ரஷ்யாவை நோக்கி அணுஆயுத ஏவுகணை ஒன்று ஏவப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே நிமிடத்துக்குள் ரஷ்ய செயற்கைக்கோள்கள் அதைக் கண்டுபிடித்து, மாஸ்கோவிலிருக்கும் கட்டுப்பாடு அறைக்குச் செய்தியனுப்பும். செய்தி சரிபார்க்கப்பட்டு ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பப்படும்.
மறுமுறை உறுதி செய்யப்பட்டு உடனே இது ரஷ்யாவின் ‘செகே’ எனப்படும் மூன்று அணுஆயுதப் பெட்டிகளைச் சென்றடையும். ரஷ்ய அதிபர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவப்படைத் தலைவர் ஆகிய மூவரிடம் இந்தப் பெட்டிகள் இருக்கும். ரஷ்ய ஏவுகணை கட்டுப்பாட்டுக் குழுவுக்கும் இது குறித்த எச்சரிக்கை சென்றுவிடும்.
அணுஆயுதப் பெட்டி என்பது கைக்கு அடக்கமான லேப்டாப் போன்றது. எதிர்த் தாக்குதலை ஏவும் ரகசிய அனுமதி குறியீட்டை ரஷ்ய அதிபர் இதில் பதிவு செய்துவிட்டால், கட்டளை ராணுவ தலைமையகத்துக்குச் செல்லும். அதிபரின் அனுமதி கிடைத்தவுடன், அவசரகாலத் திட்டப்படி அணுஆயுதத் தளங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். நீர்மூழ்கிகள், டிரக்குகள், குகைகள், ரயில்கள் என எங்கு வேண்டுமானாலும் இந்த ரகசியத் தளங்கள் அமைந்திருக்கும்.
இதற்குள் எதிரி ஏவுகணை ஏவப்பட்டு மூன்று நிமிடங்கள் ஆகியிருக்கும். அமெரிக்காவிலிருந்து ஏவப்பட்டிருந்தால் அணுஆயுதம் ரஷ்யாவை வந்தடையக் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் ஆகும்.
ரஷ்ய அதிபர் பிறநாட்டு அதிபர்களை உடனடியாகத் தொடர்புகொள்ளும் வசதியும் இந்தப் பெட்டியுடன் இணைந்திருக்கும். அதே நேரத்தில் மற்ற இரண்டு பெட்டிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மூவரும் ராணுவத்துடன் கலந்துபேசி, தரைத்தள ரேடார்கள் மூலமாகவும் எதிரி ஏவுகணைகளை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். மூவரில் இருவர் சம்மதித்தால் கட்டளை ஏற்றுக்கொள்ளப்படும். இந்நேரம் ரேடார்கள் கண்டறியும் தூரத்தில் அவை ரஷ்யாவுக்கு அருகே வந்திருக்கும்.
எதிரி நாடுகளின் மீது அணுஆயுதங்களை ஏவும் கட்டளையை ரத்து செய்வதானால் அதை இன்னும் ஓரிரு நிமிடங்களில் செய்தால் உண்டு. இல்லையெனில் ராணுவத் தலைமை ஒவ்வொரு அணுஆயுதத் தளத்துக்கும் குறியீடுகளை அனுப்பி, அவற்றைச் சரிபார்க்கும் வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
எட்டாவது நிமிடத்தில் அணுஆயுதங்களைக் கொண்ட ஏவுகணைகள் அவற்றின் பாதுகாப்புக் கவசத்திலிருந்து வெளியேறி அடுத்த இரண்டு நிமிடங்களில் எதிரியை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும். அதற்குள் ரஷ்யாவுக்குள் நுழைந்த அணுஆயுதத்தைத் தடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து பேரழிவு நிகழ்ந்திருக்கும். அணுக்குண்டு தயாரிக்கப்பட்ட எண்பது வருடங்களுக்குப் பிறகும் அவற்றை ஏவும் ஏவுகணைகளை முற்றிலுமாக தடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஒருவேளை ரஷ்ய அதிபரும், அணுஆயுதப் பெட்டி வைத்திருக்கும் மற்ற இருவரும் கட்டளையைப் பிறப்பிக்கும் முன்னரே கொல்லப்பட்டிருந்தால் என்னவாகும்? அல்லது கைது செய்யப்பட்டிருந்தால் ரஷ்யாவின் நிலை என்ன? ஜப்பானின் ஹிரோஷிமாவைப் போல ரஷ்யாவின் பகுதிகள் அணுஆயுதத்தால் அழிந்துவிடுமா?
