பேருந்துப் பயணத்தில் ஜன்னலோரம் கிடைத்தும், வேடிக்கைப் பார்க்கவில்லை அந்தப் பெண். அதை விட முக்கியமான பணியில் இருந்தார். கையில் வைத்திருந்த ஏதோவொன்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் போட்டு ரசித்துக் கொண்டிருந்தார்.
அவர் கை வாயருகே செல்லும் போதெல்லாம், அருகில் அமர்ந்திருந்த எனக்கும் இனிப்பின் மணம் பரவியது. கண்டிப்பாக அது இனிப்புதான். ஆனால் சாக்லேட் இல்லை. அதில் இவ்வளவு மணம் வர வாய்ப்பில்லை. சாக்லேட்டின் இனிப்பு, சர்க்கரையின் இனிப்பை விட வித்தியாசமானது. பக்கத்திலிருந்த எனக்கும் அதன் சுவையை உணர வைக்கும் சாமர்த்தியம், சாக்லேட்டிற்குப் பத்தாது.
அது என்னவென்று தெரியவில்லை. அவர் நேராக முன்னால் பார்த்தபடி, ரசித்து ருசித்துக் கொண்டிருந்தார். அவர் பக்கம் திரும்பி, நான் அவரது கையைப் பார்த்தால், அது அவருக்குத் தெரிந்துவிடும். அப்படிப் பார்க்க எனக்கு வெட்கமாக இருந்தது. நான் நான்கு வயது சிறுமியாக இருந்திருந்தால், இந்நேரம் இப்படி அனத்திக் கொண்டிருக்க மாட்டேன். முதல் கடியிலேயே அவர் வாயைப் பார்த்திருப்பேன். அவரும் ஆசையாக எனக்கும் அதைப் பகிர்ந்தளித்திருப்பார். என்ன செய்வது, வளர்ந்து விட்டேனே.
பொறுமை பலன் தந்தது. அவர் ரசித்து முடித்துவிட்டார். வெளியே வேடிக்கைப் பார்க்கத் திரும்பியும் விட்டார். இதுதான் சமயம். அவர் கையைப் பார்த்தேன். எனக்காகவேக் காத்துக் கிடந்தன இரண்டு போபன் பிஸ்கட்டுகள். கப்பூச்சியன் சபையைச் சேர்ந்த பாதிரியார் அணியும் அங்கி போன்ற, டார்க் பிரவுன் பிஸ்கட்டுகள். சாண்ட்விச்சைப் போல அடுக்கப்பட்டிருந்தன. உள்ளே சாக்லேட் பட்டர் கிரீமும், வெளிப்புறம் சர்க்கரையும் தூவியிருந்தது. பார்த்தவுடன் மீண்டும் மூளைக்கு இனிப்பின் மணம் பரவியது.
அந்தப் பெண் மறுபடி நேராகத் திரும்பினார். என்னைக் கவனித்திருப்பாரோ என்று பயந்தேன். பேருந்து நின்றது. அவசரமாக எழுந்தார். கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டைப் பத்திரமாகப் பையில் போட்டுக் கொண்டே, என்னைக் கடந்து இறங்கிப் போனார். அவர் மறையும்வரை என் கண்கள் அவரது பையைத் தொடர்ந்தன.

