மாமனார் இல்லாத முதல் ஈஸ்டர் பண்டிகை. குழந்தைகளோடு அனைவருமாகச் சேர்ந்து கொண்டாடினோம். புதிய புடவைகளைக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். முழங்காலில் இருந்து சிலுவை வாங்கிக்கொண்டோம். இத்தனை வருடங்கள் நடந்தபடியே மாற்றம் இல்லாமல் எல்லாவற்றையும் செய்தோம். கூடுதலாக கல்லறைக்கு மட்டும் குடும்பமாகச் சென்று வந்தோம்.
மதிய விருந்துக்குப் பின் சேலைகளைப் பிரித்துப் பார்த்தார் மாமியார்.
‘அம்மா, இது நான் எடுத்தது.’ கிரீம் வண்ணத்தில் மெரூன் பூக்களாக இருந்ததைக் காட்டிப் பெருமைபட்டுக் கொண்டார் மகன்.
‘ரொம்ப நல்லா இருக்குப்பா. அப்பாவும் இதே மாதிரிதான் எடுத்துக் குடுப்பார்’ என்றார்.
‘எதுக்கும்மா இரண்டு எடுக்கறீங்க? ஒண்ணு போதாதா?’ எனச் சொல்லியபடியே உள்ளே தூக்கிப் போனார்.
ஊதா நிறத்தில் செம்பு பூக்களும் பார்டருமாக இருந்த இன்னொன்றை விரித்துப் பார்த்தார். முதலில் தொட்டுத் தடவினார். பிறகு மேலாக உடுத்தி திருப்தியுடன் கண்ணாடியில் ரசித்தார்.
‘பிடிச்சிருக்கா அத்தை?’ என்று கேட்டேன்.
‘பின்னே? இவ்வளவு வருஷமா இந்த நிறம் டல் அடிக்கும்னு மாமா எடுக்கவே விட்டதில்லை. எனக்கு அழகா இருக்கில்ல?’ என மெதுவாக வினவினார்.