ஆம். அழிவு நிச்சயம். ஆனால் ரஷ்யா மட்டுமல்ல, ரஷ்யாவின் அழிவுக்குக் காரணமான எதிரிகளும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள். அதுவும் ரஷ்யாவிடமிருக்கும் இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பேரழிவை ஏற்படுத்தும் அணுஆயுதங்களாலேயே அழிவார்கள். அதிபரோ, முக்கியத் தலைவர்களோ இல்லாமல் இது எப்படிச் சாத்தியமாகும்?
தன்னை அழிக்க நினைத்தவர்களை இறந்த பின்பும் கூண்டோடு அழிக்கும் திட்டத்துக்குப் பெயர்தான் ‘டெட் ஹேண்ட்’. இறந்து இறுகிய கைகளே உலகை அழிக்கப் போதுமானது என்று சோவியத் காலத்தில் பனிப்போரை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டது. இத்திட்டம் செயற்கை நுண்ணறிவுடன் நவீன தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு, இன்றும் தயார்நிலையில் இருப்பதை டிமிட்ரி மெட்வதேவ் அண்மையில் பதிவு செய்தார். ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும் முன்னாள் பிரதமருமான மூத்த அதிகாரி இவர். உண்மையைத்தான் சொல்லியிருப்பார்.
தன்னை இயக்க ஆளில்லாமல் எப்படி இந்த ‘டெட் ஹேண்ட்’ எனும் அணுஆயுதக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படும்? எதிரியின் அணுஆயுதத்தை ரஷ்ய செயற்கைக்கோள்கள் எப்படிக் கண்டிபிடித்தனவோ, அதேபோன்று வருடம் முழுக்க ஓய்வில்லாமல் இயங்கி வருபவை இதன் பதுங்குக் குழிகள். அணுஆயுதங்கள் ஏற்படுத்தக்கூடிய குறுகியகால நில அதிர்வுகளையும், திடீர் காற்றழுத்த மாற்றங்களையும் ரஷ்யா முழுவதும் பரவியுள்ள இதன் சென்சார்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. உலக நாடுகளின் ராணுவத் தொடர்புகளில் ஏற்படும் அசாதாரணப் போக்குவரத்தையும் இவை எச்சரிக்கையுடன் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
அணுஆயுதம் ரஷ்யாவைத் தாக்கிவிட்டது என்ற செய்தியை ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பியபின் இவை உத்தரவுக்குக் காத்திருக்கும். ராணுவத்தளபதி உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர் இந்த ‘டெட் ஹேண்ட்’ அமைப்பை அணைத்துவிட்டு, முதலில் பார்த்தபடி அதிபரோடு இணைந்து எதிர்த் தாக்குதலை நடத்துவார். ஒருவேளை பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகும் இவர் டெட் ஹேண்டைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால், அதுவே புரிந்துகொள்ளும். முடிவெடுக்கும் தலைவர்கள் இறந்து விட்டார்கள். இருப்பினும் பழி வாங்குவது நம் கடமை என்று தானாகப் பொறுப்பெடுத்துக்கொள்ளும்.
ரஷ்யாவின் அனைத்து அணுஆயுதத் தளங்களின் மேலும் ஒரு கட்டளை ராக்கெட் பறந்து செல்லும். பேரழிவினால் புகைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பிலும் இதன் ரேடியோ தொடர்புகள் துண்டிக்க முடியாத ஆற்றல் கொண்டவை. ராணுவ தலைமையகத்துக்குப் பதில், இவை எதிர்த் தாக்குதலுக்கான கட்டளையைப் பிறப்பிக்கும். பிறகு இவற்றை யாராலும் நிறுத்த முடியாது.
இதைச் செயல்படுத்த ரஷ்யாவின் நாற்பதுக்கும் மேற்பட்ட அணுஆயுதத் தளங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. மாஸ்கோ, சரோவ், கஜகஸ்தான் எனத்தொடங்கி இப்போது போலந்துக்கும் லிதுவேனியாவுக்கும் இடையிலிருக்கும் ரஷ்யப் பகுதியான கலினின்கிராத்திலும் இவை நிறுவப்பட்டுள்ளன. ஐரோப்பாவும், அமெரிக்காவும் இத்தளங்களின் முக்கிய இலக்குகள்.
ரஷ்யாவுக்குள் இந்த அமைப்பு ‘பெரி மீட்டர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் இயந்திரத் துப்பாக்கியைப்போல, ஒருமுறை இவை தூண்டப்பட்டால் ரஷ்யாவின் அணுஆயுதங்கள் தீர்ந்த பின்னரே இவை தாக்குதலை நிறுத்தும். முப்பதுக்கும் குறைவான நிமிடங்களில் முழு அமெரிக்காவையும் அழித்துவிட முடியும். தடுக்க வழியில்லை.
இப்படிப்பட்ட அணுஆயுதப் பெட்டிகள் ஒவ்வொரு நாட்டிடமும் உண்டு. இவை எப்போதும் அதிபர்களிடமே இருக்கும். அமெரிக்க, ரஷ்ய அதிபர்களின் அலாஸ்கா சந்திப்பிலும் இந்தப் பெட்டிகள் கலந்துகொண்டன. பெரும்பாலும் அவை அதிபர் ஒருவரின் ஒற்றைக் கட்டளையையே எதிர்நோக்கிக் காத்திருக்கும். ரஷ்யாவில் மூன்று பேரிடம் இதன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், தனித்தியங்கும் டெட் ஹேண்ட் அமைப்பு ரஷ்யாவைப் போல மற்றவர்களிடம் இல்லை.
இதன் விளைவுகள் மனித குலத்தையே அழிக்கக் கூடியவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. நவீன மின்வெளி(சைபர்) போர்க்களத்தில் ஹேக்கிங் செய்யப்பட்டு இந்த அமைப்புக்குத் தவறான எச்சரிக்கைக் கொடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. நல்லவேளையாக இதுவரை அசம்பாவிதம் ஏற்படவில்லை. அவ்வளவுதான்.
ஆனால் இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் இரண்டு வகைப்படும். மேலோட்டமாகப் பார்த்தால் பழிக்குப்பழி வாங்கும் கொடூர அமைப்பு. உற்று நோக்கினால், இது அணுஆயுதத் தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கையை மட்டுமே எடுக்கக் கூடியது. தானாகத் தாக்குதலை ஆரம்பிக்கும் தகுதியற்றது.
மற்றெந்த ஆயுதங்களையும் போல அணுஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவை மதிப்பிட முடியாது. அதன் உற்பத்தியைக் கூட பெருமளவு கட்டுப்படுத்த முடியவில்லை. வட கொரியாவே அணுஆயுதங்கள் வைத்திருக்கிறது. ஒருமுறை கைத்தவறி ஏவப்பட்டாலும் சரிசெய்ய முடியாத இழப்புகள் நிச்சயம். அதனால் அதன் உபயோகிப்பை மிக மிகத் தீவிரமாகத் தவிர்க்கவே இந்த டெட் ஹேண்ட் உதவி செய்கிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.
நாடுகளிடையே நடக்கும் போர்கள் திட்டமிட்டு நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளைப் போலாகிவிட்ட காலமிது. அதுபோல அணுஆயுதங்களையும் கையாளும் சூழலைத் தவிர்க்க இது போன்ற பயங்கரவாதங்களை அனுமதிக்கலாம். அணுஆயுதம் எடுத்தவனும் அதனாலேயே சாவான். துணைக்கு நாட்டு மக்களையும் சாகடிப்பான். அவ்வளவே.

