வலைப்பதிவுகள்

கொழு கொழுவென இருப்பதால் கொழுக்கட்டை என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். மொழுமொழு என்றிருப்பதால் திபெத்தியர்கள் அதற்கு மோமோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும். ஆவியில் அவித்த பண்டங்களை திபெத்திய மொழியில் மோமோ என்றே அழைப்பார்கள்.

பாட்டிமார்கள் சிறுகச்சிறுக காசை சேர்த்து வைக்கும் சுருக்குப்பை தெரியுமல்லவா? பொடிப்பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சுருக்குப்பைக்குள் போட்டு இறுக்கி மூடி, அதன் வாயை அகற்றியதைப் போலக் கமுக்கமாகத் தட்டில் அமர்ந்திருக்கும் இந்த மோமோக்கள். சூதுவாது அறியாத இவற்றுக்கு நாலும் சொல்லிக் கொடுக்க பூண்டு, தக்காளி சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் பக்கத்தில் வைத்திருப்பார்கள். காரம் சாப்பிட்டுப் பழகியிருக்காத குழந்தைகள் மோமோவை அப்படியே வாயில் போடலாம். விவரமறிந்த பெரியவர்கள் மோமோவின் ஓரத்தில் சட்னியைத் தொட்டு வாயில் போட வேண்டும்.

பூண்டின் காரமும் தக்காளியின் புளிப்புமாக முதலில் அந்த சட்னியின் சுவை நாக்கில் தெரியும். பிறகு அதன் காரம் மெல்ல மெல்லக் குறைந்து மைதாவின் மென்மையோடிருக்கும் மோமோவின் மொழுமொழுப் பகுதியைக் கடிப்பீர்கள். சட்னியின் காரம் இந்நேரம் தீர்ந்து போயிருக்கும். இனி சின்னதாக நறுக்கிய வெங்காயம், கோசு, பன்னீருடன் உப்பும் மிளகும் சேர்த்து அந்த மென்மையான பகுதியைச் சுவைப்பீர்கள். இப்போதுதான் மோமோவின் பூரணத்துவம் தெரிய வரும்.

அடுத்த கடியின்போது காரச் சட்னியை ஒதுக்கி வைத்துவிடுங்கள். மோமோவும் அதனுள்ளிருக்கும் காய்கறிகளும் மட்டும் போதும். பாவம் நீங்கிய புனித நிலைக்குச் செல்வீர்கள். ஆனால் அதே நிலையைத் தொடர முடியாது. மனிதர்கள் பலவீனமானவர்கள். மீண்டும் காரச் சட்னியைத் தேடுவீர்கள். அதோடு மோமோவை விழுங்கியபின் கடைசிக் கடியை மயோனீஸ் தொட்டு சமன் செய்வீர்கள். அடுத்த மோமோவை மீண்டும் சட்னியில் நனைத்துத் தொடங்குவீர்கள்.

மோமோவின் ஒவ்வொரு கடியும் உள்ளிருக்கும் வெங்காயத்தைப் போலச் சிறியதாக இருக்க வேண்டும். ஒரே மோமோவை பலவிதமாகச் சுவைத்து வயிறு நிறைந்த பின்னரே ஒரு உண்மை தெரிய வரும். உங்களோடு வந்திருப்பவருக்கு ஒன்றுகூடத் தராமல் நீங்களே தட்டைக் காலி செய்திருப்பீர்கள். மீண்டும் ஆர்டர் செய்து அவர்களுக்கு மோமோ தயாராகி வரும்வரை சாந்த நிலையில் ஆழ்ந்திருங்கள். அர்ச்சனையின் போது குருக்கள் மட்டுமே வாய் மூடாமலிருப்பார். சந்நிதியிலிருக்கும் சாமி வாய் திறப்பதில்லை. 

திபெத், நேபால் போன்ற இமாலயப் பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்டவை மோமோக்கள். இறைச்சி அல்லது காய்கறிகளைத் துண்டுதுண்டாக நறுக்கி, மைதாமாவுக்குள் வைத்து அவித்து உண்பது பதினான்காம் நூற்றாண்டிலிருந்து வழக்கமாக இருந்து வருகிறது. இதையே எண்ணெய்யில் பொரித்து உண்பதும் உண்டு. சீனா, இந்தியா என தெற்காசிய நாடுகள் பிரிவதற்கு முன்னரே மோமோக்கள் தோன்றிவிட்டன. அதனால் இப்போதிருக்கும் நாட்டின் எல்லைகளுக்குள் அதை அடைக்க முடியாது.

தினமும் லட்டு தின்று தின்று தொந்தி வந்ததாம் பிள்ளையாருக்கு. இதனால் கவலையடைந்த அம்மா பார்வதி, தேங்காய் வெல்லப் பூரணத்தோடு ஆரோக்கியமாகவும் சுவையாகவும் அவருக்குச் செய்து கொடுத்த பண்டமே கொழுக்கட்டை. இதையே விநாயகர் சதுர்த்தியன்று தவறாமல் பிள்ளையாருக்குப் படைக்கிறோம்.  

