‘இப்ப எதுக்கும்மா உங்க நகையை எல்லாம் பிரிச்சுக் குடுக்கறீங்க?’ பெற்றவளைத் தடுக்க முடியாமல் ஆதங்கத்துடன் கேட்டாள் மகள்.
‘நான் நல்லா இருக்கும்போதே இத செஞ்சு முடிக்கணும்னுதான். படுத்துட்டேனா நினைச்சபடி சரி பாகமா செய்ய முடியுமான்னு தெரியல’ என்று பதிலளித்தார் கமலம்.
‘இரண்டு அண்ணன்களும் நானும் சொத்துபத்தோட நல்லாதானே இருக்கோம்? என்ன அவசரம்?’ மீண்டும் தடுத்தாள் செல்வி.
‘தாயோட தங்கம் பொண்ணுக்குதான்னு சொல்வாங்க. எங்களுக்கு எதுக்கு மாமி பங்கு பிரிக்கறீங்க?’ என மூத்த மருமகளும் மாமியாரை நிறுத்தப் பார்த்தாள்.
‘எனக்கு மொத்தம் மூணு குழந்தைங்க. அதில நான் பேதம் பாக்க மாட்டேன். என்னுடைய சாவுச் செலவில ஒரு பங்கை மகளும் குடுப்பா. என் சொத்தும் மூணாத்தான் பிரியும். அன்னிக்கே என்னப் பெத்தவங்க இப்படி செஞ்சிருந்தா, இன்னிக்கு எங்கூடப் பிறந்தவன் குடும்பத்தோட வந்து நம்ம வீட்ல நடக்கற எல்லா காரியத்தையும் முன்னாடி நின்னு நடத்தியிருப்பாங்க. பொன்னோட மதிப்பு எப்பவும் குறையப் போறதில்லை’ என்றார்.

