வலைப்பதிவுகள்

ஃபார் ரெஜிஸ்ட்ரேஷன் என்ற நம்பர் ப்ளேட்டுடன் புது ஸ்கூட்டி வீடு வந்து சேர்ந்தது. அம்மாவை பின் சீட்டில் அமர வைத்து ஆலயத்துக்கு ஓட்டிச் சென்றாள் ரீனா. அம்மா ரோஸிக்கு மகளை நினைத்துப் பெருமையாக இருந்தது. பாதிரியாரிடம் ஆசீர் பெற மகன் ரெனிஷும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். மூவருமாக குடும்பத்தின் புது வரவை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

‘என் சைக்கிள்ள இருந்த சின்ன செபமாலையையே இதுக்கும் மாட்டிக்கிறேன் மா’ என்று சந்தோஷமான நேரத்தைச் சாக்காக வைத்து அனுமதி வாங்கினாள் மகள். அப்பா நினைவாக இருப்பது அது ஒன்றே.

அப்போது மௌனம் காத்த தாயார், அடுத்த நாள் காலை கோபத்தில் கத்தினார்.

‘இத்தனை வருஷம் வளர்த்தினது நான். அந்த ஆளு இப்போ உனக்கு முக்கியமாப் போயிட்டாரில்ல?’ என்று பொரிந்து தள்ளினார். தந்தை அவளுக்கு விட்டுச்சென்ற சைக்கிளை அவரிடமே திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னதால் வந்த கோபம்.

‘நமக்கு விடிவுகாலம் வந்திருச்சுன்னு வண்டி வாங்கிட்டோம். அப்பாவுக்கு இதாவது உதவியா இருக்கும்ல?’ என ஆதங்கப்பட்டாள் மகள்.

‘அவர் ஆட்டோவில போகட்டும் காசில்லன்னா பஸ்ல போகட்டும். இங்கிருந்து எதுவும் போகக் கூடாது.’ திட்டவட்டமாக தனது முடிவை சொன்னார் ரோசிம்மா. சைக்கிள் ஓட்டற வயசா இது? ஒண்ணுக்கிடக்க ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னாகறது? என்கிற தனது தவிப்பு வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார்.


One response to “சைக்கிள்”
  1. expertthoroughly95f314b436 Avatar
    expertthoroughly95f314b436

    மனதின் ஓரத்தில் ஒரு தவிர்க்க முடியாத தவிப்பு… அழகான பதிவு 👍

Leave a Reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading