வலைப்பதிவுகள்

என் தோழியின் இடது பெருவிரலின் நுனி அவ்வப்போது மரத்துப் போவதைப் போல உணர்ந்தாள். விடுதியில் தங்கியிருந்ததால் தொலைபேசி வழியே பெற்றோர்கள் வீட்டு வைத்தியம் செய்யச் சொன்னார்கள். இதற்கெல்லாம் பிள்ளைகளை மருத்துவமனைக்கு அலைய வைக்க வேண்டாமென்பது பெற்றோர்களின் அக்கறை. தோழிகளாகிய நாங்கள் அவளைப் பார்த்துக்கொள்வோம் என்பதும் அவர்களுக்குக் கூடுதல் நம்பிக்கை.

விரலைக் கீழே தொங்கவிடாமல் தூக்கியபடியே வைத்திருக்க வேண்டும் என்றார்கள். தோழியும் எல்லா நேரமும் எங்களுக்கு ஆல் தி பெஸ்ட் காட்டியபடியே வலம் வந்தார்.

ஓரிரு நாள்களில் விரலில் எரிச்சல் ஏற்படத் தொடங்கியது. முடிந்தமட்டும் விரலை வெதுவெதுப்பான நீரில் வைத்திருக்கச் சொல்லி தொலைபேசியில் கட்டளை வந்தது. அவ்வப்போது சூடான ஒற்றடமும் கொடுக்கச் சொன்னார்கள். விடுதியில் யார் எப்போது தேநீர் அருந்தினாலும் அவளருகே அமர்ந்து அவளைக் கவனித்துக் கொண்டோம்.

நாளுக்குநாள் மாறும் இந்த விநோத அறிகுறிகளுக்குச் சளைக்காமல் விதவிதமாக வீட்டு வைத்தியங்களும் அனைவரது தொலைபேசிகளின் வழிக் குவியத் தொடங்கின. மஞ்சளையும் இஞ்சிச் சாற்றையும் பிழிந்து துணியில் நனைத்து விரலில் கட்டிவிடச் சொன்னார்கள். மாரியம்மன் கோயில் குங்குமம், மாதா கோயில் மந்திரிக்கப்பட்ட எண்ணெய் என விடுதியே மத நல்லிணக்க விழா பூண்டிருந்தது.

தோழியின் வலி குறைந்தபாடில்லை. நான்காவது நாள் ஒரு மினி போண்டா சைஸுக்கு விரல் வீங்கியிருந்தது. இந்த போண்டாவை லாலிபாப் ஆக்குவதற்கும் வைத்தியம் வந்து சேர்ந்தது. ஒரு எலுமிச்சை பழத்தில் ஓட்டை போட்டு போண்டா விரலை அதற்குள் நுழைந்துவிட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த மஞ்சள் லாலிபாப்பைக் கழற்றக் கூடாது.

இப்படியே விட்டால் அடுத்த நாள் முட்டை மந்திரித்து எங்கள் விடுதியிலிருந்து மூன்று தெரு தள்ளியிருந்த சுடுகாட்டில் பூஜை செய்யச் சொன்னாலும் சொல்வார்கள் என்கிற பயம் வந்தது. தோழியும் எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே சமாளித்துக் கொண்டிருப்பாள்? வீட்டுக்குச் சொல்லாமல் ரகசியமாக அவளும் நானும் மருத்துவமனைக்குச் செல்வது என்று முடிவெடுத்தோம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலை ஒன்பது மணிக்கே ரேவதி டாக்டர் வந்துவிடுவார். காத்திருக்கும் நோயாளிகளை மட்டும் பார்த்துவிட்டு பத்து மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார். தூங்கி எழுந்தவுடன் இருவரும் அவசரமாகக் கிளம்பினோம். ஏற்கெனவே பழக்கமிருந்ததால் கையைப் பார்த்ததும் டாக்டர் எங்களை முதலில் உள்ளே வரச்சொன்னார்.

‘எப்போ இருந்து வலிக்குது?’ என்று விரலை எலுமிச்சை பழத்திலிருந்து விடுவித்தபடியே கேட்டார் ரேவதி டாக்டர்.

‘ஒரு வாரமா’ என்று பாவமாகச் சொன்னார் தோழி.

