வலைப்பதிவுகள்

02 – பயணம் ஒன்று, லட்டுகள் இரண்டு

விமானம் ரத்தானதற்கு நாங்கள் துளியும் கவலைப்படவில்லை. உறவினர்களிடம் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு உண்மையைச் சொல்லிவிடலாம். அது பிரச்னை இல்லை. அலுவலகத்திலும் பள்ளியிலும் அறிவித்திருந்த விடுப்புகளை என்ன செய்வது என்பதே குழப்பம்.

நல்லவேளை அந்த டெல்லி வாய்ப்பைப் பார்த்து குஷியானோம். மும்பை செல்ல பன்னிரண்டு மணிநேரம் ஆனால் என்ன? கூடுதலாக டெல்லிக்கும் செல்கிறோமே? கடவுள் கூட்டிக்கொடுக்கிறார் என்று நினைத்துக்கொண்டோம். ஐந்தரை மணி நேர டெல்லிக் காத்திருப்பில் குறைந்தது நான்கு மணி நேரமாவது சுற்றிப் பார்க்கலாம். அதை மனத்தில் கொண்டே செக்-இன் செய்திருந்தோம்.

கையோடு டெல்லி விமான நிலையத்திலிருந்து குறைந்த தூரத்தில் எந்தெந்த சுற்றுலாத் தலங்கள் உள்ளன, அவற்றின் பார்வையாளர் நேரம் போன்றவற்றை குறித்துக்கொண்டோம். மாலையில் டெல்லி செல்லும் நாங்கள் குதுப் மினார், செங்கோட்டை, இந்தியா கேட் போன்றவற்றை கேட்டிற்கு வெளியிலிருந்தாவது பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களைத் தேர்ந்தெடுத்தது என் குடும்பத்தார். என்னுடைய தேடலில் டெல்லியில் என்னைக் கவர்ந்தது சோர் பஜார். டெல்லியின் பெரிய ஷாப்பிங் ஏரியா, நமது சென்னையின் தி நகரைப்போல. டெல்லியின் அனைத்துப் பொருள்களும் ஒரே இடத்தில் அங்குக் கிடைக்கும். வேறெங்கும் அலையத் தேவையில்லை. விநாயகர் ஞானப்பழம் வாங்கிய அதே டெக்னிக் என்றேன் பெருமையாக.  

நான் சந்திரமுகியாக மாறி இதை விவரித்துக் கொண்டிருக்கையில் குடும்பம் மொத்தமும் என்னையேப் பார்ப்பதைக் கவனிக்கவில்லை. சொல்லி முடித்த பின்னரே அவர்கள் என்னை முறைத்துக்கொண்டிருந்தது புரிந்தது. ஒருவேளை எனக்கு அல்ஸைமர் நோய் வந்தால் நான் மறக்க வேண்டிய முதல் வார்த்தை ஷாப்பிங் என்ற வேண்டுதலை உடையவர்கள் அவர்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களையும் சந்திரமுகியாக மாற்றிப் பரவசமடையச் செய்தது அடுத்து நான் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.

சாப்பாடு. டெல்லியின் பிரத்யேகமான உணவு வகைகள் அனைத்தும் அங்குக் கிடைக்கும் என்பதே அந்த மந்திர வார்த்தை. ஷாப்பிங்குடன் இரவு உணவை அங்கேயே முடித்துவிடுவது என்று ஒரு மனதாக முடிவானது. நீங்களும் ஷாப்பிங் வர மறுக்கும் உங்கள் சொந்தங்களிடம் இந்த மந்திரத்தை உபயோகித்துப் பாருங்கள். நிச்சயம் பலன் தரும்.

எல்லாம் சுற்றிப் பார்த்து, சாப்பிட்டுவிட்டு மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர வேண்டும். மும்பை விமானத்தை பிடிப்பதற்குச் சரியான நேரத்தில் வந்து சேரும்படி திட்டத்தை வகுத்துக்கொண்டோம். வீட்டைவிட்டுக் கிளம்புவதில் மட்டுமே எங்களுக்கு நேர மேலாண்மை குறைவு. வெளியே சென்ற பின்பு திட்டமிட்டபடி நேரத்தைக் கடைப்பிடிப்பதை என் கணவர் கச்சிதமாக பார்த்துக்கொள்வார். எங்களை எல்லாம் கட்டியிழுத்துச் செல்வதில் தேர்ந்தவர். அவராவது பொறுப்புடன் இருக்க வேண்டாமா?

