வலைப்பதிவுகள்

குடும்பத்துக்குப் புதிய உறுப்பினர் வரப்போவதை முதல் குழந்தையிடம் சொல்லும் தைரியம் இல்லை. எப்போதும் அவனுடனேயே நேரம் செலவழிக்க வேண்டும் என்பவன். அலைபேசியில் கூட அதிகம் பேச அனுமதிக்க மாட்டான். கதைகள் விளையாட்டுகளோடு நிறைந்திருந்தது எங்கள் உலகம்.

அவனுக்குப் போட்டியாக அதே உரிமையுடன் இன்னொரு ஜீவன் வரப்போவதை எப்படிக் கூறுவது என்ற தயக்கம். இதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியவன் அவனே என்று கண்டித்தார் மருத்துவர்.

ஐந்தாம் மாத ஸ்கேனுக்கு கூட்டிச்சென்றோம். சிசு திரும்பிப் படுத்திருக்கிறது என சிறிது நேரம் நடக்கச் சொன்னார்கள். கைப்பிடித்து உலாத்தினோம். ஒரு தம்பியோ தங்கையோ என் வயிற்றுக்குள் காத்திருப்பதை மெல்லக் கூறினேன். சந்தேகமாகத் தடவிப் பார்த்தவன், ‘நிஜமாவாம்மா?’ எனக் கேட்டான்.

மறுபடி உள்ளே அழைக்க, இம்முறை ஸ்கேன் திரையை உற்றுப் பார்த்தான். தலை, கை, கால் போன்ற உறுப்புகளைக் காட்டிக் கொடுத்தார்கள். தோராயமாகத் தெரிந்தன. சிறுவனை திரைக்கு அருகில் நிற்கவைத்துக் காட்டினார்கள். உள்ளிருந்த பிஞ்சுக் கை மேலே தூக்கியது.

‘குட்டிப் பாப்பா எனக்கு மட்டும் ஹாய் சொல்லுது’ என்று மருத்துவமனை முழுவதும் கேட்குமாறு கத்திக்கொண்டே ஓடினான். இந்த சந்தோஷத்தைத் தள்ளிப்போட்டது தவறு எனப் புரிந்தது.


One response to “ஹாய்”
  1. expertthoroughly95f314b436 Avatar
    expertthoroughly95f314b436

    அழகான😍💓 பதிவு.

Leave a Reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading