வலைப்பதிவுகள்

மாசுபடாத மலையடிவாரம்

நைகான் மர்மம் எங்களுக்கு வியப்பாக இருந்தது. டிஜிட்டல் டெக்னாலஜி, ஏஐ என்கிறார்கள் ஆனால் சொல்லி வைத்தாற்போல எல்லா செயலிகளும் நைகானைப் புறக்கணித்தன. எங்களை விருந்துக்கு அழைத்திருந்த உறவினரை அலைபேசியில் அழைத்தோம். இன்னுமா நீங்க கிளம்பல என்ற அவர்களது மைண்ட் வாய்ஸ் கேட்டது. நைகான் மர்மத்தைச் சொன்னதும் பதற வேண்டாம் நாங்கள் நேரில் வருகிறோம் என்றார்கள். காருடன் வந்தவர்கள் கவலை வேண்டாம் இங்கேயே தங்கிவிட்டு காலையில் நைகான் செல்லலாம் என்றார்கள். நடு ரோட்டில் நடு ராத்திரியில் வேறென்ன செய்திருக்க முடியும்?

கடைசி முயற்சியாக ஊபரில் புக் செய்த ஒரு டிரைவரிடம் பேசினோம். ஒன்றுக்கு மூன்று பேர் அவரிடம் எங்களை நைகானில் இறக்கிவிட வேண்டும் என்றார்கள். அனைவரிடமும் அவர் சரி என்றே சொன்னார். எங்களுக்கு ஆச்சரியம். நேரில் வந்து ஒப்புக்கொள்கிறாரா பார்ப்போம் என்று காத்திருந்தோம். நேரிலும் சரி என்றார். எங்களை இறக்கிவிடச் சம்மதித்தார். கிளம்பலாமா, நேரமாகிறது என்றார். அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. எங்கள் உறவினரும், முன்னர் எங்களை இறக்கிவிட்ட டிரைவரும் அவரது காரில் எங்களை ஏற்றிவிட்ட பின்னரே அங்கிருந்து சென்றார்கள்.

காரில் ஏறியவுடன் நாங்கள் கேட்ட முதல் கேள்வி. ‘நீங்கள் எப்படி நைகான் செல்ல சம்மதித்தீர்கள்?’ நைகானைக் கடந்தே அவரது வீட்டுக்குச் செல்ல முடியும். வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்குச் செல்பவர் அவர். அதனாலேயே எங்களை ஏற்றிச்செல்ல சம்மதித்ததாகக் கூறினார். பழைய ஹிந்தி பாடல்கள் ரேடியோவில் தாலாட்ட, குழந்தைகள் தூங்கிப் போனார்கள். வெகுநாள் பழகிய நண்பரைப்போல டிரைவர் எங்களுடன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார்.

நாங்கள் சென்ற திசையில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஏன், போக்குவரத்தே தென்படவில்லை. ஆனால் எதிர் திசையில் நான்கைந்து கிலோமீட்டர் தூரத்துக்கு வண்டிகள் அப்படியே நின்றிருந்தன. பெரிய சரக்கு லாரிகளே அதிகமிருந்தன. அதன் பின்னரே நைகான் மர்மத்துக்கான காரணம் புரிந்தது.

நைகானைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து புறப்பட்ட லாரிகள் அவை. மும்பை நகருக்குள் சரக்கைக் கொண்டு செல்ல இரவில் மட்டுமே அனுமதிக்கிறார்கள். அதனாலேயே எதிர் திசை முழுவதும் போக்குவரத்து நெரிசல். எங்களை நைகானில் இறக்கிவிட்ட பிறகு மும்பைக்குள் திரும்ப அது ஒன்றே வழி. எந்த வண்டியும் அத்தனை லாரிகளைக் கடந்து விடிவதற்குள் மும்பை திரும்ப முடியாது.

ஏறக்குறைய நான்கிலிருந்து ஆறு மணிநேரம் எடுக்குமாம் அந்த போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்ல. அதனாலேயே எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் எந்த டிரைவரும் நைகான் வரச் சம்மதிப்பதில்லை. இதைத் தெரிந்துகொண்ட ஊபரும் ஓலாவும் இறங்குமிடத்தை மாற்றிக்காட்டி டிரைவர்களை ஏமாற்றப் பார்த்திருக்கிறது. இந்த ஏமாற்றும் தொடர் விளையாட்டில் ஏமாந்தது நாங்களே. 

