வெண்டைக்காய் நறுக்கும்போது சுஜிதாவின் கைகளில் காயமானது. ரத்தம் கசிய ஆரம்பிக்க கரங்களைத் தண்ணீரில் கழுவினாள். அழுத்தம் கொடுத்தால் மீண்டும் குருதி வழிய ஆரம்பித்தது.
‘அத்தை, சப்பாத்தி போட்டுட்டேன். இத வெட்டிக் புளிக்குழம்பு மட்டும் வைக்கணும். இந்தக் கைய வச்சுட்டு செய்ய முடியல. நீங்க பாத்துக்கறீங்களா?’ என இரவு சமையலை மாமியாரிடம் ஒப்படைத்தாள்.
அதே நேரம் அம்மா அலைபேசியில் கூப்பிட, தோள்பட்டையில் அதைப் படுக்க வைத்து, தலையை முட்டுக்கொடுத்து காதோடு அழுத்தியபடி பேச ஆரம்பித்தாள். அன்றைய அலுவலக, வீட்டு நிலவரங்களையும் உடல்நலம் குறித்தும் விசாரித்தாள். சமையலைப் பற்றி உரையாடும்போது தனக்கு நடந்ததைச் சொல்ல வேண்டியதாயிற்று. பதறிய பெற்றோர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். மாப்பிளை வீட்டாரிடமும் கவனித்துக்கொள்ளச் சொல்லி அழைப்பைத் துண்டித்தார்கள்.
‘நீ தனியா இருந்த வரைக்கும் சரி. கல்யாணம் ஆனதுக்கப்புறமும் வீட்ல நடக்கறத எல்லாம் அம்மாகிட்ட சொல்லணும்னு இல்ல. ஏதோ பேசினோமா விசாரிச்சோமான்னு இருக்கணும். தினமும் கூப்பிடணும்னு சட்டமில்ல’ என்று எங்கோ பார்த்தபடிச் சொன்னார் மாமனார்.
அப்போது அவரது கைபேசி ஒலித்தது. பார்த்ததும் முகம் மலர்ந்தவர், ‘சொல்லு கண்ணு நல்லா இருக்கிறியா? நேத்து முழங்கையில பட்ட சூட்டுக் காயம் பரவால்லியாம்மா? சூதானமா இருக்கணும். இன்னும் ரெண்டு நாள் சமைக்காத’ என்றபடி அறைக்குள் சென்றார். கூடவே மாமியாரும் சென்றார்.
இனி அவர்கள் வெளியே வரக் குறைந்தது அரை மணியாகும் என்பதால், ஸ்விக்கியில் பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்தாள் மருமகள்.

