வலைப்பதிவுகள்

‘அரிசில மட்டும் தோசை சுடாதீங்கன்னு எத்தனை தடவச் சொல்றது? சிறுதானியத்தில எப்படிச் செய்யறதுன்னு வேணா அவளைக் கேளுங்க.’ நிமிராமல் அம்மாவைக் கடிந்து கொண்டான் கலையரசன்.

இப்ப என்னை எதுக்கு இழுக்கறீங்க எனப் பார்வையால் உணர்த்தினாள் மனைவி சுதா. நடப்பவை எதுவும் காதில் விழாமல் சின் சானோடு குழந்தைகள் உண்டார்கள். 

‘வர்றது இரண்டு நாளைக்கு. இதில உபதேசம் வேறயா?’ சாந்தாம்மாவின் கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படாது.

இரவு உணவு முடிந்ததும் பெட்டிகள் வீட்டுக்கு வெளியே தள்ளி வரப்பட்டன. சம்பிரதாய டாட்டாக்களுடன் பேரப் பிள்ளைகள் ஆட்டோவில் ஏறினார்கள். உடம்பப் பார்த்துக்குங்க அத்தை என்பதோடு மருமகள் விடைபெற்றாள்.

‘பத்திரமா இருங்க.’ மகன் சொன்னபோது வார்த்தைகளின்றி தலையசைத்தார் தாய்.  

‘நல்லபடியா வந்து சேர்ந்துட்டோம்’ என்று அலைபேசி அலாரமாகி எழுப்பியது.

‘நீங்க போனதுக்கப்பறம் நம்ம சந்திரா டாக்டர் பேசினாங்க. மூணு நேரமும் புழுங்கலத் திங்கறோமாம். கம்பு, சோளம், ராகின்னு சேர்த்தணுமாம்பா. நான் ஊற வச்சிட்டேன். நல்லதச் சீக்கிரம் ஆரம்பிங்க’ என்ற பதில் அவனுக்குக் கோபத்தையும் நிம்மதியையும் ஒன்றாக வரவழைத்தது.


Leave a Reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading