வலைப்பதிவுகள்

இளைய தலைமுறை நண்பர்களுடன் சாகச பயணம் சென்றிருந்தேன். கற்களாலான படிக்கட்டுகளுடன் வயநாட்டின் எடக்கல் குகைகள் எங்களை வரவேற்றன.

சிறிது தூரத்துக்குப் பின் பாதையைக் காணவில்லை. இருபுறமும் வெவ்வேறு வடிவங்களில் இருந்த பாறைகளைப் பிடித்து நடந்தோம். பல இடங்களிலும் குனிந்து தலையை முட்டிக்கொள்ளாமல் கடக்க வேண்டியிருந்தது. பிறகு சிரம் தொட ஏதுமில்லை. மரத்தாலான ஏணிப்படிகளில் இருபக்கமும் பிடித்தபடி விறுவிறுவென ஏறிவிட்டேன்.

பின்னால் வந்த நண்பருக்கு மூச்சு வாங்குகிறதென்று நிற்கச் சொன்னார். தண்ணீர் கொடுக்கத் திரும்பினேன். தரையிலிருந்து எண்ணூறு மீட்டர் உயரத்தில் செங்குத்தாக நின்று கொண்டிருந்ததை உணர்ந்தேன். எனது கால் இடறியது.

‘விழுந்துராதீங்க வினுலா. வரப்போக இந்த ஒரு வழிதான். பின்னால இருநூறு பேர், மேல ஐம்பது பேர் இருக்காங்க. நம்ம விழுந்து கிழுந்து வழிய மறிக்க முடியாது’ என்றார்.

நான் மீண்டும் கீழே பார்த்தேன். கண்ணை மூடித் தலைகீழாகக் கீழேச் சென்றேன். எனது ஆறு வயது மகள் பொக்கைவாயுடன் சிரித்தாள். கணவரும் பெற்றோரும் மங்கலாக வந்து போனார்கள். காரியம் முடித்த தாத்தாவும் பாட்டியும் என்னை ஆனந்தமாக வெள்ளை புகை சூழ்ந்த இடத்துக்குள் வரவேற்றார்கள். எனக்குப் புரிந்துவிட்டது.

‘எம்புள்ளையை எப்படியாவது நல்லபடியா வளர்த்துடுங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும்’ எனக் கத்தினேன். மழைத்துளி முகத்தில் அறைந்ததாக உணர்ந்து வியப்படைந்தேன்.

‘உங்க வேலைய எல்லாம் நாங்க பாக்க முடியாது. எந்திரிச்சு நடங்க வினுலா’ என்ற சத்தம் கேட்டது.


One response to “உயரம்”
  1. Priyalatharamesh அவதார்
    Priyalatharamesh

    அப்படியெல்லாம் தப்பிக்க முடியுமா? இன்னும் நாங்கள் அறிய வேண்டிய உணவு வகைகள், உலக நாடுகள் உள்ளன. Mr வினுலாவை விட எங்களுக்கு நீங்கள் மிகவும் முக்கியம. அன்பின் ப்ரியலதாரமேஷ்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன