ஒவ்வொரு நாணயமாக மேலே அடுக்கி, ‘வீடு நல்லாருக்கா’ என்றாள்.
பாட்டி மௌனமாகத் தலை அசைத்தாள்.
பம்பரத்துக்குப் பதில் ஒவ்வொன்றையும் சுற்றிவிட்டு விளையாடினாள். கை நிறைய அள்ளிய பின் கீழே போட்டாள். அவை தெறித்து விழும் சத்தத்தைக் கேட்டு கைதட்டிச் சிரித்தாள்.
அப்பாவின் கூடப் பிறந்தவர்கள் ஒருவரையொருவர் திட்டித் தீர்ப்பது எதுவும் அவளுக்குப் புரியவில்லை. பெரியப்பாவும் அத்தையும் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். கைகலப்பு ஆகாதிருக்க தந்தை அவர்களுக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.
சொத்துப் பத்திரத்தைப் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டியதோடு தனது பொறுப்பைத் துறந்திருந்தார் தாத்தா. பேத்திக்காக இன்னும் சில்லறைகளை வாங்கிவர அருகிலிருந்த கடைக்குச் சென்றிருந்தார்.
எப்போதும் அவளைத் தூக்கி வைக்கும் சித்தப்பா பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
‘பாப்பா வருவேன்னு எனக்குத் தெரியல. ஒண்ணுமே வாங்கிட்டு வரல. இந்தா பாப்பா இத வச்சு மிட்டாய் வாங்கிக்க’ என நூறு ரூபாய் தாளைக் கொடுத்தார்.
‘எனக்குக் காசுதான் வேணும். அதிலதான் விளையாட முடியும். இது வேணா’ என்றபடி அதைத் திருப்பிக் கொடுத்தவள் தூக்குமாறு கைகள் இரண்டையும் உயர்த்தினாள்.