இறுதியில் எங்களுக்கென்று அந்த டிரைவரரும் அவருக்கென்று நாங்களும் அந்த நள்ளிரவில் அமைந்தது கடவுள் ஏற்படுத்திய பந்தம். நைகானிலிருந்து எங்களுடன் தொடர்பிலிருந்த உறவினர் வழி சொல்ல, எங்களை பத்திரமாக அங்குக் கொண்டு சேர்த்தார் டிரைவர். நண்பராக விடைபெற்றுச் சென்றார். எங்களை ஏற்றிவிட்ட உறவினர்கள் நாங்கள் சென்று சேர்ந்ததை அறியும்வரை விழித்திருந்தார்கள். இரவு இரண்டு மணிக்கு அனைவரும் உறங்கச்சென்றோம். இன்னும் நாங்கள் எதிர்பாராதவை விடியலுக்காகக் காத்திருந்தன.

காலை எழுந்து உறவினர் குடும்பத்தைச் சந்தித்தோம். இரவு எங்களுக்கு வழி சொன்னவரைத் தவிர அனைவரும் உறங்கிப் போயிருந்தார்கள். அதன் பிறகு வீட்டைச் சுற்றிப் பார்த்த எங்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நாங்கள் இருப்பது மும்பை என்பதை நம்ப முடியவில்லை. இரவு நடந்ததில் மர்மமாகச் சொந்த ஊருக்கு வந்துவிட்டோமா என்று திகைத்துப் போயிருந்தோம். காரணம் வீட்டைச் சுற்றிலும் பெரிய தோட்டம். பார்த்தவுடனே குளிர்ச்சி தரும் பச்சை நிறத்தில் இருந்தது.

மரங்களும் செடிகளும் மலர்ந்து எங்களை வரவேற்றன. தீப்பெட்டியைப் போல இல்லாமல் தீப்பெட்டி குடோனைப்போல பெரிய வீடு. வீட்டுக்குள்ளேயே மரப்பலகை ஊஞ்சல் இருந்தது. பல அறைகளுடன் பெரிய ஹாலும் கிச்சனும் இருந்தன. குழந்தைகள் விளையாட வீட்டுக்கு முன்னர் போதிய இடம் இருந்தது. அந்த வீடு மட்டுமல்ல நைகான் கிராமத்திலிருந்த பெரும்பாலான வீடுகளும் அப்படியே இருந்தன.

தாமரை இலைகளுடன் வீட்டிலிருந்து ஒரு குளம் தெரிந்தது. அதை விட அழகானதொரு ஆறு இருக்கிறது. மலையிலிருந்து வரும் ஊற்றில் உருவானது. சாப்பிட்ட பின்னர் அங்குச் செல்லலாம் என்றார்கள். அப்போதுதான் அங்கிருந்த மலையைக் கவனித்தோம். இரவு எதுவும் தெரியவில்லை. அந்த மலையடிவாரத்தின் மாசுபடாத கிராமமாகச் செழித்திருந்தது நைகான்.

அங்கிருக்கும் மக்களுக்கு விவசாயம் இன்னும் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. தொழிற்சாலைகள் இப்போதுதான் மெதுவாக உருவாகிக் கொண்டிருந்தன. விவசாயிகளைத் திருடி தொழிலாளிகளை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருந்தன. இரவு வரும்போது பார்த்தப் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமான குற்றவாளிகள் இந்தத் தொழிற்சாலைகளே.

அப்போதும் இயற்கையும் விவசாயமும் மீதமிருந்தது. வீடுகளுக்குத் தேவையான சமையல் பொருள்கள் அவரவர் தோட்டங்களில் விளைந்தன. குறைந்தது இரண்டு கிணறுகளாவது ஒரு வீட்டில் இருந்தது. ஒன்று வீட்டுக்கு மற்றொன்று பாசனத்துக்கு. செங்கல் சூளைகள் ஆங்காங்கே இருந்தன. தேசிய அளவில் தற்சார்புக் கொள்கையை விவாதித்து என்ன பயன்? கிராமங்களில் இன்னும் உயிர்த்திருப்பதை முதலில் பாதுகாக்க வேண்டும்.

மும்பையில் இருக்கும் இப்படியொரு இடத்தை சினிமாக்காரர்கள் விட்டுவைப்பார்களா? அடிக்கடி அங்கு ஷூட்டிங் நடக்குமாம். அவர்களுக்குச் சாப்பாடு செய்து தரும் கேட்டரிங் அங்குத் தொழிலானது. ஆர்கானிக் தோட்டங்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் நியாய விலையில் சத்தான உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இயற்கையை அழிக்காமல் இவை அனைத்தும் நடைபெற கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் அந்த கிராமத்துக்குப் பாதுகாவலர்களாக விளங்கினார்கள்.

நைகானின் பாரம்பரிய காலை உணவு எங்களுக்காகக் காத்திருந்தது.

(தொடரும்)


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன