளாகி விடுமாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுவதே 2000 கிகலோரிகள் தானாம். மூன்று வேளை சாப்பாடு, இரண்டு சிற்றுண்டி, சிலபல டீ, காபிகளை உள்ளே தள்ளும் வழக்கம் கொண்ட நம்மைப் போன்றவர்களுக்கு இதைப் படித்தாலே ரத்தக்கொதிப்பு எகிறுகிறதா இல்லையா?

சரி, இரண்டு பக்கோடாவை வாயில் போட்டுக் கொஞ்சம் சாந்தப்படுத்திக் கொண்டு யோசிப்போம். இதை எதற்காகச் சொல்கிறார்கள்? எண்ணி எண்ணிப் பணத்தைச் செலவு செய்வதைப் போல இனிமேல் கலோரிகளை எண்ணி எண்ணிச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை என்கிறார்கள்.

எண்ணெய் நல்லது. ஆனால் அது தீரும்வரை அதிலேயே மீண்டும் மீண்டும் உணவைப் பொரித்துண்பது பேராபத்து. இதயம், கிட்னி, கேன்சர் என உடலிலுள்ள செல் வரை பாதிக்கும் என்கிறார்கள். இதனால் ஏற்படும் நோய்களின் பட்டியலைத்தான் மருத்துவமனைகளின் நிபுணர் பட்டியலும் சொல்கிறது.

அப்படியென்றால் எதையுமே சாப்பிடக் கூடாதா? இல்லை. அளவறிந்து, கலோரி அறிந்து சாப்பிடுங்கள். 300 கலோரி கொண்டைக்கடலையோ, பாதாம் பருப்போ சாப்பிடுங்கள். அதேயளவு கலோரி கொண்ட சமோசா உங்களுக்கு நார்ச்சத்தையோ, வைட்டமின்களையோ தராது என்கிறார்கள். இதைப் பற்றிய விழிப்புணர்வே முக்கியம். அதற்குத்தான் இந்த சர்க்கரை அல்லது கொழுப்பு போர்டுகளின் மூலம் நமக்குக் கற்பிக்கிறார்கள். தெரியாத ஒன்றைக் கற்பது நன்றுதானே?

அதனால் பதற்றப்படாமல் முதலில் கற்றுக்கொள்ளப் பார்ப்போம். கற்றதும் அதன்படி நடக்க முயற்சி செய்வோம். இதனால் நமது பாரம்பரியத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடாது. அப்படியே இதனால் ஏதாவது மன உளைச்சலோ, கவலையோ ஏற்படுமானால் இருக்கவே இருக்கிறது நமது புதையல்.

வெங்காய சமோசா, பன்னீர் சமோசா, சிக்கன் சமோசா, ஏன் சாக்லேட் சமோசா வரை விதவிதமான புதையல்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது புதையலைத் தேடிச் செல்வது குற்றமில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பசியும் ருசியும் சமமானதே. புதையலைத் தேடுமளவு ஆரோக்கியத்தையும் கொண்டிருப்பதுதான் முக்கியம்.  


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன