வலைப்பதிவுகள்

அசல் மிசல் பாவ்

பெரிய தட்டில் இரண்டு வாட்டிகள் வைக்கப்பட்டன. மும்பையில் இருக்கும்போது சிறிய கிண்ணங்களை வாட்டி என்றே சொல்ல வேண்டும். கிண்ணம் என்றும் சொல்லலாம் கட்டாயமல்ல. என்ன, நீங்கள் சொல்வது அவர்களுக்குப் புரியாது. அதற்கு மேல் உங்கள் விருப்பம். ஒரு வாட்டியில் நல்ல சிவப்பு நிறத்திலிருந்த குழம்பை ஊற்றினார்கள். எண்ணெய் மிதந்த சிவப்பு குழம்பின் மேலிருந்த பச்சை நிற கொத்துமல்லி இலைகள் தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஒன்றும் ஊகிக்க முடியவில்லை.

இன்னொரு வாட்டி நிறைய ஃபார்சனை நிறைத்தார்கள். நம்மூர் மிக்ஸர் போலிருந்தது. ஆனால் தூங்கியும் தின்றும் கொழுத்த பணக்கார வீட்டுச் செல்லப் பிராணியைப் போலிருந்தது. அதனுள் தடித்த மிக்ஸர் இருந்தது. இங்கு அவற்றை முறுக்கின் வகைகளுள் ஒன்றாக விற்பார்கள். தீபாவளிக்குச் சுடும் ஒல்லி முறுக்கை நீண்ட துண்டுகளாக்கி அதில் போட்டிருந்தார்கள். ரிப்பன் பக்கோடா, நிலக்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, பூண்டு, சேவ் எனப்படும் சின்ன மிக்ஸர் அனைத்தும் அந்த வாட்டியில் இருந்தன. தின்பண்டக் கடையின்  கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பெரும்பாலானவை சேர்ந்ததே ஃபார்சன் எனப்படுகிறது. பார்ப்பதற்கே முரட்டுத்தனமாக இருந்தது.

வாட்டிகளில் இவற்றை நிறைந்தவர்கள் தட்டில் நறுக்கிய வெங்காயத்தை வைத்தார்கள். பக்கத்திலேயே எலுமிச்சை துண்டும் வைக்கப்பட்டது. நீள வாக்கில் அறுக்கப்பட்ட மாங்காய் துண்டுகளும் பழக்கமிருந்தால் சாப்பிடுங்கள் என்று ஒரு பச்சை மிளகாயும் வைத்தார்கள். டீசரும் ட்ரைலரும் இவ்வளவு தடபுடலாக இருக்க, இன்னும் மெயின் பிச்சர் என்னவென்று தெரியவில்லையே என்று ஆவலுடன் இருந்தோம். எங்கள் இரு குடும்பங்களும் வட்டமாக அமர்ந்தோம். தட்டில் வைத்திருந்த அனைத்தும் தனித்தனி பெரிய வாட்டிகளில் எங்கள் நடுவில் வைக்கப்பட்டன. இன்னும் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். கூச்சப்படாமல் சாப்பிடுங்கள் என்றார்கள். அப்படி ஒன்று எங்களுக்கேது?

கரக் மொறுக்கென்ற சத்தத்துடன் பெரிய கத்தியால் பன்களை இரண்டாக அறுத்தார்கள். பார்ப்பதற்குப் பெரிய சைஸ் பாவ் போலவே தெரிந்த அது என்னவென்று கேட்டோம். அதன் பெயர் கடக் பாவ் என்றார்கள். அதுவும் பாவின் ஒரு வகையே ஆனால் கெட்டியாக இருப்பதால் கடக் பாவ் எனப் பெயர் பெற்றிருந்தது. நம்மூர் மிருதுவான பாவ் பாஜியைப் போல அதை அணுக முடியாது. கைகளால் அதைப் பிய்த்துவிட முடியாது. அதனாலேயே கத்தியில் அறுக்கிறோம் என்றார்கள். அதையும் தட்டில் வைத்தபின் நீங்கள் உண்பதற்கு மிசல் பாவ் தயார் என்றார்கள்.

எப்படி உண்பது என்பதையும் அவர்களே செய்து காட்டினார்கள். தட்டிலிருந்த எலுமிச்சையை வெங்காயத்தின் மீதும் குழம்பின் மீதும் பிழிய வேண்டும். வாட்டியில் வைத்திருந்த ஃபார்சனில் பாதியைக் குழம்பில் தூவ வேண்டும். பின்பு கடக் பாவை குழம்பு வாட்டியின் அடிப்பகுதி வரை உள்ளே விட்டு அரை நிமிடம் நனைக்க வேண்டும். மேலே தூவிய ஃபார்சனில் பெரும்பகுதியோடு வெளியே எடுத்து வாயில் போட வேண்டும். உடனே வெங்காயமும் மாங்காயும் வாய்க்குள் போக வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மென்று விழுங்குவதே பாக்கி. அவர்கள் செய்து காட்டியதை அப்படியே பின்பற்றினோம்.

