என்னது, இந்தியா கேட் போகலியா?
அடுத்த நாள் டெல்லிக்குக் கிளம்ப அலாரம் அடித்தது. கூடவே ஒரு வாட்ஸ் அப் குறுஞ்செய்தியும் வந்திருந்தது. உங்கள் டெல்லி விமானமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. உங்களை ஏற்றிச் செல்ல இன்றைக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லை. ஆனாலும் கவலைப்பட வேண்டாம். உங்கள் பயணத்தை ரத்து செய்துவிடுங்கள். கூடிய விரைவில் பணத்தை திருப்பிக்கொடுத்து விடுகிறோம் என்றது. டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய வைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.
‘என்னது நாம இந்தியா கேட் போகலியா’ என்று அழத் தொடங்கினாள் மகள். அவளுக்கு டெல்லியில் தெரிந்த ஒரே இடம் அது. எங்களுக்கும் மும்பைக்கும் மட்டுமே செய்வினை வைத்திருந்தார்கள் என நினைத்திருந்தோம். அது மும்பை, டெல்லி என்றல்ல, நாங்கள் வீட்டைவிட்டேக் கிளம்பக் கூடாதென்று வைக்கப்பட்ட செய்வினை என்பதை அப்போதே உணர்ந்தோம். இதற்கு முன்னாலான மும்பை பயணங்கள் கைகூடாதபோது உறவினர்கள் எங்களை மெச்சியதெல்லாம் ஞாபகத்தில் வந்துபோனது. இதையும் சமாளிக்கத் தயாராகினோம்.
ஆனால் அந்தக் குறுஞ்செய்தியில் சிறிய எழுத்துகளில் ஏதோ எழுதியிருந்தது. பங்குச்சந்தை விளம்பரங்களில் அதன் ஆபத்தை விளக்கும் பொடி எழுத்துகளைப்போல. இன்றைய பயணத்துக்குப் பதில் நாளை அதே நேரம் மும்பைக்குச் செல்லும் விமானம் உண்டு. வேண்டுமானால் நீங்கள் அதில் பயணம் செய்யலாம். கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை என்று மறைந்திருந்தது அந்தச் செய்தி.
எங்கள் மும்பை பயணத்துக்கான கடைசி வாய்ப்பு அது எனத் தோன்றியது. மகளின் அழுகையைச் சமாளிக்கவும் அது உதவியது. கிடைத்த வாய்ப்பை விடுவதாக இல்லை. அடுத்த நாள் பயணத்துக்கு செக்-இன் செய்தோம். இது மூன்றாவது முறை. பெரிதாக நம்பிக்கை இல்லை.
அடுத்த நாளுக்கான விமானமும் ரத்தாகிவிட்டது எனக் குறுஞ்செய்தி வர எவ்வளவு நேரமாகப் போகிறது? விமானத்தின் டயர் பஞ்சராகிவிட்டது; உங்கள் இருக்கைகளில் மட்டும் சீட் பெல்ட் பிரச்னை, உங்கள் உயிர் எங்கள் பொறுப்பல்ல; வீட்டைவிட்டுக் கிளம்ப ஓலா, ஊபர் கூடச் சரியான நேரத்துக்குக் கிடைக்காமல் போகலாம். செய்வினை அப்படி. இருந்தாலும் பேக் செய்து வைத்திருந்த பைகளை அப்போதே பிரிக்க வேண்டாம் என்பது அதைவிட பெரிய விடுதலையாக இருந்தது.
உறவினர்களை தொலைபேசியில் அழைத்து செய்தியைத் தெரிவித்தோம். எப்படியும் எங்கள் வரவுக்கென அவர்கள் விசேஷத்தை ஒத்திவைக்கப் போவதில்லை. இருந்தாலும் மரியாதைக்காக சொல்லிவிடுவது நல்லது. நாளை வந்து சேர்ந்தால் பார்க்கலாம் என்றோம். எங்களை மும்பைக்குக் கடத்துவதில் அவர்கள் இன்னும் தீவிரமானார்கள். வேறு விமானத்திலாவது செல்லலாம் என்று பார்த்தால் டிக்கெட் விலை ஐந்து மடங்கு உயர்ந்திருந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து போகுமளவுக்கு நாம் ஒன்றும் ரஷ்ய ஆலிகார்க்குகள் இல்லையே. எல்லாம் இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் ஏற்பட்ட குளறுபடி. பஸ் கட்டணங்கள் கூட பல மடங்கு உயர்ந்திருந்தன.
இந்தத் தனியார் போக்குவரத்தை எல்லாம் நம்பாதீர்கள். உங்கள் காரை எடுத்துக்கொண்டு மும்பைக்கு வந்து சேருங்கள் என்றுகூட கருணையில்லாமல் உறவினர்கள் பரிந்துரைத்தார்கள். டிரைவரே ஓட்டினாலும் அவ்வளவு மணிநேரம் காரில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியாதென்று என் கணவர் மறுத்துவிட்டார். ரயில் வேண்டாமென்று விமானத்தில் புக் செய்தவர் எங்கிருந்து காரில் கிளம்பப் போகிறார்?
செய்வினையை மீறி ஸ்பைஸ் ஜெட் விமானத்துக்கு எங்களை மும்பைக்கு ஏற்றிச்செல்லும் சக்தி உள்ளதா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்தோம். அடுத்த நாள் வரைக் காத்திருந்துவிட்டு, விமானம் ரத்து செய்யப்பட்டால் பிறகு எங்கள் விடுமுறைகளையும் ரத்து செய்துவிடலாம் என்று திட்டமிட்டோம்.
சோகத்தில் மூழ்கியிருக்கும் சாக்கில் அன்று முழுவதும் கடையிலிருந்து உணவு ஆர்டர் செய்தும் ஓடிடியில் படங்கள் பார்த்தும் ஓய்வெடுத்தோம். டெல்லி, மும்பை கனவுகளை ஒத்தி வைத்தோம். இருப்பினும் டெல்லி செல்வதற்கென்றே கடைசி நேரத்தில் நிறைத்திருந்த ஸ்வெட்டெர், மாஸ்க் பையைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பதா, சோகமாவதா எனத் தெரியாமல் விழித்தோம்.
அன்று நடந்த இரண்டு சம்பவங்கள் எங்கள் சோகத்தை கிண்டல் செய்யும் விதத்தில் அமைந்தன. முதலாவதாக ஸ்பைஸ் ஜெட் விமானங்களின் முதலாளி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ‘இண்டிகோ விமான குளறுபடிகளால் பயணம் செய்ய முடியாமல் தவிக்கும் பயணிகளை நாங்கள் தேற்றுகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட கூடுதல் ஸ்பைஸ் ஜெட் விமானங்களை இயக்கி அவர்களை உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்கிறோம்’ என்றார். அதற்கான கட்டணம் எத்தனை மடங்கு என்பதைப் பற்றி அவர் வாய் திறக்கவேயில்லை. உலகம் அவரது சேவையைப் பாராட்டியது.
மற்றொரு சம்பவம். எங்கள் உறவினர்களுள் இருவர் திருச்சி-சென்னை வழியாக மும்பைக்குச் செல்ல இண்டிகோ விமானத்தில் ஏற்கெனவே புக் செய்திருந்தார். எங்கள் கதையைக் கேட்டவர்கள் நிச்சயம் அவர்களுக்கு வாய்ப்பில்லை என்றே நம்பினார்கள். ஏனோதானோவென்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தவர்கள் அங்கிருந்து சென்னைக்கு வந்து, மும்பைக்கும் சென்று சேர்ந்தார்கள்.
மும்பையிலிருக்கும் உறவினர்கள் எங்களை என்ன நினைத்திருப்பார்கள்? பிரச்னைக்குரிய இண்டிகோ விமானமே சரியாக வந்து சேர்ந்துவிட்டது. ஸ்பைஸ் ஜெட்டில் புக் செய்த நாங்கள் வேண்டுமென்றே நாடகமாடுகிறோம் என்றே அவர்களுக்குத் தோன்றியிருக்கும். மும்பை மட்டுமல்லாமல் டெல்லிக்கும் செல்ல நாங்கள் கூடுதல் பையை பேக் செய்து வைத்திருந்ததெல்லாம் அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? அடுத்த நாள் காலைவரை வேறெந்த குறுஞ்செய்தியும் வரக்கூடாதென்று பிரார்த்தனை செய்தபடி அன்றிரவு தூங்கினோம்.
அப்போதும் குறுஞ்செய்தி வந்திருந்தது. விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் என்று அனுப்பியிருந்தார்கள். எது எப்படியிருந்தாலும் சரி என சீக்கிரமாகக் கிளம்பி விமான நிலையத்துக்குச் சென்றுவிட்டோம். காத்திருந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்குள் ஒரு குட்டிச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டோம். கையில் கொண்டுசென்ற காலை சிற்றுண்டியை முடித்து, ஸ்னாக்ஸைக் கூடப் பிரித்தோம்.
மூன்று மணிநேரத்துக்குப் பிறகு விமானத்தில் ஏற எங்களை பஸ்ஸில் கூட்டிச்சென்றார்கள். அதோ மும்பைக்குச் செல்லும் விமானம் எங்கள் கண்முன் தெரிந்தது. ஆனால் பஸ்ஸிலிருந்து எங்களை இறங்க விடவில்லை. விமானத்தைச் சுத்தம் செய்கிறார்கள் என்றார்கள். ஒரு மணிநேரம் ஆனது. அப்படியே திருப்பி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற பயம் இல்லாமல் இல்லை. ஆனாலும் எப்போது விமானத்தில் ஏறுவோம் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம் நம்பிக்கையுடன் பதிலளித்தோம். நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கு மணிநேரத் தாமதத்துக்குப் பிறகு நாங்கள் மும்பையில் தரையிறங்கினோம்.
எங்களுக்கு வைத்திருந்த செய்வினையை முறித்துவிட்டோம் என்பதே முதல் நிம்மதி. முதல்முறையாக விமானத்தில் பறந்ததில் எங்கள் மகளுக்குப் பெருமகிழ்ச்சி. ஆனாலும் காத்திருந்த சோர்வில் விமானத்திலிருந்த நேரம் பெரும்பாலும் தூங்கிவிட்டோம்.
செய்வினை வேறு வடிவத்தில் மும்பையிலும் எங்களைத் தொடர்ந்ததை நாங்கள் அறியவில்லை.
(தொடரும்)

