காலையும் மாலையும் வீடு ஆராவமுடன் இருக்கும். குழந்தைகளின் கூச்சல், அம்மா நித்யாவின் விரட்டுதல் என எந்நேரமும் பரபரப்புடன் இயங்கும். ஒவ்வொருவருக்கும் மற்றவரிடம் கூற எப்படியும் நூறு விஷயங்கள் உண்டு. அனைத்தையும் பகிர்ந்துகொள்ளப் பழகியிருந்தார்கள்.
அன்றிரவு உணவுக்கு நித்யாவும் கணவர் மாறனுமாகச் சேர்ந்து சப்பாத்தியும் குருமாவும் சமைத்தார்கள். வெகு நேரம் நிற்பது அவளுக்குச் சிரமம் என்றாலும் வாரம் இருமுறையாவது செய்து விடுவாள். அவனுக்குப் பிடிக்கும் என்ற காரணமே போதுமானது. ஒன்றாகச் சாப்பிட்டு முடித்துப் பிள்ளைகளைத் தூங்க வைத்தார்கள்.
ஊரடங்கியது போன்றதொரு அமைதி. கௌளிச்சொல் மட்டுமே கேட்டது. அது அவர்களுக்கு மட்டுமேயான வேளை என்பதை உணர்த்தும் ஒலி அது. நித்யா நாள் முழுவதும் நடந்தவற்றை ஒன்று விடாமல் மாறனிடம் சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தாள். இடையே சில கேள்விகள் கேட்டாள். பதிலுக்குக் காத்திராமல் அவளே விடையளித்தாள். அந்த நீண்ட உரையாடல் முழுக்க மாறன் அவளது பாதங்களை அமுக்கி விட்டபடியே, தலையாட்டிச் சிறுநகையுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

