ஐந்து பாக்கெட் தேங்காய் பன்கள், இரண்டு விதமான மிக்சர்கள், கொஞ்சமாக ஒரு கிலோ லட்டு ஆகிய நொறுக்குத் தீனிகளை அடுக்கி வைத்தார் தாத்தா.
‘என்னோட ரவுண்டு முறுக்கு’ எனத் தேடினான் பேரன்.
‘இருக்கு தங்கம். நான் மறப்பேனா?’ என்றபடி இடமில்லா பையில் இன்னொரு பொட்டலத்தையும் திணித்தார்.
‘குடிக்க தண்ணி பாட்டில் எடுத்தாச்சா?’ என்றார்.
‘ஆமாப்பா. தண்ணிக்குள்ள போய்ட்டு வந்தப்புறம் துவட்டிக்க துண்டும், ஈரத்தைப் போட பிளாஸ்டிக் கவரும் உள்ளே இருக்குப்பா.’ அப்பாவியாக பதிலளித்தாள் மகள்.
‘என்னது, நனைவீங்களா? அதுக்கு எல்லாம் அனுப்ப மாட்டேன். போனோமா, விளையாடினோமா, வந்தோமான்னு இருக்கணும்’ கண்டிப்பாகச் சொன்னார் தந்தை.
‘ப்ளாக் தண்டர் போறதே அதுக்குதானங்க?’ என நக்கலாகக் கேட்டார் மாப்பிள்ளை.
பரபரப்பு குறைந்து மெல்லிய குரலில், ‘இன்னிக்கு மழைன்னு நியூஸ்ல சொன்னாங்க. இன்னொரு நாள் பாத்துக்கலாமே?’
பாவமாகக் கேட்டார் பெண்ணைப் பெற்ற தகப்பன். மருமகனிடம் கடிந்து பேச முடியுமா? பாதுகாப்பைக் குறித்து கவலைப்படாமல் நிலைகொள்ளவும் இல்லை.
‘ரொம்ப ஆட விடமாட்டேன் மாமா. சும்மா பாத்துட்டு வந்துடறோம்’ எனச் சமாதானம் செய்தார் மருகன்.
மருமான் சொல்வது பொய் என்று அறிந்தும் வேறு வழியின்றி தலையை ஆட்டினார் மாமனார்.
‘மேலாப்புல ஈரம் பண்ணிட்டு வந்துடணும், பத்திரம் கண்ணுகளா’
கையசைத்து வழியனுப்பி வைத்தார் தாத்தா.

