வலைப்பதிவுகள்

மோனிகா… பேபிமா மோனிகா தெரியும். அதென்ன பேபின்கா?

ஏழு அடுக்குகளால் ஆன கோவாவில் தயாரிக்கப்படும் கேக். இனிப்புகளின் ராணி என்ற பெருமைக்குரியது.

குழந்தைகள் கிரீம் பிஸ்கட்டைச் சாப்பிடுவது போலத்தான் இந்த பேபின்காவையும் அணுக வேண்டும். கேக் சாப்பிடுவது போல முதல் கடியிலேயே மேலிருந்து கீழாகக் கடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக ஒவ்வொரு அடுக்காகக் கடிக்க வேண்டும். நிறத்தை வைத்து அடுக்குகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

மேற்புறம் முட்டையுடன் இனிப்புக் கலந்த சுவையில் ஆரம்பிக்கும். பிறகு கேரமலின் இனிப்பு மட்டும் தெரியும். கீழே செல்லச்செல்ல இனிப்புக் கூடிக்கொண்டே போகும். நான் சுவைத்த பேபின்கா பாக்கெட்டில் வந்ததால், கேக்கைப் போல மிகவும் மென்மையாக இருக்கவில்லை. நேரடியாக கோவா பேக்கரிகளில் சுவைத்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்த்துகீசியக் கன்னியர்கள் துணிகளுக்குக் கஞ்சி போட முட்டைகளின் வெள்ளைக் கருவை உபயோகித்தார்களாம். இதனால் மீதியான மஞ்சள் கருவை என்ன செய்யலாம் என்று யோசித்த சிஸ்டர் பேபியானா கண்டுபிடித்ததுதான் இந்த ஏழடுக்கு கேக்.

போர்த்துகீசிய இனிப்புகளை அடுக்கடுக்காகச் செய்வது வழக்கம். முட்டையின் மஞ்சள் கருவுடன், கோவாவில் பஞ்சமின்றிக் கிடைத்த தேங்காய்ப் பாலையும் சர்க்கரையையும், சிறிது பச்சரிசி மாவுடன் சேர்த்து இந்த ஏழடுக்குக் கேக்கை உருவாக்கினார் சிஸ்டர் பேபியானா. சுவைக்க கொடுத்தவருக்குப் பாராட்டுக் குவியவில்லை.

ஏழு அடுக்குகள் மட்டுமே உள்ளனவா என்று சலித்துக் கொண்டார்களாம், அந்தக் கல்நெஞ்சக்காரர்கள். குறைந்தது பன்னிரண்டு அடுக்குகளாவது செய்யுங்கள் என்றார்களாம். பொறுமையின் உருவான பேபியானா, பதினாறு அடுக்குகளைச் செய்து அசத்தினாராம். இப்படியும் அந்தக் காலத்தில் பொறுமை காத்திருக்கிறார்கள்!

முதல்முறையாக ஏழடுக்குகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதால், இன்றும் கோவா மக்கள் அதையேப் பின்பற்றுகிறார்கள். பண்டிகைகளின் போது மட்டும் செய்யப்பட்டு வந்த இந்த கேக், இப்போதெல்லாம் பிஸ்கட்டுகளைப் போல பேக் செய்யப்பட்டுக் கடைகளில் கிடைக்கிறது. இதன் ஒவ்வொரு அடுக்கையும் தனித்தனிச் சுவையுடன் செய்ய, குறைந்தது அரைமணி நேரம் ஆகும் என்கிறார்கள். அன்று அந்த சிஸ்டருக்கு இருந்த பொறுமை இருந்தால் மட்டுமே இதைச் செய்வது சாத்தியம்.

இதைச் செய்வதற்கு மூலப்பொருள்களை விடப் பொறுமையே மிகவும் அவசியமாகிறது.

பதினைந்து முட்டைக்கருவும், பொடி செய்த சர்க்கரையும், தேங்காய்ப் பாலும்… படிக்கும்போதே இனிப்பின் சுவை மூளைக்குச் செல்கிறதல்லவா?

இவற்றோடு சிறிது பச்சரிசி மாவும், வாசனைப் பொடிகளும் ஒரு துளி உப்பும் சேர்த்த கலவையை அவனில் வைத்தால் தீர்ந்தது. ஒரு அடுக்கு தயார். மேல்பகுதியில் அழகாக சர்க்கரைப் பாகில் (கேரமல்) விதவிதமாக வரைந்து அலங்கரிக்க வேண்டும்.

இனிமேல் தான் ட்விஸ்ட். அரைமணி நேரத்தில் தயாராகிவிடும் மேற்சொன்ன கேக்கை அப்படியே சாப்பிட்டால் அது பெபினிகா ஆகாது. முதல் அடுக்கை வெளியே எடுத்தபின், மறுபடியும் முட்டைக் கலவையையும், சர்க்கரைப் பாகையும் ஊற்றி மீண்டும் நான்கு நிமிடம் வேக வேண்டும்.

இப்படி ஏழு முறை செய்தபின் கிடைப்பதே இந்த ஏழடுக்கு இனிப்பு ராணி. ஏழு ஸ்வரங்களைப் போன்றே ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு விதமாக ருசிக்கிறது.

பேபிமா மோனிகாவைப் போல பேபின்காவும் ஒரு அதிசயம் என்பேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன