புனித வெள்ளியன்று உபவாசம் என்பதால் காலை சிற்றுண்டி செய்யவில்லை. சிறுவர்களுக்கு உபவாசம் கட்டாயமில்லை. மகளுக்கு சாப்பிட என்ன வேண்டுமெனக் கேட்டேன். இதுவே சரியான சமயம் என்று காத்திருந்தவள் கார்ன் ஃபிளேக்ஸில் ஹார்லிக்ஸ் ஊற்றித் தரச் சொன்னாள்.
எப்போதும் பாலுடன் சாப்பிடுவது அன்று தாத்தா பாட்டியின் இருப்பால் அவள் இஷ்டத்துக்கு மாறியிருந்தது. என் முகத்தில் தெரிந்த கடுப்பை எனது மாமியாரிடம் போட்டுக்கொடுத்தாள். கணவரின் குறும்பு தாங்காமல் அவரை பெல்ட்டால் வெளுத்ததைப் பற்றி முன்னொரு நாள் மாமனார் கூறியது ஞாபகம் வந்தது. இவளுக்கு என்னக் காத்திருக்கிறதோ என நினைத்தேன்.
குழந்தை வளர்ப்பைக் குறித்து அரைமணி நேரப் பிரசங்கம் வீட்டில் நடைபெற்றது. அன்று ஒரு நாளைக்குத் தரும்படி என்னிடம் கூறிவிட்டு பாட்டி செபத்துக்காக ஆலயம் சென்றார். ஆட்டோ சத்தம் மறைந்தவுடன் தாத்தா கிச்சனுக்குள் நுழைந்தார்.
‘பாப்பாவுக்கு கலக்கும்போது எனக்கும் அப்படியே ஒரு கிண்ணத்தில அதையே போட்டுக் குடுத்திடும்மா. உங்க அத்தை வந்து கேட்டா நான் டீ குடிச்சேன்னு மட்டும் சொல்லு.’ யாருக்கும் கேட்காதபடி சொல்லிவிட்டு நகர்ந்தார் என் மாமனார்.

