
வினுலா, சர்வதேச அரசியல், வரலாறு, யுத்தங்கள், உணவு உள்பட பல்வேறு துறைகள் சார்ந்து எழுதி வரும் தமிழ் எழுத்தாளர். தொழில் முறை மென்பொருளாளர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து சர்வதேச அரசியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். போர் குறித்த அரசியலையும் வரலாற்றையும் சார்ந்து இதுவரை மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வினுலாவின் பெற்றோர் அரசாங்க ஊழியர்களாகப் பணி புரிந்தவர்கள். வினுலா பிறந்தது, படித்தது எல்லாம் அங்குதான். மென்பொருளாளராகப் பணிபுரிய சென்னைக்கு வந்தவர் தற்போது குடும்பத்துடன் சென்னைவாசி ஆகிவிட்டார்.
தனது சொந்த அனுபவங்களை ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய வினுலா, தமிழிலும் எழுத முயற்சி செய்தார். தமிழின் முக்கிய எழுத்தாளர் பா. ராகவனின் எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் பயின்றபின் எளிய தமிழில் எழுதத் தொடங்கினார். புதிய எழுத்தாளர்களின் தளமாக விளங்கும் மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
வினுலாவின் முதல் புத்தகமான யுத்த காண்டம் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ஆதாரங்களோடு ஆவணப்படுத்துகிறது. போரின் பின்னணியில் இயங்கும் அரசியல், பொருளாதார, ராணுவக் காரணங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது. போர்க்களமாகியிருக்கும் உக்ரைனில் மக்கள் படும் அவலங்களையும் அதைப் பொருட்படுத்தாமல் எதிர்கொண்டு வெல்லத் துடிக்கும் அவர்களது வேட்கையையும் வேர் வரை ஆராய்கிறது.
இதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது புத்தகமான திறக்க முடியாத கோட்டை வெளிவந்தது. ரஷ்யாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றை விவரிக்கும் நூல் இது. ஜார் மன்னர்களிடமிருந்து விடுதலை பெற்றதிலிருந்து இன்றுவரை உலகின் வல்லரசுகளில் ஒன்றாக நீடிக்கும் ரஷ்யாவின் பயணத்தை விவரிக்கிறது இந்தப் புத்தகம். ஜனநாயகத்தை மட்டுமே பரவலாக அறிந்திருக்கிற தலைமுறைக்கு, கம்யூனிச, சர்வாதிகார ஆட்சிகளை இது அறிமுகப்படுத்தும்.
வினுலாவின் மூன்றாவது புத்தகமான போரிடர்க் காலம் மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. யுத்தங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள்? அதன் உத்திகள், படைத்திறன், ஆயுத பலம், திருப்பங்கள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளை விவரிக்கும் புத்தகம் இது. அணுகுண்டுக்கு முந்தைய கால யுத்தங்களில் தொடங்கி, இன்றைய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆளும் யுத்த காலம் வரை என்ன நடக்கிறது, என்னவெல்லாம் இனி நடக்கப் போகிறதென்று அப்பட்டமாக உடைத்துப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
வினுலாவின் அடுத்த எழுத்து முயற்சி வாட்ஸப் சேனலில் நடந்தது. உளவாளிகளின் உலகத்தை அவர்களது கண்கொண்டு பார்க்கும் Life Of Spy அபுனைவுத் தொடராக நாள்தோறும் சேனலில் வெளிவந்தது. வாசகர்களின் பேரன்பையும் ஆதரவையும் பெற்ற இந்தத் தொடர் விரைவில் புத்தகமாக வெளிவரும். இதை அடுத்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் வாழ்க்கையை மெட்ராஸ் பேப்பரில் தொடராக எழுதி வருகிறார்.
