வலைப்பதிவுகள்

அந்தக் குட்டி மீனை வாங்கி வந்தபோது அதன் பெயர் பிளாக் ஏஞ்சல் என்பதை நம்ப மறுத்தாள் மகள். பிளாக் ஃபிஷ் என்று வேண்டுமானால் இருக்கலாம், நிச்சயம் ஏஞ்சல் என்று பெயர் வைத்திருக்க மாட்டார்கள் என்றாள். அவள் படித்தும் பார்த்துமிருந்த கதைகளில் தேவதைகள் எப்போதும் அழகிய வெள்ளை நிறத்திலேயே இருந்தார்கள். மீறிப்போனால் சிறிது பிங்க் நிறமோ ப்ளூ நிறமோ அவர்களது ஃபிரில் வைத்த கவுனில் கலந்திருக்கலாம். கறுப்புக்கு வாய்ப்பே இல்லை.

சரி, அவளாகவே புரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம். மீன் தொட்டியில் குறுகுறுவென அது என்ன செய்கிறது எனப் பார்ப்பாள். அதுவும் பதிலுக்கு இவள் வந்து நின்றவுடன் அதிக குஷியாகி தொட்டிக்குள் வேகமாக நீந்திக்காட்டும்.

வாங்கும்போதே கடையில் எச்சரித்தார்கள். ஏஞ்சல் மீன் சீக்கிரம் பெரிதாகிவிடும். அதன் பின் மீன் தொட்டிக்குள் இருக்கும் சிறிய கப்பீஸ் மீன்களுக்கு ஆபத்தாகிவிடும் என்றார்கள். முதலில் வளரட்டும் பிறகு பார்க்கலாம் என்று இருவகை மீன்களையும் ஒரே தொட்டியில் வளர்த்தோம். அவர் சொன்னபடியே பிளாக் ஏஞ்சல் சீக்கிரம் வளர்ந்தது. ஆனால் மற்ற மீன்களுடன் விளையாடியதேத் தவிர ஆபத்து ஒன்றுமில்லை.

அதன் பருத்த உடலையும் கூரிய தலைப்பகுதியும், தூரிகையென விரிந்திருக்கும் வாலையும் சாமரம் போன்ற இருபுறத் துடுப்புகளால் கம்பீரமாகச் சுமந்து செல்லும் அழகு வீட்டில் அனைவரையும் வசீகரித்தது. அவளும் அதன் ரசிகையாகி இருந்தாள். ஆனால் எங்களிடம் சொல்வதில்லை. மீன் தொட்டிக்கு வெளியே இருந்து அவள் அதைத் தொடுவதும், அதற்குப் பதிலாக அதுவும் துள்ளித் துள்ளி மேலும் கீழுமாக அவள் கைகளையேப் பின் தொடர்வதுமாக இருவரும் ரகசியத் தொடர்பில் இருந்தார்கள்.

கடவுளிடமிருந்து தேவதைக்கு அழைப்பு வந்தது. யாருக்கு உதவ முடிவு செய்தாரோ, இந்தத் தேவதையின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. நீந்த முடியாமல் உணவையும் உண்ணாமலிருந்த ஏஞ்சல் மீனைப் பெரிய தொட்டியிலிருந்து சிறிய தொட்டிக்கு மாற்றி அதற்கு மருந்தும் உணவும் கொடுத்தோம். மகள் தொடும்போது மெதுவாக அசைந்தது.

மகளுக்கும் அதன் நிலைமை புரிந்தது. நாங்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அதோடு கூடப் பேசினாள். தினமும் நிறைய நேரம் அதோடு செலவழித்து ஆறுதல் கூறினாள். மற்ற தேவதைகளின் சாகசக் கதைகளைச் சொல்லி அதற்கு உற்சாகமூட்டினாள். விரைவில் குணமடைந்து விடும் என நிச்சயமாக நம்பினாள்.

கடவுளின் திட்டமோ வேறாக இருந்தது. ஏஞ்சல் மீனை அழைத்துக்கொண்டார். மாலை பள்ளியிலிருந்து வந்தவள் கூப்பிட்டும் எந்த அசைவும் இல்லை. அவளது முகம் தீவிரமாகித் தளர்ந்து, சில நொடிகளில் கண்கள் நிறைந்தது. அவளருகில் சென்றேன். அசையாமல் ஓரிடத்தில் இருந்த ஏஞ்சல் மீனின் தலைமீது கைவைத்துச் சொன்னாள், ‘நீ நிஜமாகவே பிளாக் ஏஞ்சல்தான். உன் சாகச நேரம் இது. வெற்றியுடன் திரும்பி வா. உனக்கான கிரீடத்துடன் காத்திருக்கிறேன்.’


Leave a Reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading