வலைப்பதிவுகள்

தம்ளரின் கடைசியிலிருக்கும் ரோஸ் மில்க்கை யாரோ சத்தமாக உறிஞ்சுவது போலக் கேட்டது. நம்மைப் போலவே ரசனை உள்ளவர் யாரெனப் பார்க்க நானும் மகளும் வீட்டுக்கு வெளியே வந்தோம்.

வட்ட முகம். அளவெடுத்துச் செய்த மூக்கு. தொந்தி வயிறு. குச்சிக் கால்கள். கருப்பானாலும் கலையாக இருந்தது. இந்தக் கறுப்பு பின்னணியில் அதன் நீண்ட வாலின் அடிப்பகுதி மட்டும் அழகுச் சிவப்பு.

எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து யாரையோ கூப்பிடத்தான் அப்படி உறிஞ்சிக்கொண்டிருந்தது. கறுப்பழகி என்றாலும் அதுவே அதன் குரல். குயில், கிளி, மயில் போன்றவற்றின் குரல்களை அடையாளம் காணத்தெரிந்த எங்களுக்கு இது புதிதாக இருந்தது.

இவள் கூப்பிட்டதும் இன்னொரு கறுப்பழகியும் வந்து பக்கத்தில் அமர்ந்தாள். இருவருமாக புறணி பேசினார்கள். அது என்னவாக இருக்கும் என்று நானும் மகளும் கணித்தோம்.

யார் வீட்டு மொட்டை மாடியில் இன்று அரிசி காயப் போட்டிருப்பார்கள்? விரட்ட ஆளில்லாமல் இருந்தால் அங்கேயே மதிய உணவை முடித்து விடுவோமா? தெருவே அமைதியாக இருப்பதைப் பார்த்தால் ஓய்வு பெற்ற தம்பதியினர் வாழும் காலனி போல? நமது மற்ற நண்பர்களையும் இங்கு அழைத்து வரலாமலா?

நாங்கள் இவ்வாறு பேசத் தொடங்கியவுடன் அவர்கள் உறிஞ்சுவதை (பேசுவதை) நிறுத்திவிட்டு எங்களைக் கவனித்தார்கள். நாங்கள் புறணி பேசுகிறோம் என்பதை கறுப்பழகிகள் புரிந்துகொண்டார்கள். சட்டெனப் பறந்து சென்றார்கள்.

‘அம்மா, சூரியன் கூட இவ்வளவு சத்தமா நம்ம தலையில இருந்து தண்ணி உறிஞ்சாதில்ல?’ என்றாள் மகள்.

சூரியன் ஒரு பெரிய ஸ்ட்ரா போட்டு நம் தலையிலிருந்து நீரை உறிஞ்சிவிடும் என்று சிறு வயதில் அவளுக்குச் சொல்லியிருந்தேன். தலைக்கு எண்ணெய் தேய்க்கவும், தண்ணீர் குடிக்க வைக்கவும் சூரியனை உதவிக்கு அழைத்திருந்தேன். அதை இன்னமும் நம்புகிறது அந்தக் குழந்தை மனம்.


“புறணி பேசிய அழகிகள்” மீது ஒரு மறுமொழி
  1. exuberantdec84a01e4 அவதார்
    exuberantdec84a01e4

    சூரியன் கொடையளிக்கும் அளவற்ற வைட்டமின் டி யால் குறிப்பாக பெண்களின் எலும்புகளுக்கு கிடைக்கும் வலிமையை கற்றுக்கொடுக்காமல் அது உரிஞ்சும் தன்னீரை மட்டும் சொல்லி நம் அன்னதாதாவை வில்லனாக்கிவிட்டீர்கள். சிறப்பு மேடம்.

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன