வலைப்பதிவுகள்

ஊரில் தனியாக இருக்கும் பாட்டிக்கு பிறந்தநாள் பரிசாக என்ன அனுப்பி வைப்பது? புடவை, ஹேண்ட்பேக் போன்றவற்றை வருடா வருடம் மகனும் மகளும் கொடுத்து விடுகிறார்கள். கூடும் சந்தர்ப்பம் அமைந்தால் கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள்.

பேரனும் பேத்தியும் கலந்தாலோசித்தார்கள். பெரும்பாலான உரையாடல்களில் அவர் நினைவுகூர்வது அன்பு கணவரையே. இறந்து பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் வாழ்க்கை முழுவதற்குமான நினைவுகளை சேகரித்து வைத்திருந்தார்கள். வீட்டுப் பராமரிப்பு வேலைகள், சமையலுக்கு காய் நறுக்கித் தரும் நேக்கு, பல கிலோமீட்டர்கள் நடக்கும் சாகசங்கள், இரண்டு நாள் தாங்காத மௌன விரதச் சண்டைகள் என ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்.  

அம்மம்மாவுக்கு பிடித்தவரையே பரிசிலளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். தாத்தாவின் உருவப்படத்தை வரைவது சிரமம்தான். இருந்தாலும் வெள்ளை தெரியாமல் கறுப்பாக்கப்பட்ட முடி, நீள மூக்கு, கூரிய பார்வை கைகூடினால் அடையாளப்படுத்திவிடலாம்.

தோராயமாக அம்மப்பாவை சார்ட்டில் தீட்டினார்கள். அனுப்பிய ஓவியத்தை நெஞ்சோடு அணைத்தபடி வாட்ஸ் அப்பில் காட்சி தந்தார். கண்களில் தெரிந்தது பரவசம். நினைவுநாளில் அதுவும் அலமாரியில் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன