வலைப்பதிவுகள்

மும்பையிலும் ஒரு டி மாண்டி காலனி

மும்பையைத் தீப்பெட்டி நகரம் எனலாம். அங்கிருக்கும் வீடுகளும் ரயில்களுமே சாட்சி. அதன் காலி ரயில் பெட்டிகளை நான் சிறு வயதில் வீடுகள் என்றே நம்பியிருந்தேன். இப்போது என் மகளும் அப்படியே நினைத்தாள்.

வீட்டிலிருந்து அதிகாலை கிளம்பியவர்கள் மதியம் மும்பையைச் சென்றடைந்தோம். கழுதையின் இருபக்க முதுகிலும் வீங்கித் தொங்கும் பொதியைப்போல மக்கள் ரயில் பெட்டிகளின் நுழைவாயில்களில் தொங்கிச் சென்றார்கள். அந்தக் கூட்டத்துக்குள் ஏறி இறங்க அசாத்தியத் திறமையும் தைரியமும் அவசியம். மும்பையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமே அவை வாய்த்திருக்கும். இடம்பெயர்ந்து செல்பவர்கள் சாலையையேத் தேர்ந்தெடுப்பார்கள்.

கார் கண்ணாடியின் வழியே இவற்றைப் பார்த்தபடியே நாங்கள் பயணம் செய்தோம். சென்னையிலிருந்து மும்பைக்குப் பறந்து செல்ல இரண்டு மணிநேரம் ஆனது. மும்பை விமான நிலையத்திலிருந்து விசேஷம் நடக்கும் இடத்துக்குக் காரில் செல்லவும் அதே நேரம் ஆனது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் காஞ்சிபுரம் போன்று மும்பையில் இருந்த இடம் அது.

மண்டபத்திலிருந்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழையும் எங்களைக் கண்டதும் கட்டிப்பிடித்து வரவேற்றார்கள். முஸ்லீம் சகோதரர்களைப்போல இது எங்கள் குடும்பத்திலிருக்கும் மும்பை பெண்களின் வழக்கம். கட்டிப்பிடித்துக் கன்னத்தோடு கன்னம் வைப்பார்கள், ஆனால் முத்தம் கொடுக்க மாட்டார்கள். ஆண்கள் கைகளை மட்டும் குலுக்கிக் கொள்வார்கள். மகளுக்கு அது புதியதொரு விளையாட்டானது. சென்னை திரும்பியபின் பள்ளிக்குச் செல்லும்போதும் வந்த பின்னும் இப்படிக் கட்டிப்பிடித்து விளையாடுவாள். கேட்டால் மும்பை ஞாபகமாக நான் கற்றுக்கொண்டது என்பாள்.

எங்களை வரவேற்ற விசேஷ வீட்டார், கையோடு எங்களைச் சாப்பிட அழைத்துச் சென்றார்கள். அவர்களும் நாங்களும் மட்டுமே சாப்பிடுவது பாக்கியிருந்தது. உணவைப் பரிமாறியவர்கள் பாத்திரங்களை காலிசெய்வதில் மும்முரமானார்கள். நல்லவேளை சரியான நேரத்துக்குச் சென்றிருந்தோம். சாப்பிட்டு முடித்த பின்னர் போட்டோ எடுக்கலாம் என்றால், போட்டோக்காரரும் பேக் செய்து கிளம்பிவிட்டார். அலைபேசியில் தெளிவாக போட்டோ எடுத்துக்கொண்டோம். நாங்கள் அந்த விசேஷத்துக்குச் சென்றதற்கு அது ஒன்றே சாட்சி.  

அன்றிரவு உறவினர் ஒருவரின் எழுபத்தைந்தாவது பிறந்தநாள் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. அவரது பெயர் பஞ்சுமிட்டாய் பாட்டி. நிஜப்பெயர் மறந்துவிட்டது. மண்டபத்திலிருந்து கிளம்பி அங்கிருக்கும் மற்ற உறவினர்கள் இல்லங்களுக்குச் சென்று சந்தித்தோம்.

அவர்களுள் ஒருவரை முந்தைய நாளே அலைபேசியில் அழைத்து நாங்கள் வருவதைத் தெரிவித்திருந்தோம். கண்டிப்பாக வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். பின்னர் அலைபேசியைத் துண்டிக்க மறந்தவர் அருகிலிருந்த நண்பர்களிடம் நாங்கள் வருவதைப் பற்றிக்கூறி, அவருக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி அலைபேசியை நாங்கள் துண்டித்தாலும் அடுத்த நாள் நேரில் அவரைப் பார்த்தபோது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறு காரணங்கள் சொல்லிச் சமாளித்தோம். இரவு விருந்துக்குச் செல்கிறோம் அதனால் சாப்பாடு வேண்டாம் என்றோம். அவரது பிரார்த்தனையை நிறைவேற்றி விடைபெற்றோம்.

இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றபோது கேக் வெட்டி முடித்திருந்தார்கள். மதியத்தை விடத் தாமதமாகவில்லை என்று எங்களையே பாராட்டிக்கொண்டோம். விருந்துக்கு வந்தவர்கள் நாங்கள் அன்றிரவு தங்குவது பற்றிக் கேட்டார்கள். நைகானிலிருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னோம். இதுவரை நாங்கள் அங்குச் சென்றதில்லை.

நைகான் என்ற பெயரைச் சொன்னதும் கேட்ட ஒவ்வொருவரது முகமும் பேயறைந்தது போல மாறியது. கண்டிப்பாக அங்குதான் தங்க வேண்டுமா? இந்நேரத்திலா போக வேண்டும்? எப்படி செல்வீர்கள்? எனப் பல கேள்விகள் எழுந்தன. எப்போதும்போல ஊபரில் புக் செய்து கூகிள் அங்கிளின் துணையுடன் செல்கிறோம் என்று கூலாக சொன்னோம். அதற்கு ஒரு மர்மப் புன்னகையைப் பதிலளித்தார்கள்.

அப்படி என்னதான் பிரச்னை என்றோம். நாங்கள் நினைப்பதுபோல சுலபமாக நைகான் சென்றுவிட முடியாது. கூகிள் அங்கிள் அறியாத காட்டுப் பாதை அது. செல்லும் வழியும் சரியில்லை. இரவு நேரத்தில் தனியாக அங்குச் செல்வது நல்லதல்ல. இங்கேயே தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். நாங்கள் அதைக்  கேட்டிருந்தால் பிரச்னை இல்லை. தைரியமாக நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றோம். நீங்கள் உயிருடன் திரும்பினால் சந்திப்போம் என்பதுபோல அவர்களும் விடைபெற்றுச் சென்றார்கள்.

விருந்து முடிய நள்ளிரவு ஆனது. நாங்கள் நைகான் செல்ல ஊபர் புக் செய்தோம். வண்டி கிடைப்பதே அரிதாக இருந்தது. அரைமணி நேரம் கழித்து ஒரு டிரைவர் வந்தார். பெட்டிகளோடு எங்களை ஏற்றிக்கொண்டவர் நூறு மீட்டர் சென்றதும் வண்டியை நிறுத்தினார். இங்கேயே இறங்கிவிடுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடம் நைகான் என்று தெரியாமல் நான் ஒப்புக்கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அவருடைய ஊபரில் நாங்கள் செல்ல வேண்டியது மும்பை நகருக்குள் எனக் காட்டியது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

அடுத்தடுத்து நைகான் என்று நாங்கள் புக் செய்தாலும் வெவ்வேறு இடங்களையே ஊபரும் ஓலாவும் டிரைவர்களுக்குக் காட்டின. மெல்ல நைகான் மர்மம் எங்களை ஆட்கொண்டது. விருந்தினர்கள் புரிந்த மர்மப் புன்னகை வேறு ஞாபகம் வந்தது.

ஏறக்குறைய நான்கைந்து டிரைவர்களிடம் அலைபேசியில் பேசியபோதும் அதையேச் சொன்னார்கள். நாங்கள் நைகான் செல்ல வேண்டும் என்றதும் அலைபேசியைத் துண்டித்தார்கள். இருமடங்கு காசு தருவதாகச் சொல்லியும் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. எங்களை இறக்கிவிட்ட டிரைவர் எங்களுக்குத் துணையாக நின்று அவரும் புக் செய்ய முயற்சி செய்தார்.

நள்ளிரவில் நடு ரோட்டில் தூங்கி வழியும் குழந்தைகளுடனும் அவர்கள் உயரத்திலிருக்கும் பெட்டிகளுடனும் காத்து நின்றோம். நைகான் என்ன மும்பையின் டி மாண்டி காலனியா?

(தொடரும்)


2 responses to “பறக்கும் கனவுகள் – 04”
  1. Kishore Avatar
    Kishore

    Your narrative is very good. Waiting to read further and break the suspence.

    Kishore

Leave a Reply to வினுலாCancel reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading