மனைவி என்று முடிவான பிறகான சந்திப்பில் தனக்குப் பிடித்த சாக்லேட்டைப் பரிசளித்தான். அங்கிருந்த அசைவ உணவகத்துக்குச் சென்றார்கள். அவன் சைவமும் அவள் அசைவமும் சாப்பிட்டார்கள். முட்டை உண்பதையும் நிறுத்தி எட்டு வருடங்கள் ஆனதாகச் சொன்னான். இருவரும் அன்று போலவே தொடர முடிவு செய்தார்கள்.
விடுதிக்குச் சென்றபின் அன்பளிப்பை வெகு நேரம் தொட்டுத் தடவினாள். பெட்டிக்குள் இருந்தது அவளுக்குப் பிடிக்காததே. ஆனாலும் கொடுத்திருந்தது அவராயிற்றே? பிறகே அதை நண்பர்களுக்குப் பிரித்து வழங்கினாள்.
முதல் முறைப் பேசியபோது வாரம் தவறாமல் சினிமாவுக்குச் செல்வதாக இவள் கூறியிருந்தாள். ஊரிலிருந்த புராதன கோயில்களை வார இறுதிகளில் ஒவ்வொன்றாகப் பார்வையிடுவது இவனது வழக்கம் என்றான். ஆடலும் பாடலும் ஒருவருக்கு பொழுதுபோக்கு என்றால் மற்றவருக்கு யோகாவும் தியானமும்.
எந்தவொரு விஷயத்திலும் விருப்பங்கள் ஒத்துப்போகவில்லை. திருமணத்துக்குச் சம்மதித்தார்கள். மற்றவர் விருப்பத்தில் தலையிடாமல் இருக்கும் பக்குவம் வளர்ந்தது. சினிமா பார்த்துக்கொண்டே அவர்கள் சாக்லேட் சாப்பிடும்போது திருமணத்துக்கு முன்பான சந்திப்புகள் நினைவுக்கு வந்தன. இரண்டையும் ரசிக்கப் பழகியிருந்தார்கள் அந்த இந்தியக் குடிமக்கள்.

