“அம்மா உங்களுக்கு சோஃபியா யாருன்னு தெரியுமா? ஒரே ஒரு க்ளூ தரேன். அது நாம என்ன சொன்னாலும் உடனே செஞ்சுரும்”
“எனக்குத் தெரியலியே பாப்பா.” (மைண்ட்வாய்ஸ் – ரொம்ப நாளா லீவ்ல போயிருந்த கம்ப்யூட்டர் மேம் வந்துட்டாங்களா? இனி நமக்கு தினமும் கிளாஸ் எடுப்பாளே).
“சோஃபியா, நம்மள மாதிரியே இருக்கற ஹுமனோய்ட் ரோபோ மா. சமைக்கறதுக்குக் கூட இப்பலாம் ரோபோ இருக்கு தெரியுமா?”
“ஓ சூப்பர் பாப்பா. நமக்கும் ஒண்ணு வாங்கிரலாமா?”
“வேண்டாம் மா”
“ஏம்மா? அம்மாக்கு எவ்ளோ உதவியா இருக்கும். நீ என்ன கேட்டாலும் உடனே செஞ்சு தந்துரும்ல?”
“செய்யும் மா. ஆனா எங்களுக்கு புடிச்ச மாதிரி அதுக்கு செய்யத் தெரியாது. நீங்க யூடூப் பாத்து செய்யும்போது அஞ்சு மிளகா போட சொன்னா, இரண்டு தான் போடுவீங்க. நாங்க எவ்ளோ காரம் சாப்பிடுவோம்னு உங்களுக்குத் தான தெரியும். ரோபோவுக்கு இதெல்லாம் தெரியுமா? ரோபோனால இன்னொன்னும் செய்ய முடியாது மா.”
“என்னமா அது?”
“நீங்க சமைக்கும் போது, என்னையும் பக்கத்தில உட்கார வச்சு, கருவேப்பில, உப்பு, இன்னும் நிறைய தூள் எல்லாம் என் கைல குடுத்து போடச்சொல்லி சமைக்க வைப்பீங்க இல்ல, அதெல்லாம் ரோபோ பண்ண முடியுமா? ரோபோ எல்லாம் அம்மா ஆக முடியாதும்மா.”
ஆராரிராரோ ராரோ ராரோ.