ஏசுநாதரை உபசரித்து விருந்தளித்த சீடர் மார்த்தாவும் அவருக்குக் கொழுக்கட்டை செய்து கொடுத்ததாக வரலாறு உண்டு. அதனாலேயே ஒவ்வொரு வருடமும் குருத்து ஞாயிறன்று கேரள கிறிஸ்தவர்கள் இதைச் செய்து வருகிறார்கள். அரிசி மாவில் தேங்காய் வெல்லப் பூரணத்தோடு உருவான கொழுக்கட்டை, பின்னாளில் மரபணு மாற்றத்தால் திரிந்து மைதா மாவில் செய்த மோமோவானது.

அந்தந்த பிரதேசங்களில் கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற பிரதான தானியத்திலிருந்து, எந்தச் சுவையும் தனித்துத் தெரியாத மான்டோ, மோமோ, பிரட், பன் போன்றவற்றை உருவாக்கிக் கொள்வது. பின்னர் மசாலா சேர்த்த காய்கறிகளையோ இறைச்சியையோ உள்ளே வைத்து விதவிதமாகச் சுருட்டியோ, மடித்தோ, நடுவில் வைத்தோ உருவாகியுள்ளன புதுவிதமான பண்டங்கள். இவற்றை அவிப்பதும், பொரிப்பதும், பச்சையாக உண்ணுவதுமாகச் செய்முறையிலும் வித்தியாசப்படுத்தி உருமாறி வந்துள்ளது உணவின் வரலாறு. அவ்வளவுதான்.

மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பின், மோமோக்களின் வகைகள் பல்கிப் பெருகின. அவித்த, பொரித்த மோமோக்களோடு தந்தூரி மற்றும் சூப் மோமோக்களும் உருவாகின. உள்ளிருக்கும் பண்டங்கள் அவரவர் மாநில புனிதங்களுக்குக் கட்டுப்பட்டு புதுப்புது சேர்க்கைகள் உருவாயின. காய்கறிகள், இறைச்சியைப் போல இப்போதெல்லாம் சீஸ், சாக்லேட் போன்றவையும் முக்கிய உணவுப் பட்டியலில் சேர்ந்துவிட்டன.  

உடைத்த பாதாம், முந்திரி வகைகளோடு துருவிய தேங்காயும் ஏலக்காய்த் தூளையும் கலந்து கொள்ளுங்கள். வெல்லப் பாகுக்குப் பதில் உருகிய டார்க் சாக்லேட் ஊற்றிப் பிசைந்தால் சாக்லேட் பூரணம் தயாராகி விடும். மைதா மாவில் உருவான சிறிய வட்டங்களுக்குள் இந்தப் பூரணத்தை வைத்து பாட்டியின் சுருக்குப் பைக்குள் கைகளால் தைத்துவிட வேண்டும். ஏழு நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால் சாக்லேட் மோமோக்கள் தயாராகி விடும். சுருக்குப் பை வேண்டாமென்றால் வயது முதிர்ந்து சுருக்கங்கள் விழுந்த பிறைநிலா வடிவத்தில் செய்யலாம். அல்லது தலை முழுவதும் நரைத்த பாட்டிப் பின்னியிருக்கும் வெள்ளை ஜடையைப் போலிருக்கலாம். அதெல்லாம் உங்கள் கைவண்ணம்.

இதையே சாக்லேட் கலவையில் முக்கியெடுத்து வண்ணவண்ண சாக்லேட்டுகளால் அலங்கரிப்பதும் உண்டு. நாடி நரம்பெல்லாம் சாக்லேட் ஊறிப் போனவர்களால் மட்டுமே இதை உண்டு ரசிக்க முடியும். இந்த நவீன மோமோக்களைச் செய்வது ஒன்றும் பிரமாதமல்ல. அதில் சேர்க்கப்படும் பண்டங்களைச் சம்பாரிக்கத்தான் நூதனத் திருட்டுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதையாவது மன்னிக்கலாம். பொரித்த மோமோக்கள் மீது மசாலா தயிர் கலவையைத் தேய்த்து, அதைக் கரி அடுப்பில் வேக வைக்கிறார்கள். பிறகு குண்டுமல்லியை ஊசியில் கோர்ப்பது போல,  நீண்ட மெல்லிய கம்பியில் ஒரு மோமோ, ஒரு குடைமிளகாய், மீண்டும் மோமோ, ஒரு வெங்காயத்துண்டு, மோமோ எனக் கோர்த்து, கடாயில் எண்ணெய் ஊற்றிப் பொரிக்கிறார்கள். இதை மீண்டும் கரியடுப்பில் காட்டினால் அந்தக்  கரிப்புகையும் சேர்ந்து தந்தூரி மோமோ தயாராகி விடுகிறது. 

இப்படி ஆரோக்கியமான மோமோக்களை விதவிதமாகக் கலப்படம் செய்து களங்கம் விளைவிப்பதும் நடைமுறையில் உள்ளது. கவனமாக மோமோவின் பூரணத்தில் மட்டும் திளைத்திருங்கள். சுவையும் சொர்க்கமும் பிறர் தர வாரா.


“கொழுகொழுவும் மொழுமொழுவும்” மீது ஒரு மறுமொழி
  1. Thiyagarajan p அவதார்
    Thiyagarajan p

    குருவிற்கு ஏற்ற சிஷ்யை..

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன