‘ஒரு பைசா உங்ககிட்ட கேட்கல. நான் சேர்த்து வச்சதில வாங்கறேன். இப்ப அதுக்கு என்னங்கறீங்க?’ என்று படுத்தபடியே புலம்பிக் கொண்டிருந்தார் செல்லா பாட்டி.
‘எனக்குத் தெரியாம எதுக்குன்றேன்?’
தாத்தாவின் அதட்டலுக்குப் பதில் இல்லை. கண்களை மூடினார். தூங்கிப் போனதாக நம்ப வைத்தார்.
அம்மம்மாவின் பாத வெடிப்புகளுக்குப் பேரப்பிள்ளைகள் ஆளுக்கொரு பக்கமாகக் களிம்புத் தடவி விட்டார்கள். நாள் முழுவதும் ஓய்வில்லாமல் உழல்பவை. அதுவே மரக்கட்டையாக இருந்திருந்தால் இந்நேரம் வளையங்களுக்குத் தகுந்தவாறு மதிப்புக் கூடியிருக்கும். கிழவியின் கால்கள் பாளமானதே மிச்சம்.
அலைபேசி ஒலித்ததும் உறங்கும் நாடகம் முடிவு பெற்றது. பொருள் தயாராகி விட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எழுந்து அவசரமாகச் செருப்பு அணிந்துகொண்டு கிளம்பினார். மறுமொழி வராது என்பதால் இம்முறை கேள்வி கேட்கப்படவில்லை.
இரு ஜோடி கொலுசுகளுடன் வீடு வந்து சேர்ந்தவர் அப்போதே பெருமிதத்தோடு அவற்றைப் பேத்திகளுக்கு அணிவித்தார். அவர்களை நடக்கவும் ஓடவும் ஆடவும் சொல்லி திருஷ்டி கழித்தார். பிறகு பிசுக்குப் படிந்திருந்த தனது காலணிகளை கழுவினார்.

