மதிய சாதம் மீதமாகிவிட்டது. இனி ராத்திரிக்குச் சப்பாத்தி செய்தாலும், நாம் மட்டும் விரதம் போல இந்த சாதத்தை சாப்பிட்டு முடிக்க வேண்டுமே என்ற கவலை இனி வேண்டாம். சாதம் என்ன, பொரியல் மீதியிருந்தாலும், காலிசெய்ய ஒரு வழியிருக்கிறது.
தண்ணீர் விடாமல் மீதமான சாதத்தை, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். வீட்டுப் பெரியவர்களின் பல் வலிமைக்கேற்ற அளவுப் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம். பொரியல் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். அலங்கரிக்க, சிறிதாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்துமல்லி இலை. இன்னும் கலர்ஃபுல்லாக்க சன்னமாக வெட்டிய கேரட் சேர்க்கலாம். சுண்டல், சன்னா மசாலாக்களின் மேலே கடைகளில் தூவித் தருவார்களே, அதுபோல. எண்ணெயில் பொரிக்கப் போவதால், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்ப்பது அவசியம். இவையெல்லாம் சேர்ந்தால் பூரணம் தயார்.
இனிப் பூரணத்தைப் பேக்கிங் செய்ய போண்டா மாவும், தண்ணீரும் போதும். குழந்தைகளுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல; பேக்கிங் தான் முக்கியம். அதனால் ரெடிமேட் பஜ்ஜி போண்டா மாவு, அல்லது வீட்டு மாவு. எது சுவையாக இருக்குமோ அதைத் தேர்வு செய்யுங்கள். வீண் பெருமைக்கு ஆசைப்பட வேண்டாம்.
இந்த நிலையில் முதல் டெஸ்டிங் அல்லது டேஸ்டிங்கைத் தொடங்கலாம். அனைத்தையும் நன்றாகக் கலந்துவிட்டு, உப்பு, காரத்தின் அளவை சரிபார்க்க வேண்டும். பொரியல் சேர்த்திருந்தால், அதன் காரமும் கூடியிருக்கும். சாதம் அதிகமாக சேர்த்திருந்தால், சிறிதளவு உப்புக் கூடுதலாகத் தேவைப்படும். உங்கள் வீட்டளவு உப்பும், காரமும், சரிபார்த்த பின்பு எண்ணெயில் பொரிக்க வேண்டியதுதான்.
சிறிய போண்டா அளவுக்குக் கையில் உருண்டைகள் பிடித்து, எண்ணெயில் போடுங்கள். சாதத்தைத் தண்ணீர் விடாமல் அரைத்திருந்தால் மட்டுமே, போண்டாப் பதத்திற்கு கையில் பிடிக்க முடியும். இல்லையென்றால் பூந்தி மட்டும்தான் வரும். சிறிதாக இருந்தால் சிற்றுண்டி என்று அழைப்பதற்குப் பொருத்தமாக இருக்கும். சாப்பிடவும் எளிதாக இருக்கும்.
எண்ணெயில் உள்ளே இருப்பவை வேகவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஏற்கனவே சமைத்தது தானே. அதனால் ஃபிரெஞ்சு ஃபிரைஸ் (golden brown) நிறம் வந்தவுடனேயே எடுத்து விடலாம். இந்நேரம் வீட்டில் இருப்பவர்களுக்கும் மணம் சென்று சேர்ந்திருக்கும். குழந்தைகளைக் கூப்பிட்டு, அடுத்தகட்ட டெஸ்டிங் அல்லது டேஸ்டிங்கைத் தொடரலாம்.
சூடான போண்டாப் பந்தை, பௌலிங் போடத் தயார் செய்வதுபோல இரு கைகளுக்கும் மாற்றிமாற்றி வித்தைக் காட்டலாம். பிறகு சிறிது பிய்த்து மூன்றுமுறை உஃப், உஃப், உஃப் என்று ஊத வேண்டும். போண்டாவின் ஆவி வெளியேறுவதற்கு முன், வாயில் போட்டுவிட வேண்டும். வெளியே மொறுமொறுவென்று இருந்தாலும், உள்ளே மெதுமெதுவென இருக்கும். என்ன வெறும் மாவு மட்டும்தானா, என்று நினைக்கும்போதே, வெங்காயம் அல்லது பொரியல் நாக்கில் தட்டுப்பட்டுவிடும். அதைக்கடித்து முடிப்பதற்கு, நமது அலங்காரப் பொருட்களான கறிவேப்பிலை அல்லது கொத்துமல்லி இலைகள் உதவி செய்யும். வெளியே இருக்கும் மொறுமொறுப்பையும், உள்ளிருக்கும் மெதுமெதுப்பையும் சமன் செய்து உண்போர் நளனின் வம்சத்தில் வந்தவர்கள்.
குழந்தைகளுக்கு போண்டா மட்டுமேப் போதுமானதாக இருக்கும். அவர்கள்தான் ஃபிரெஞ்சு ஃபிரைஸ், ஃபிரைட் ரைஸ் பரம்பரை ஆயிற்றே. மொரிங்கோ, அத்தோ, மாப்போ போன்றத் தகுந்த சைனீஸ் பெயர் வைத்துவிட்டால் போதும். சாதத்தில் செய்ததனால், சத்தோ என்ற பெயரும் பொருந்தலாம். பெயர் சூட்டுவது, உங்கள் பாடு.
பெரியவர்களுக்கு வேண்டுமானால் காரமான தக்காளிச் சட்னியோ, புளிப்புச் சட்னியோத் தேவைப்படலாம். வடை போன்றவற்றைக் கடிக்க முடியாமல் அவதிப்படும் பெரியவர்களுக்கு, இந்த மெதுமெது போண்டா, மன சாந்தியைத் தரும். காய் சாப்பிட மறுக்கும் குழந்தைகளையும் ஏமாற்றி விடலாம். மீதமிருக்கும் சாதத்தை சாப்பிட்டு முடிக்கும் விரதத்திலிருந்தும் நீங்கள் தப்பித்து விடலாம். இப்படி இதன் நன்மைகளின் லிஸ்ட் நீளம். என்ன, எண்ணெயில் பொரித்தால் கொஞ்சம் எடைகூடும். இல்லாவிட்டால் மட்டும் என்ன, வேகவைத்த பயறு வகைக ளையோ அல்லது சுண்டலையோ சாப்பிட்டுவிடவாப் போகிறோம்… வீட்டு எண்ணெயில் தயாரித்த, ஆரோக்கியமான போண்டா என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
டேஸ்டிங் முடிந்தபின், இனி முழு வீச்சில் வேலையை ஆரம்பிக்கலாம். அடுத்தடுத்த போண்டாக்களை சுடும் சமயத்தில்தான், டீ அல்லது காபியைத் தயாரிக்க வேண்டும். இன்ஸ்டன்ட் காபி என்றால், பாலை மட்டும்தான் காய்ச்சி வைக்க வேண்டும். எப்போது தட்டு நிறைய போண்டாக்களோடு சாப்பிட உட்காருகிறோமோ, அப்போது கலந்து கையில் எடுத்துக் கொண்டால் போதும். சூடான போண்டா ஒரு வாய் கடித்து விட்டு, டீ / காபியைக் கண்மூடி உறிஞ்ச வேண்டும். லிப்டன் தாஜ் விளம்பரத்தில் வரும் பெண்மணிக்குப் பின்னணியில் கேட்கும் பாடல் மெலிதாகக் கேட்கும். கண் திறந்தால், அந்த தோகை விரித்த, வெள்ளை மயில் நமக்கும் தெரியும்.