வாயில் வைத்தவுடன் முதலில் தெரிந்தது காரம். குழம்பின் நிறத்தைப் பார்த்தாவது உஷாராகி இருந்திருக்கலாம். அவர்களை காப்பியடித்ததால் கண்களில் நீர் நிறைந்தது. ஏதுமறியாத குழந்தைகள் போல அவர்கள் கண்களை மூடி அதை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒன்றும் சொல்ல முடியாத சூழல்.

காரத்தைப் பொறுத்து மென்றால் புளிப்பு தெரிந்தது. அதையாவது பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் என்ன செய்தும் அந்தக் கடக் பாவைக் கடிக்க முடியவில்லை. குழம்பில் ஊறவைத்த நேரம் போதவில்லையா அல்லது பற்களுக்குப் பலம் போதவில்லையா என்பதும் குழப்பமாக இருந்தது. யாரிடம் என்னவென்று கேட்பது? அவர்களுக்கு இப்படி எந்தப் பிரச்னையும் இல்லையே.

காரமும் புளிப்பும் அடங்கிய பிறகு குழம்பில் இருந்த பச்சைப்பயறு தட்டுப்பட்டது. ஆறுதலாக அதோடுச் சேர்த்து கடக் பாவை வாய்க்குள்ளேயே ஊற வைத்துப் பிறகு விழுங்கினோம். பாவம் நாக்கு சொரசொரவென்று இருந்த பாவால் புண்ணாகி மேலும் எரிச்சலானது. அடுத்த முறை பாவை நனைக்கும்போது உஷாராக வெகுநேரம் குழம்பில் ஊற வைத்தோம். காரம் ஏறினாலும் சரி, கடிக்க முடியாத பாவை எத்தனை நேரம் வாயில் வைத்திருப்பது? முதல் முறைக்குப் பரவாயில்லை என்றாலும் கஷ்டப்பட்டே விழுங்க முடிந்தது. எங்களால் வெளியே சொல்ல முடியாததை மகள் போட்டு உடைத்தாள்.

‘அம்மா ரொம்ப காரம் மா. இதைக் கடிக்கவே முடியல’ என்றவள் அடுத்த வாய் வாங்கவே இல்லை. நல்லவேளையாக எங்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே தட்டில் மிசல் பாவை வைத்திருந்தோம். நன்கு ஊறவைத்து ஊட்டியதையும் அவளால் சாப்பிட முடியவில்லை. அப்போதும் குழந்தைக்கு அதைச் சாப்பிட்டு பழக்கமில்லை என்றபடி அவளுக்கு பிஸ்கட் சாப்பிடக் கொடுத்தார்கள். அவள் அதையே சந்தோஷமாகக் காலை உணவாக்கிக் கொண்டாள்.

பார்க்கப் பொறாமையாக இருந்தாலும் மரியாதையின் நிமித்தம் முதல் பாவோடு எங்கள் தட்டில் வைத்ததை வீணாக்காமல் காலி செய்தோம். மெனக்கெட்டு குழம்பில் கேரளத்தின் குடம்புளிச் சேர்த்து ஒவ்வொன்றையும் சிரத்தையுடன் தயார் செய்திருந்தார்கள். எங்களுக்குப் பழக்கமில்லை என்பதே நிதர்சனம். பல தம்ளர் தண்ணீருடன் வயிற்றுக்குள் மிசல் பாவ் மிதந்தது. 

இத்தனையையும் பொறுத்த எங்களால் சாப்பிட்டு முடிக்கும்போது அவர்கள் சொன்னதை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘எல்லாரும் மிசல் பாவுக்கு சாதாரண மென்மையான பாவைதான் கொடுப்பாங்க. நீங்க பாவ் பாஜில சாப்பிடுவீங்களே அந்த பாவ். நாங்கதான் எங்க ஊரோட உண்மையான சமையலை நீங்க ருசிக்கணும்னு கடக் பாவ் வாங்கினோம். இத கடையில சொல்லி வச்சு வாங்கினோம். லேசில கிடைக்கறதில்ல. எங்களுக்கும் இது ரொம்பவே பிடிக்கும். உங்க சாக்கில இன்னிக்கு நாங்க மிசல் பாவை ஒரு புடி புடிச்சிட்டோம்’ என்று பெருமையாகக் கூறினார்கள்.

முகத்தில் பரவிய ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் எங்களால் மூடிமறைக்க முடியவில்லை. கலவரத்துடன் அன்றைய காலை சிற்றுண்டி முடிந்தது.

(தொடரும்)

Subscribe to receive updates.


மறுமொழி இடவும்