‘அப்பவே கூட்டிட்டு வரக் கூடாதா?’ என்று என்னை முறைத்தார். நான் விடுதியில் நடந்த வைத்தியங்களைச் சொல்லச் சொல்ல, டாக்டர் அங்கிருந்த சிஸ்டரிடம் ஏதோ புரியாத ஒரு பெயரைச் சொன்னார். தலையாட்டிய சிஸ்டரும் ஒரு ட்ரே நிறைய சிறிய கத்தி, மருந்து, ஊசி, பஞ்சு ஆகியவற்றுடன் வந்து நின்றார்.

‘இதுவே லேட்டு. சீழ் விரல் முழுக்கப் பரவ விடமுடியாது. இப்பவே கிளீன் பண்ணனும். கொஞ்சம் வலி தாங்கிக்கணும், அப்பறம் வலியிருக்காது. முழுசா சரியாகிடும். ப்ரோசீஜர் பண்ணிடலாமா? ‘ என்று ரேவதி டாக்டர் கேட்டார். இருவரும் தலையசைத்தோம்.

‘ப்ரோசீஜர் முடிஞ்சதும் நீ பத்திரமா இவள கூட்டிட்டுப் போயிருவல்ல? ஆட்டோ புடிச்சு போங்க. அவள நடக்க வைக்காத. பாவம் வலியோடிருப்பா’ என்று என்னிடம் உறுதி வாங்கிக்கொண்டார். நான் வேகவேகமாகத் தலையாட்டினேன்.

கையுறை அணிந்துகொண்டு தோழியின் கைகளில் ஒரு ஊசி போட்டார் ரேவதி டாக்டர். ‘நீ வேணும்னா அந்தப் பக்கம் பாரும்மா. இல்ல கண்ண மூடிக்க. இரண்டு நிமிஷத்தில் முடிஞ்சுரும்’ என்று தோழிக்கு ஆறுதல் சொல்லியபடியே வீங்கிப் போயிருந்த விரலைக் கத்தியால் கிழித்தார். சிவப்பு நிறத்தில் ரத்தம் அவசர அவசரமாக வழிந்ததைப் பார்த்தேன். பிறகு ரத்தம் மஞ்சளானது. உற்றுப் பார்க்க முற்பட்டபோது எல்லாமே கருப்பு நிறமானது. எங்கோ சாய்ந்து மிதப்பது போலிருந்தது.

டாக்டருக்கு உதவி செய்துகொண்டிருந்த சிஸ்டர் எனக்கு உதவ வந்தார். என்னைத் தண்ணீர் குடிக்கவைத்து கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டுபோய் அடுத்த அறையில் படுக்க வைத்தார். அரை மணிநேர நல்ல உறக்கம். 

‘நீதான் உன் பிரெண்டக் கூட்டிட்டு வந்தியா? இப்படி பயப்படுற? காலைல சாப்பிடலையா?‘ என்று சிஸ்டர் கேட்பது காதில் விழுந்தது. நல்லவேளையாக ரேவதி டாக்டர் என்ன சொன்னார் என்பது காதில் விழவில்லை.

அவரே ஆட்டோ ஏற்பாடு செய்யச்சொல்லி என்னையும் விரலில் கட்டு போட்டிருந்த தோழியையும் விடுதிக்கு அனுப்பிவைத்தார். நான் தோழி மீது சாய்ந்தபடியே விடுதிக்குள் நுழைந்தேன். அவளது கைகளை பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். 


“எலுமிச்சை லாலிபாப்” அதற்கு 2 மறுமொழிகள்
  1. exuberantdec84a01e4 அவதார்
    exuberantdec84a01e4

    இப்படி இரத்தத்தை பார்த்து பயப்பட்ட நீங்கள் தான் இப்போது உலகெல்லாம் நடக்கும் போர்களையும், அது சார்ந்த கொடூரமான அரசியலையும் கட்டுறைகளாக எழுதி நூல்களாக வெளியிடுகிறீர்களா? இது கரப்பான் பூச்சிக்கே அச்சமடைந்த சேதுபதி ஐ.பி.எஸ் ஹீரோயின், தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட பள்ளியின் ஆசிரியரான காலத்தில் வீரமங்கையான காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது.

    Like

    1. வினுலா அவதார்

      மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா? :)

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன