01 – ஏன், நான் பறக்கக் கூடாதா?
ஊர்ல உலகத்துல எத்தனையோ பேர் மும்பை போயிட்டு வர்றாங்க. உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?
எங்கள் குடும்பத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டு இப்படிக் கேட்கும் உறவினர்கள் பலர் உண்டு. எங்களுக்கும் மும்பைக்குமான உறவு அப்படி.
காலை எட்டரை மணிக்கு சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்பும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் செல்ல நாங்கள் புக் செய்திருந்தோம். சொந்த ஊர், வெளிநாடு என எங்குக் கிளம்பினாலும் கடைசி நேரம் வரை பேக்கிங் செய்வது எங்கள் குடும்ப பாரம்பரியம். அன்று வழக்கத்துக்கு மாறான நாள். முந்தைய நாள் இரவு பத்து மணிக்கெல்லாம் பேக்கிங் செய்து முடிந்திருந்தோம். அதுவே கண் பட்டிருக்கலாம்.
பத்தரை மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஓடிபியைத் தவிர வேறெந்த குறுஞ்செய்தியையும் கவனிக்கும் வழக்கம் இல்லாதவர் என் கணவர். வழக்கத்துக்கு மாறாக அன்று அந்த செய்தியைப் படித்தார். சத்தமாக எங்களை அழைத்தவுடனே நாங்கள் ஊகித்துவிட்டோம். எங்கள் விமானம் ரத்தானதை உறுதி செய்துகொண்டோம்.
சென்ற நவம்பர் மாதம் இண்டிகோ விமானங்கள் பல ரத்தானதால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அப்போது சம்பந்தமே இல்லாமல் ரத்து செய்யப்பட்ட ஒரேயொரு ஸ்பைஸ் ஜெட் விமானம் எங்களுடையது. ஊரில் எத்தனையோ பிரெண்ட்ஸ் இருந்தும் நமக்கு வாய்த்த அந்த ஒரேயொரு பிரெண்டைப் போல. நாங்கள் அதில் புக் செய்திருந்தோம் என்பதைத் தவிர ரத்து செய்யப்பட வேறொரு நியாமான காரணமும் இல்லை.
எங்கள் பயணத்தை கேன்செல் செய்தால் முழு பணத்தை திருப்பித் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். மும்பைக்குச் சென்றேயாக வேண்டியிருந்தால் அதற்கும் வழி சொன்னார்கள். அதிகமில்லை ஜென்டில்மேன், இரண்டு மணி நேரத்துக்குப் பதில் பன்னிரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டி வரும் என்றார்கள்.
காலை எட்டரை மணிக்குப்பதில் மதியம் இரண்டு மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் ஏறலாம். மூன்று மணி நேரத்தில் டெல்லியில் தரையிறங்கி, ஐந்தரை மணி நேரம் காத்திருந்து மீண்டும் மும்பைக்கு பறக்கலாம். இப்படிச் செய்தால் அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கு மும்பைச் சென்றடையலாம் என்றார்கள். யாரும் இதற்கு முன்வர மாட்டார்கள் என்பதே அவர்களது நம்பிக்கை.
பாவம் எங்கள் மும்பை பயண வரலாறு உங்களைப்போல அவர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.
எங்கள் முதல் பயணம் மும்பையில் நடந்த ஒரு குடும்ப விசேஷத்தில் கலந்துகொள்வதற்காக அமைந்தது. மாலை ஐந்தரை மணி நிகழ்ச்சிக்கு மதியம் இரண்டரை மணிக்கு நாங்கள் சென்னையிலிருந்து விமானத்தில் கிளம்ப புக் செய்திருந்தோம். கடைசி நேரத்தில் சென்று சேர்வதே எங்கள் குடும்ப பாரம்பரியம்.
மதியம் பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் வீட்டில் ரெடியாகிவிட்டோம். மும்பையில் தரையிறங்கியவுடன் நிகழ்ச்சிக்குச் செல்ல இங்கிருந்தே ஒரு டாக்ஸியை புக் செய்ய முடிவு செய்தோம். கடைசி நேர அவசரத்தைக் குறைப்போம் என்று எண்ணியதில்தான் கண்பட்டுவிட்டது.
மும்பை உறவினர் அளித்திருந்த டாக்ஸி டிரைவர் எங்கள் புக்கிங்கை ஏற்க மறுத்தார். அந்த நேரத்தில் அப்படி ஒரு விமானம் சென்னையிலிருந்து மும்பைக்கு வருவதில்லை. நான் பல வருடங்களாக விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநராக இருக்கிறேன். நீங்கள் மறுபடியும் டிக்கெட்டை சரிபாருங்கள் என்று உறுதியாகச் சொன்னார்.
சந்தேகம் வந்து டிக்கெட்டைப் பார்த்தபோது விமானம் கிளம்பும் நேரம் 2.30 மணி என்று அச்சிடப்பட்டிருந்தது. அன்று அதிகாலையே அந்த விமானம் கிளம்பி மும்பைக்குச் சென்று சேர்ந்திருந்தது. நாங்கள் மதியம் இரண்டரை மணி என்று நினைத்துக் கிளம்பியிருந்தோம். ரயில்வே டைமை விமானங்களும் பின்பற்றும் என்று யார் நினைத்தார்கள்? அசடு வழிய டாக்ஸி ஓட்டுநருக்கு நன்றி சொன்னோம்.
மும்பையிலிருந்த உறவுகளிடம் நடந்ததைச் சொன்னோம். பரபரப்பாக விசேஷத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோதும் ஒருவர் விடாமல் அனைவரும் எங்களை மெச்சினார்கள். பதிலுக்கு இங்கிருந்தே விசேஷத்துக்கு வாழ்த்துச் சொல்ல மட்டுமே எங்களால் முடிந்தது. நல்லவேளை விமான நிலையத்துக்குச் செல்லும் முன்பே விஷயம் தெரிந்ததை நினைத்து நிம்மதியடைந்தோம். அதற்கு மேல் வருத்தப்படவில்லை.
இந்தக் களேபரம் முடிந்து விசேஷத்துக்கு உடுத்தியிருந்த ஆடைகளை மாற்றலாம் என்றபோதே குழந்தைக்கு உண்மை புரிந்தது. மும்பைக்குச் செல்ல ஆவலாகத் தயாரானதால் தலையைத் தொங்கப்போட்டு நின்றது. இதற்கெல்லாம் வருத்தப்படுவது நமது குடும்ப மரபல்ல என்று சொல்லிக் கொடுத்தோம். அதே ஆடைகளுடன் ஃபீனிக்ஸ் மாலுக்குச் சென்று மும்பை சாட் உணவுகளுடன் எங்கள் மும்பை பயணத்தை நிறைவு செய்தோம்.
அடுத்த மும்பை விசேஷத்துக்கும் விமானத்திலேயே புக் செய்தோம். விமானத்தின் நேரத்தை குடும்பத்திலிருந்த ஐந்துபேர் மூன்றுமுறை சரிபார்த்தார்கள். அதனால் மட்டும் நாங்கள் மும்பை சென்றுவிட முடிந்ததா? இம்முறை நாங்கள் விமானத்தைத் தவறவிடவில்லை. விமானமே பறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பழியை ஏற்றுக்கொண்டதால் உறவினர்களின் மெச்சுதல்களிலிருந்து நாங்கள் தப்பித்தோம். விசேஷமும் நடக்கவில்லை.
சரி விமானத்துக்கும் எங்களுக்கும் கொடுத்துவைக்கவில்லையோ? கொரோனா முடிந்தவுடன் மும்பைக்கு ரயிலில் புக் செய்தோம். இந்திய ரயில்வே துறையே நம்ம பக்கம் என்று இறுமாப்புடன் இருந்தோம். எங்கள் அலுவலக பாஸ்கள் அதற்கும் மேலே என்று நிரூபித்தார்கள். அலுவலகத்தைவிட உறவினர்களிடம் அர்ச்சனை வாங்குவதே உத்தமம் என்று நாங்களே பயணத்தைக் கைவிட்டோம்.
எங்கள் மும்பை பயண வரலாற்றை முறியடிக்கவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு புக் செய்திருந்த ஸ்பைஸ் ஜெட் விமான டிக்கெட்டுகள் அவை. ரத்தானாலும் விட்டுவிட முடியாது. நாங்கள் மும்பை சென்றே தீருவோம் என்று வாக்குறுதி எடுத்தோம். அந்த பன்னிரண்டு மணிநேர பயணத்தைத் தேர்ந்தெடுத்து அன்றிரவே செக்-இன் செய்துவிட்டோம். விமானத்தில் ஏறினோமா?
(தொடரும்)