டெல்லி செல்வதற்குத் தகுந்த தயாரிப்புகளும் தேவையல்லவா? குளிருக்கு அணியும் ஜெர்கின், ஸ்வெட்டர்கள், சாக்ஸ் போன்றவற்றைத் தேடி எடுத்தோம். சென்னையில் அவைத் தேவைப்பட்டதில்லை. என் கணவரின் ஸ்வெட்டர் நாங்கள் தேனிலவுக்கு ஊட்டி சென்றபோது வாங்கியது. அளவு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அவர் என்னைப்போல பூரி ஆகியிருக்கவில்லை என்பதால் அணிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

குழந்தைகளுக்கு அவர்களது தாத்தா பாட்டி குளிருக்கு அணியும் உடைகளை எப்போதோ வாங்கித் தந்ததாக ஞாபகம். நாங்களாகக் கடைக்குச் சென்று வாங்கியது போன்ற ஞாபகமே இல்லை. சென்னை எல்லாம் ஒரு குளிரா என்று ஹேண்டில் செய்தவர்கள் நாங்கள். ஆனால் டில்லி அப்படி இல்லையே? குழந்தைகளுக்குக் குளிர் பிரதேசங்கள் எப்படி இருக்குமெனப் புரிய வைக்க நல்ல சந்தர்ப்பம் என்று இருப்பதை எடுத்துக்கொண்டோம்.

டெல்லியில் சுற்றிப் பார்ப்பதோடு சுவாசிக்கவும் வேண்டுமே? கொரோனா காலத் தீவிரவாதிகள் முகக்கவசத்தை தேடி எடுத்தோம். அதை அணிந்தால் மூச்சு முட்டும்தான். பரவாயில்லை, முட்டுவதற்காவது டெல்லியில் மூச்சு இருக்க வேண்டுமே.

விநாயகரின் முகமே யானையின் முகத்தைப் போலிருக்குமே? மகளும் அவளது முகத்துக்கு மேலே தலையில் அணியும் யானை கேப்பை எடுத்து வந்தாள். குளிருக்கு அணியும் கேப்பையும் எத்தனைப் படைப்பாற்றலுடன் செய்திருக்கிறார்கள்? சிறு வயதில் நமக்கு வாய்த்தது அந்த மங்கி கேப் ஒன்றுதான். அதையும் முகமூடிக் கொள்ளைக்காரர்கள் லீசுக்கு எடுத்துப் போட்டுக்கொள்வார்கள்.

எல்லாமாகச் சேர்ந்து டெல்லியில் நடமாடத் தேவைப்படும் பொருள்களை வைப்பதற்கென ஒரு தனிப்பை சேர்ந்துவிட்டது. சுற்றுலாவுக்குச் செல்லும் ஊர்களும் இடங்களும் சேரும்போது பைகளும் சேர்வது நியாயம்தானே? அவற்றை எல்லாம் காரில், விமான நிலையத்தில், என இடம் மாற்றி ஏற்றி இறக்கித் தூக்கிச் செல்வதை நினைத்து என் கணவருக்குத்தான் பாவம் மாஸ்க் அணியாமலே மூச்சு முட்டியது. என்ன செய்ய, குடும்பச் சுமைகளைத் தட்டிக் கழிக்கவா முடியும்?

ஒரு வழியாக டெல்லி பயணத்துக்கும் சேர்த்துத் தயாராகி விட்டோம். சொல்லப்போனால் மும்பை செல்வதைவிட டெல்லி செல்வதற்கே ஆர்வமாக இருந்தோம். விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் இன்னும் நீண்டிருந்தால் ஆக்ராவுக்குச் செல்லவும் திட்டமிட்டிருப்போம். பரவாயில்லை, அடுத்த பயணம் என்ன குழப்பம் இல்லாமலா அமைந்துவிடப் போகிறது. அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

டெல்லி விமான நிலையத்தில் இறங்கியவுடன் செய்ய வேண்டியவற்றை அட்டவணையிட்டுக் குறித்துக்கொண்டோம். சந்தேகம் என்றாலோ உதவிக்கோ அழைக்க மும்பையைப் போல அங்கு உறவினர்கள் யாரும் இல்லை அல்லவா? போலவே டெல்லியில் இருக்கும் நேரத்தையும் வீணடித்துவிடக் கூடாது. மும்பை விசேஷங்கள் எல்லாம் மறந்துபோக டெல்லி மட்டுமே எங்கள் மனங்களில் வியாபித்திருந்தது. கூகிள் காட்டிய படங்களோடு மனத்திற்குள்ளேயே டெல்லியைச் சுற்றிப் பார்த்தபடி நள்ளிரவு உறங்கச் சென்றோம்.

அடுத்த நாள் டெல்லி சென்றோமா?


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன