வலைப்பதிவுகள்

பதினைந்தாவது திருமண நாளை ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் கொண்டாடினார்கள் சரவணனும் கவிதாவும். ஏழு வயதிருக்கும் அந்த இரட்டைக் குடுமிதான் எல்லோரையும் விடச் சிறியவள். துர்கா என்ற பெயருடன் துடுக்கும் தைரியமும் கொண்டிருந்தாள். அங்கு வளரும் நூறு பாலர்களை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்த மதர் சுப்பீரியரிடமே அடம் பிடித்து இவர்களுடன் சேர்ந்து கைப்பிடித்து திருமண நாள் கேக் வெட்டினாள்.

மதிய விருந்தும் ஐஸ்கிரீமும் உண்டு முடித்தவுடன் போகலாம் என்று அவசரப்படுத்தினான் சரவணன்.

‘உங்ககிட்ட வேற என்ன கேட்டேன்? இன்னும் கொஞ்சம் நேரம் இவங்ககூட விளையாடிட்டுப் போகலாம். நீங்க வேணா போன் பார்த்திட்டிருங்க’ என்றாள் கவிதா.

வயதைக் காரணம்காட்டி பிள்ளைகளுக்கு முயற்சி செய்வதை நிறுத்தியிருந்தான். தத்தெடுக்கவும் அவசியமில்லை அண்ணன் வாரிசுகளே நமக்கும் போதும் என்று அவனே முடிவுகளை எடுத்திருந்தான். நல்ல நாளன்று அவளது ஆசையைத் தட்ட முடியாமல் அலைபேசியோடு ஓரமாக அமர்ந்துகொண்டான்.

ஒரு மணிநேரம் அங்கிருந்த மைதானத்தில் சிறுவர்களுடன் விளையாடிக் களைத்தாள் கவிதா. இனியும் சரவணன் பொறுத்திருக்க மாட்டான் என்பதால் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள். தற்செயலாகக் கேட்பது போல அங்கு சுவீகாரம் எடுக்கும் முறைகளை மதர் சுப்பீரியரிடம் விசாரித்தாள். ஆவணங்களில் தொடங்கி கணவன், மனைவி இருவரது கையெழுத்தும் அவசியம் என முடித்தார் கன்னியாஸ்திரி.

சட்டென வழிந்த கண்ணீர்த்துளியை மடைமாற்ற அங்கு நின்று கொண்டிருந்த துர்காவைப் பார்த்தாள். சிரித்தபடியே, ‘போயிட்டு வாங்கம்மா. நாங்க இங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்’ என்று வழியனுப்பினாள் அந்த இரட்டைக் குடுமி. 


Leave a Reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading